அறிவியல்ஸ்கோப் - 19: பிரியமானவளே என்னை மறந்துவிடாதே!

அறிவியல்ஸ்கோப் - 19: பிரியமானவளே என்னை மறந்துவிடாதே!
Updated on
2 min read

விஞ்ஞானி அந்தோனி லோரன் லவாய்சியர் பன்முகத்திறன் படைத்தவர். அவர் வேதியியலின் தந்தை என ஒரு பக்கம் பாராட்டப்பட்டாலும் மறுபக்கம் உயிரியல், புவியியல், பொருளாதாரம் போன்ற துறைகளிலும் கவனம் செலுத்தினார்.

வசதியான குடும்பத்தில் பிறந்த இவருக்கு தாய்வழிச் சொத்து தனது ஐந்தாவது வயதிலேயே தாயின் இறப்புக்குப் பின் வந்து சேர்ந்தது. 13 வயதில் இவருக்கு மணமுடிக்கப்பட்டதால் இவரது மனைவி மேரிஆனி பவுல்ஸ் மூலமாகவும் இவரது பொருளாதார பலம் கூடியது. அன்றைய வழக்கப்படிகூட இந்த இளவயது திருமணம் தவறு என்றாலும் எப்படியோ நடந்துவிட்டது.

ஆய்வுக்கு ஆதரவு தந்த தாரம்: அதேநேரம் அவருக்கு மனைவியாக வாய்த்த மேரி ஆனி பவுளி ஆங்கிலம், லத்தீன் உள்ளிட்ட மொழிகளை கற்றுத் தேர்ந்து பன்மொழிப்புலவராக வளர்ந்தார். எனவே லவாய்சியருக்கு பன்மொழிகளில் வெளியாகும் கட்டுரைகளை வாசித்துக்காட்டி உதவினார். லவாய்சியரின் ஆராய்ச்சிகள் நூலாக்கம் பெறவும் மேரி ஆனி பவுல்சின் ஆற்றிய உழைப்பு அலாதியானது.

லவாய்சியர் அந்நாளின் தலைசிறந்த புவியியலாளர் ஜீன் எடீன் குட்டார்டு (Jean Etienne Guettard) உடன் இணைந்துவடக்கு பிரான்சிலிருந்த சில பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் சென்றார். இந்த பயணத்தின் முடிவில் மூன்று முக்கிய ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டார். ஜிப்சத்தின்வேதியியல் பண்பு, பாரிஸ் நகரிலிருந்த சாலை விளக்குகளை மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் தண்ணீரில் உள்ள தாது உப்புகள் (Mineral water) குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதனால் ராயல் அகாடமியின் உறுப்பினரானார்.

எப்போதும் ஆராய்ச்சியிலேயே ஈடுபட்டிருந்த மேலும் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். நெருப்பு எரிவதற்கு காற்றில் உள்ள ஆக்சிஜன்தான் காரணம் என்று கண்டறிந்தார். ஆக்சிஜனுக்கு பெயர் சூட்டியவரும் இவரே. அன்றைய பிரெஞ்சு அரசு இவரை வெடிமருந்துகள், துப்பாக்கிகள் தொடர்புடைய நிறுவனங்களிலும் பங்களிப்பு செய்யும்படிச் சொன்னது. அதையும் ஏற்று செய்தார்.

முதல் வேதியியல் நூல்: மனித உடலுக்குள் நடைபெறும் மெதுவான எரிதல் மூலம்தான் மனிதர்களுக்கு சக்தி கிடைக்கிறது என்ற உண்மையைஅங்கு பணிபுரிந்தபோது எடுத்துரைத்தார். அவருடைய காலம்வரை வேதியியலில் ஆய்வு செய்து சரியென கண்டுபிடிக்கப்பட்ட அனைத்தையும் தொகுத்து வேதியியலுக்கான முதல் நூலை அளித்த பெருமையும் இவரைச் சாரும். இதுமட்டுமல்லாது பல்வேறு பொருட்களுக்கான பொதுவான வேதியியல் பெயரையும் தொகுத்து வெளியிட்டார். பிரெஞ்சு புரட்சி உச்சத்தில் இருந்தபோது அன்றைய அரசின் பிரதிநிதிகள் பலரும் பயந்து நாட்டைவிட்டு ஓடினர்.

ஆனால், லவாய்சியர் தனது அறிவியல் அகாடமியும் அதனைச் சேர்ந்தவர்களும் காக்கப்பட வேண்டுமென தொடர்ந்து பேசியும் எழுதியும் வந்தார். ஆனால், இவருக்கு எதிரானவர்கள் பலரும் இவரை விரும்பவில்லை. ஒருமுறை மராட் என்பவர் எழுதிய அறிவியல் கட்டுரையை விமர்சித்து லவாய்சியர் தனது கருத்தை வெளியிட்டார். இது “தற்பெருமையின் வெளிப்பாடு” என்ற தொனியில் அது வெளிப்பட்டது. இதனால் மராட்டின் கோபத்திற்கு ஆளானார்.

அதிலும் மராத் அந்த பத்திரிக்கையின் ஆசிரியரான பிறகு நிலைமை மேலும் பாதகமானது. லவாய்சியர் அயல்நாடுகளோடு சேர்ந்து கொண்டு பிரான்ஸ் நாட்டுக்கெதிராக சதி செய்கிறார் என்று குற்றம்சாட்டி அவர் பணியாற்றி வந்த நிறுவனத்தை தடைசெய்து மூடும்படி தீர்ப்பு எழுதும்படி தூண்டிவிட்டார். இதன் காரணமாக இவரது நிறுவனம் மூடப்பட்டு லவாய்சியரும் கைது செய்யப்பட்டார். பின்னர் வழக்கு நடந்தது.

“பிரியமானவளே, உன்னை நன்கு கவனித்துக் கொள், என்னுடைய பணிகளை நான் முடித்துவிட்டேன், மறந்துவிடாதே, அதற்காக கடவுளுக்கு நன்றி” என்று தனது மனைவிக்கு கடைசியாக கடிதம் எழுதிய லவாய்சியர் கொடும் கிலட்டின் இயந்திரத்தால் தலை துண்டிக்கப்பட்டுக் காலமானார். - கட்டுரையாளர்: பள்ளி தலைமையாசிரியர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தொடர்புக்கு: thulirmadhavan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in