

ஒரு வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறது. அவர் ஒரு விஞ்ஞானி. அவருக்கு கொடுமையான வகையில் இறப்பை அளிக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. தான் செய்து கொண்டிருக்கும் ஆராய்ச்சிகளை முடிக்கும்வரை தனது தண்டனையை நிறுத்திவைக்குமாறு கோருகிறார்.
நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. இந்த நாட்டிற்கு விஞ்ஞானிகள் அவசியமில்லை என்று நீதிபதி பதிலளித்தார். ஏற்கெனவே குற்றம்சாட்டப்பட்ட 27 குற்றவாளிகளோடு இவரும் மரணமெய்துகிறார். இன்றைக்கு வேதியியலின் தந்தை எனப் போற்றப்படும் விஞ்ஞானி ஆந்தோனி லோரன் லவாய்சியருக்கு (1743 - 1794) ஏற்பட்ட கொடுமைதான் இது.
பிரெஞ்சு புரட்சிக்குப் பின்னர் ஏற்பட்ட புதிய அரசு பழைய அரசுக்கு ஆதரவாயிருந்த பலரையும் சரியான விசாரணை இன்றி தண்டித்தது. அப்போதெல்லாம் குற்றவாளியாக கருதப்பட்டவரின் தலையைத்துண்டிக்க கிலட்டின் என்ற இயந்திரம்பயன்படுத்தப்பட்டது. அந்த கிலட்டின்இயந்திரத்தால்தான் இந்த அருமையானவிஞ்ஞானியின் தலையும் துண்டிக்கப்பட்டது. அப்போது கணிதமேதை ஜோசப் லெகரான் , “நீங்கள் ஒரு நொடியில் இந்தவிஞ்ஞானியின் தலையைக் கொய்துவிட்டீர்கள்.
ஒரு நூற்றாண்டு நீங்கள் செலவழித்தாலும் இவர் போன்ற விஞ்ஞானியை உங்களால் உருவாக்க இயலாது” என்று வேதனைப்பட்டாராம். இறந்த சில காலம் கழித்து நாங்கள் தவறாக தண்டித்து விட்டோம் என லவாய்சியரின் மனைவியிடம் மன்னிப்புக் கேட்டு அவரிடம் பறிமுதல் செய்த பொருட்களைத் திருப்பி அளித்ததாம் அன்றைய பிரெஞ்சு அரசு. என்ன பயன் வெறும் 51 வயதில் கொல்லப்பட்டிருக்க வேண்டியவரா அவர்?
தந்தையின் வற்புறுத்தல்: பிரான்சின் தலைநகர் பாரிசில் பிறந்த லவாய்சியர் 5 வயதிலேயே தாயை இழந்தார். இருந்தும் விடாமுயற்சியோடு அறிவியலின் அனைத்துப் பிரிவுகளிலும் முதன்மையான மாணவராக விளங்கினார். வேதியியல், உயிரியல், கணிதம், வானவியல் என அனைத்துப் பாடங்களையும் ஆர்வமாகப் பயின்றார்.
பின்னாளில் பலவிதமான ஆராய்ச்சிகளுக்கும் இது உதவிகரமாக இருந்தது. ஆசிரியர்கள் இவரது வானவியல் ஆர்வத்தைப் பார்த்து வானவியலில் உயர்கல்வி பயிலுமாறு அறிவுரை கூறினர். ஆனால், வழக்கறிஞரான இவரது தந்தையார் இவரையும் சட்டம் பயில வற்புறுத்தி பயில வைத்தார்.
குடும்பத்தினர் விருப்பப்படி சட்டம் பயின்றாலும் இவருக்கு அறிவியலில் நாட்டம் குறைந்தபாடில்லை. அனைத்தையும் ஈடுசெய்து கொண்டு பிரான்ஸ் அறிவியல் கழகத்தின் உறுப்பினரானார். அங்கு வேதியியல் துறைசார் ஆய்வுகள் பலவற்றையும் மேற்கொண்டார்.
புதிய கண்டுபிடிப்புகள்: இவரது காலகட்டத்தில் ஃபிளோஜிஸ்டன் என்ற பொருளே பல்வேறு பொருட்களின் அடிப்படை என்ற கருத்து நிலவி வந்தது. இதனை உருவாக்கியவர் ஜெர்மன்நாட்டு அறிவியல் அறிஞர் ஜார்ஜ் இஸ்டெகல். அவர் மட்டுமல்ல பிரபல விஞ்ஞானிகளாய் விளங்கிய ஜோசப் பிளேக், ஜோசப் பிரீஸ்ட்லி, ஹென்றி கேவண்டிஷ் போன்றோரும் இக்கருத்தையே சரியெனவாதிட்டு வந்தனர். இவரது கருத்துக்களின்படி நிலக்கரி, மரம் போன்றவை எரியும்போது அவற்றிலிருந்து ஃபிளோஜிஸ்டன் வெளியேறி எடை குறைகிறது என்றும் உலோகம் துருப்பிடிக்கும்போது உலோகம் எரிந்து எடை கூடுகிறது என்றும் நம்பிவந்தனர்.
லவாய்சியர் இது தவறு என்றே கருதினார். பாஸ்பரஸ், கந்தகம், பாதரசம் போன்ற பொருட்களை வைத்து ஆய்வு செய்து பார்த்தார். பல்வேறு பொருட்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு அவற்றின் எடையைக் கண்டறிந்தார். பின்னர் அவற்றை காற்றுப் புகாத ஜாடிக்குள் வைத்து அதன் எடையையும் கண்டறிந்தார். ஜாடியின் எடையில் எவ்வித மாற்றமும் இல்லாதபோது எரிக்கப்பட்ட பொருட்களின் எடையானது கூடியுள்ளது என்பதை துல்லியமாகக் கண்டறிந்தார்.
இதன் மூலம் ஜாடியில் உள்ள காற்றை எடுத்துக் கொண்டு எரிவதன் மூலமாகத்தான் அது எரிகிறது. இதனால் எரிக்கப்பட்ட பொருட்களின் எடை கூடுகிறது என்பதையும் கண்டறிந்தார். காற்று என்பது ஒரு தனிமம் என்றே அந்நாட்களில் பலரும் நினைத்திருந்தனர். காற்றில் ஆக்சிஜன், நைட்ரஜன் போன்ற வாயுக்கள் உள்ளன என்று இவர் கண்டறிந்தார்.
அதுமட்டுமல்ல. நீரானது ஹைட்ரஜனும், ஆக்சிஜனும் சேர்ந்தது எனவும் இவர் கண்டறிந்தார். சரி இப்படிப்பட்ட விஞ்ஞானிக்கு கிலட்டினால் கொல்லப்படும் நிலை ஏன் ஏற்பட்டது? தொடர்ந்து ஆராய்வோம். - முனைவர் என்.மாதவன், கட்டுரையாளர்: பள்ளி தலைமையாசிரியர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தொடர்புக்கு: thulirmadhavan@gmail.com