

உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் அளவுக்கு இவர் பாடங்களில் போதுமான அறிவு பெற்றவராயில்லை. கீழ்நிலை பள்ளி வகுப்புகளுக்குப் போதிக்கும் அளவுக்குக் கூட இவருக்கு திறமை இருக்கிறதா என்ன? இவரது விடைத்தாளினை மதிப்பீடு செய்யும் எங்களால் அதற்குக் கூட இவரை அனுமதிக்க இயலாது...
இத்தகைய குறிப்புரை பள்ளி ஆசிரியராவதற்கென கிரிகோர் மெண்டல் எழுதிய தேர்வினை நடத்தியவர்களால் அளிக்கப்பட்டது. இருந்தும் இவர்தான் மரபியலின் தந்தை என போற்றப்படும் சாதனைகளைப் புரிந்தார்.
இவரைத் தேர்வாளர்கள் இப்படி விமர்சித்தாலும் ஒரு ஆசிரியராக இவர்மாணவர்களை மிகவுமே கவர்ந்தார். அவர் வசித்த நகருக்கு ஒருமுறை சர்க்கஸ்நிறுவனம் வந்தது. மாணவர்களை அங்கு அழைத்துச் சென்று அங்கிருந்த குரங்களுடன் சேட்டைகள் செய்ய அனுமதித்தார். மாணவர்களும் மிகவும்மகிழ்வுடன் விளையாடினர். ஆர்வமிகுதியில் இவரும் ஒரு பருமனான குரங்குடன் விளையாடிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அந்த குரங்கு இவரது கண்ணாடியை பிடுங்கிக் கொண்டது. மிகவும் படாதபாடுபட்டு அந்த குரங்கிடமிருந்து கண்ணாடியைப் பிடுங்கினார். இந்நிகழ்வை ‘குரங்குடன் நடந்த மல்யுத்தம்’ எனவும் கிண்டலாக தன்னை தானே வர்ணித்தாராம்.
சோதனை மேல் சோதனை: தனக்குக் கிடைத்த குறைவான வளத்துடன் மெண்டல் செய்த சாதனைகள் அலாதியானது. தாவரங்களின் மரபியலைத் தீர்மானிக்க மகரந்தச் சேர்க்கை, அயல் மகரந்தச் சேர்க்கை போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்தானே. இதனைக் கருத்தில் கொண்டே இதழ்கள் மூடியிருக்கும் வகையிலான பூக்களைக் கொண்ட பட்டாணிச் செடியினைத் தேர்ந்தெடுத்திருந்தார் மெண்டல். குட்டை இனம், நீளம் அதிகமான இனம் என வகைவகையான தாவரங்களை கணக்கில் எடுத்து அவற்றுக்கு இடையே கலப்பினங்களை உண்டாக்க அவர் காட்டிய அக்கறையும் உழைப்பும் அலாதியானது. சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலான தனது ஆய்வினை “தாவரக் கலப்பினப் பரிசோதனை” என்ற தலைப்பிலான ஆய்வுக்கட்டுரையாக்கி 1865 பிப்ரவரி 8 மற்றும் மார்ச் 8 ஆகிய தினங்களில் வாசித்தார். அவர் எதிர்பார்த்த அளவுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. அவர் ஆய்வுக்கட்டுரை வாசித்தபோது 20 நபர்களுக்கும் குறைவாகவே பார்வையாளர்கள் இருந்தனர். இவர்களில் பலரும் இவரது உரையைக் கேட்டுவிட்டு, பட்டாணிச் செடிகளோடு பத்தாண்டுகள். தேவையா இது? என்ற ரீதியில் கிண்டலடித்தனராம்.
அதன் பின்னரும் மியுனிச் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான கார்ல் பான் நாகேலி என்பவருக்கு இவரது கட்டுரையை அனுப்பிவைத்தார். அவருக்கு கணக்குப் பாடம் ஒத்துவராது. ஆனால், இவரது கட்டுரையோ கணித சூத்திரங்களை அடிப்படையாகக் கொண்டது. கட்டுரையை வாசித்த அவர் நீங்கள் இப்போதுதான் ஆராய்ச்சியைத் தொடங்கி உள்ளீர்கள். நீங்கள் செல்லவேண்டிய தூரம் நிறையஇருக்கிறது என்று கருத்து தெரிவித்தாராம். மேலும் ஹெய்ராசியம் என்ற செடியைக் குறிப்பிட்டு அதிலும் உங்கள் சோதனையைச் செய்து பாருங்கள் என்றாராம். ஆனால், அந்த செடி இவ்வாறான ஆராய்ச்சிக்கு ஏற்ற செடியல்ல.
எலி ஆராய்ச்சி: இதனிடையே அவர் பணியாற்றிக் கொண்டிருந்த தேவாலயத்தின் பாதிரியார் காலமானார். அதனால் இவருக்குப் பொறுப்பு கூடியது. மேலும் இவர் முழுநேரமாக எப்போதுமே அறிவியலைக் கைக்கொள்ளவில்லை என்பது ஒரு குறைபாடு. தாவரங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு தேனீ, எலி வகைகளிலும் இவர் சோதனைகளை நிகழ்த்தினார். அவற்றிலும் ஓரளவுக்கு வெற்றிபெறவே செய்தார். இதனிடையே 1864-ல் இவர் பாதிரியாராகவே இயற்கை எய்தினார். 1900களில் இவரது கட்டுரையை வாசிக்காத பல அறிவியல் அறிஞர்கள் இவரது கருத்தை ஒட்டிய ஆய்வுகளைச் செய்து கட்டுரையாக வெளியிட்டனர். பின்னர் அவர்கள் மெண்டல் அவர்களின் கட்டுரையினை வாசித்து அவரைப் பாராட்டினர். இதே ஆண்டில் வில்லியம் பேட்டிசன் என்ற விஞ்ஞானியும் மெண்டலின் கட்டுரையினை பலருக்கும் பகிர்ந்தார். என்ன அவர் இறந்து 16 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவரது அருமை உணரப்பட்டது. எவ்வளவு பெரிய சோகம் இது! தலைவிதி, சாபம் போன்றவை உண்மை அல்ல மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு மரபியலே காரணம் என பின்னாளில் அறிவியல் பறைசாற்ற மெண்டலின் விதிகள் உதவின என்பதை எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டும். - கட்டுரையாளர்: பள்ளி தலைமையாசிரியர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தொடர்புக்கு: thulirmadhavan@gmail.