

மேல்நிலைப்பள்ளிக் கல்வி நிறைவு செய்யும் ஆர்வத்துடன் மாணவன் ஒருவன் பயில்கிறான். குடும்பத்தின் வறுமை நிலை அவனது கல்விக்கு சவால் விடுகிறது. அவனது ஆசிரியர் ஓர் அறிவுரை சொல்கிறார். அதன்படி பிரான் நகரில் உள்ள மடாலயத்தில் தோட்டங்களைப் பராமரிக்கும் பணியில் சேர்கிறான். அங்கு பசியும் தீர்ந்துவிடுகிறது ஓரளவுக்குக் கல்வியும் கிடைக்கிறது. பின்னாட்களில் தனது விருப்பப்படியே அந்த இளம் மாணவன் பெரியவனாகி அறிவியலும் கணிதமும் பயில்கிறார். தனது விருப்பத்தின் பேரில் செய்த ஆராய்ச்சியால் தாம் தேர்ந்தெடுத்த துறையின் தந்தை என்று போற்றுமளவுக்குப் பெயரும் புகழும் அடைகிறார்.
யார் அவர்? அவர்தான் மரபியலின் தந்தை என அழைக்கப்படும் கிரிகோர் மெண்டல் (1822-1884). தோட்ட உதவியாளராக சேரும்படி அவருக்கு ஆலோசனை கூறியவர் அவரது பேராசிரியர் பிரெட்ரிக் ஃப்ரான்ஸ். அரும்பாடுபட்டு அவர் செய்த ஆராய்ச்சிகளின் பலனை அவர்கள் காலத்தினர் எந்த அளவுக்குப் போற்றினர்? அவரது வரலாறு விடை சொல்லட்டும்.
யோஹான் மெண்டல் என ஆரம்பக்காலத்தில் அழைக்கப்பட்ட கிரிகோர் மெண்டல் தற்போது செக் குடியரசில் இருக்கும் தொடக்ககால ஆஸ்திரிய நாட்டின் ஹெயின்சன் டார்ஃப் என்ற ஒரு சிறு கிராமத்தில் பிறந்தவர். சிறுவிவசாயியாக இருந்த அவரது பெற்றோர் பல்வேறு தியாகங்களைச் செய்து இவரை படிக்க வைத்தனர். அவரது பெற்றோர் பட்டாணி செடிகளைப் பயிரிட்டுக் கொண்டிருந்தனராம். அவர்களுக்கு உதவியாக இவர் இருந்தார். இந்த அனுபவங்கள் பின்னாட்களில் பட்டாணி செடியில் ஆராய்ச்சி மேற்கொள்ள உதவியாக இருந்தது. உயர்நிலைப்பள்ளி முடித்து 1840-ல் ஆலோமோக் ( Olomouc) பல்கலைக்கழகத்தில் தத்துவம் பயின்றார். அங்கும் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் சிறப்பிடம் பெற்றார். அங்கு பயின்று கொண்டிருந்தபோது அவருக்கு குடும்பத்தினரால் அனுப்பப்பட்ட பணம் போதுமானதாக இல்லை. இதனால் பல்வேறு மாணவர்களுக்கு தனிவகுப்பு எடுத்து சூழலை சமாளித்தார்.
அறிவியலுக்கு இடம் கொடுத்த ஆலயம்: இதன் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் உடல்நிலைகூட சரியில்லாமல் போனதாம். அந்த நேரங்களில் சொந்த ஊருக்குச் சென்று ஓய்வெடுத்து உடம்பைப் பராமரித்துத் திரும்பினாராம். பின்னாட்களில் வியென்னா பல்கலையிலும் சேர்ந்து பயின்று தமது துறைசார் அறிவை விரிவுபடுத்திக் கொண்டார். பின்னர் தூய தாமஸ் தேவாலயத்தில் பாதிரியாராகப் பணியாற்றிக் கொண்டே ஆய்வுகளைத் தொடர்ந்தார். அந்த தேவாலயம் அறிவியல் கற்றலுக்கும் ஏற்ற இடமாக இருந்தது. குறிப்பாக அந்த தேவாலயத்தின் பொறுப்பாளர் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் மரபியல் பற்றிய ஆராய்ச்சியிலும் ஆர்வமுடையவராக இருந்தார்.
இதுபோதாதா? யோஹான் மெண்டல் யோஹான் கிரிகோர் மெண்டல் என்ற பெயருடன் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கினார். பட்டாணிச் செடியில் பல்வேறு கலப்பினங்களை மேற்கொண்டு ஆய்வில் ஈடுபட்டார். தேவாலயத்தின் பொறுப்பாளர் ஆர்வமுடையவராக இருந்தாலும் அங்கிருந்த பலரும் இவருக்கு ஆதரவாக இல்லை. இவர் வளர்த்து வந்த பட்டாணிச் செடிகளுக்கு மத்தியில் எலிகள் குடும்பம் நடத்திக் குதூகலித்தன. இதனைக் கண்ட அவர்கள் இது தேவாலயம், எலிகள் வளர்க்கும் பண்ணையல்ல என்றெல்லாம் கிண்டலடித்தனர். ஆனால்,மெண்டல் மனம் தளரவில்லை. தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். தோட்டக்கலைப் பணியாளர், தனிப்படிப்பு ஆசிரியர், பின்னாளில் பாதிரியார், உயர்நிலைப்பள்ளி ஆசிரியர், ஆராய்ச்சியாளர் என தனது நேரத்தைச் சரியாக உபயோகித்து அவர் கண்டறிந்தவைதான் என்ன? அவர் காலத்தில் அவர் போற்றப்பட்டாரா? அவ்வளவு ஏன், உயர்நிலைப்பள்ளி ஆசிரியருக்கான தேர்வில் அவரால் தேர்ச்சி பெற இயன்றதா? பார்ப்போம். - கட்டுரையாளர்: பள்ளி தலைமையாசிரியர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தொடர்புக்கு: thulirmadhavan@gmail.com