

நமது வீடுகளில் நாம் மின்விசிறியின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ரெகுலேட்டரை பயன்படுத்துகிறோம். மின்சப்ளைக்கும், மின்விசிறிக்கும் இடையில் தொடர்பு ஏற்படுத்த ரெகுலேட்டரை பொருத்துகிறோம்.
இப்பொழுது நாம் பழைய தொழில்நுட்பத்தில் ரெகுலேட்டர் எவ்வாறு மின்விசிறியின் வேகத்தைக் கட்டுப்படுத்தியது என்பதையும், நவீன தொழில்நுட்பத்தில் ரெகுலேட்டர் எவ்வாறு மின்விசிறியின் வேகத்தைக் கட்டுப்படுத்துகிறது என்பதையும் பார்க்கலாம். இதன் மூலம் நவீன தொழில்நுட்பத்தின் நன்மைகளைப் புரிந்துகொள்ளலாம். ஏற்கெனவே கூறியபடி கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் ஆகிய நான்கு கணித செயலிகளை மட்டுமே இந்த பகுதியில் பயன்படுத்தப் போகிறோம்.
மின்விசிறி செலவழிக்கும் மின்சக்தி என்பது அதற்குத் தரப்படும் மின்அழுத்தம் (வோல்டேஜ்) மற்றும் மின்ஓட்டத்தின் (கரண்ட்) பெருக்கல் தொகையாகும். உதாரணமாக ஒரு மின்விசிறிக்கு நாம் 230V மின்அழுத்தம் தந்து, அந்த மின்விசிறியின் ஊடே 1A மின்ஓட்டம் இருந்தால், அந்த மின்விசிறி 230V x 1A = 230W மின்சக்திக்கு ஈடான காற்றை வெளியிடும். அதாவது மின்விசிறியின் சக்தி 230W.
இதனை தெளிவாக புரிந்து கொள்ள இரண்டு சூத்திரங்கள் (Formulas) முக்கியம். சொல்லப்போனால் மின்சாரத் துறையை ஆழமாக புரிந்து கொள்ள விரும்பினால் இரண்டே சூத்திரங்கள் தெரிந்திருந்தால் போதுமானது. அவை நவீன தொழில்நுட்பத்தைப் புரிந்து கொள்வதற்கும் பயன்படும்.
முதல் சூத்திரம்: ஒம்ஸ் வீதி (Ohm’s Law)
V = I x R
அதாவது மின்ஓட்டத்தின் அளவையும், மின்தடையின் அளவையும் பெருக்கினால் மின்அழுத்தத்தின் அளவு வரும். இதனை ஒரு எளிய உதாரணத்தின் மூலம் பார்க்கலாம். ஒரு கிலோ அரிசியின் விலை 50 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது 10 கிலோ அரிசியின் விலை என்ன?
மொத்த விலை = 1 கிலோ அரிசி விலை x 10 கிலோ
= 50 x 10 = ரூ. 500/-
இந்த உதாரணத்தையே சிறிது மாற்றி செய்து பார்க்கலாம். ஒரு கிலோ அரிசியின் விலை ரூ.50. என்னிடம் ரூ. 400 உள்ளது. என்னால் எவ்வளவு கிலோ அரிசி வாங்க முடியும்?
1 கிலோ அரிசி விலை = ரூ. 50/-
என்னிடம் உள்ளது = ரூ. 400/-
என்னால் வாங்கக் கூடிய அரிசி = 400 / 50 = 8 கிலோ.
இவ்வளவு கணிதம்தான் நமது நவீன தொழில்நுட்பத்தைப் பற்றி அறிந்து கொள்ளத்தேவை.
இப்பொழுது நாம் மீண்டும் ஒம்ஸ் விதியைப் பற்றிப் பார்க்கலாம். மின்ஓட்டத்தையும், மின்தடையையும் பெருக்கினால் மின்அழுத்தம் வரும். இதில் எந்த இரண்டைக் கொடுத்தாலும் மூன்றாவதின் மதிப்பைக் கண்டறியலாம்.
V = I x R -------- 1
I = V / R -------- 2
R = V / I -------- 3
அதே போல் இரண்டாவது சூத்திரத்திற்கு சக்தி சூத்திரம் (Power Law) என்று பெயர்.
P = V x I -------- 1
V = P / I -------- 2
I = P / V -------- 3
இங்குதான் கூடுதல் புரிதல் தேவைப்படுகிறது. அது குறித்து அடுத்த வாரம் விரிவாக பேசுவோம்.
கட்டுரையாளர், பொறியாளர், தொழில்நுட்பப் பயிற்றுநர்.