

ஒரு நபருக்குப் பணம் அனுப்புவதாகச் சொல்லி அவரிடமிருந்து பணத்தைத் திருடிய செய்தி குறித்து போன கட்டுரையில் பார்த்தோம் அல்லவா. ஆனால் எப்படி? நாம் பணம் அனுப்ப/ பெற்றுக்கொள்ள பல செயலிகளை பயன்படுத்துகிறோம். அதில் பெரும்பாலும் பணம் அனுப்பி இருப்போம். யாருக்கு, எவ்வளவு பணம், பின் நம்பர் கொடுத்தால் போதும் வேலை முடிந்தது. ஆனால், நீங்கள் கவனிக்காமல் விட்ட ஒரு முக்கிய விஷயம், எப்படி மற்றவருக்குப் பணம் அனுப்புகிறோமோ அதேபோல மற்றவரிடம் பணத்தைக் கேட்கவும் அதில் வசதிகள் இருக்கிறது.
அதுதான் ‘ரிக்வஸ்ட் மனி’ (Request Money). நீங்கள் ‘ரிக்வஸ்ட் மனி’ என்று உங்கள் நண்பரின் பெயரைத் தெரிவு செய்து அனுப்பினால், உங்கள் நண்பருக்கு ஒரு மெசேஜ் போகும். அதில் உள்ள லிங்கை க்ளிக் செய்தால் செயலி திறக்கும். அதில் அவரை பின் நம்பர் கொடுக்கச் சொல்லும். கொடுத்தால் போதும். பணம் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து அவர் வங்கி கணக்கிற்குச் சென்றுவிடும்.
பணம் பெற பின் நம்பர் எதுக்கு? - இப்போது உங்களிடம் பணம் கேட்கும்இந்த முறையில் ஒரு சிறு மாற்றம். சைபர் குற்றவாளிகள் இந்த ரிக்வஸ்ட் முறையைப் பயன்படுத்தி ஒரு லிங்க் அல்லது கியுஆர்கோடை உருவாக்குவார்கள். உங்களுக்குப் பணம் அனுப்புகிறோம் எனச் சொல்லி அந்த லிங்க் அல்லது கியுஆர்கோடை உங்களுக்கு அனுப்புவார்கள். நாமும் நமக்குப் பணம்தான் வரப்போகிறதே என்ற ஆசையில் பின் நம்பரையும் கொடுத்துவிடுவோம். அவ்வளவுதான் நம் கணக்கில் இருக்கும் பணம் சைபர் குற்றவாளி வங்கிக்குச் சென்றுவிடும். பின் நம்பரை நீங்களே கொடுத்துப் பரிமாறியதால் இது லீகல் ட்ரான்சக்ஷன் ஆகிவிடும்.
ஒரே சின்ன லாஜிக்தான். நாம் பணம் பெற நாம் பின் நம்பர் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இதை உங்கள் மூளை உணர்ந்துவிட்டால் போதும். மிகச் சிக்கலான இந்ததிருட்டிலிருந்து உங்களை மிக எளிதாகப் பாதுகாத்துக் கொள்ளலாம். நம் தகவல், நம் அந்தரங்க தகவல்கள், பாஸ்வோர்ட், பின் நம்பர் என அனைத்தையும் ரகசியமாகவும் பாதுகாப்பாகவும் வைப்பதில் தான் நாம் இந்த குற்றங்களுக்குள் சிக்காமல், சைபர் உலகின் அனைத்து நன்மைகளையும் அனுபவிக்கலாம்.
அடுத்து மாணவர்களைத் திட்டமிட்டு ஏமாற்றும் இணையம் வேலை வாய்ப்புகளைப் பற்றிப் பார்ப்போம். சின்ன வேலை, ஸ்மார்ட்போன் இருந்தால் போதும், உங்கள் பாக்கெட் மணியை நீங்களே சம்பாதிக்கலாம் என வகை வகையான வேலைவாய்ப்புகள். இதில் சரியான வேலைகளும் இருப்பது உண்மைதான். ஆனால், நிறைய போலி. இதைக் கண்டு பயப்பட வேண்டாம். போலிகளிடம் சிக்காமல் நம்மை காப்பற்றிகொள்வதை பற்றி அடுத்துப் பார்ப்போம்.
(தொடர்ந்து பேசுவோம்)
கட்டுரையாளர்: டிஜிட்டல் சமூக ஆய்வாளர்
தொடர்புக்கு: write2vinod11@gmail.com