

குழந்தைகள் ராட்சசன் போலவும், மனிதர்கள் மலைகளைப் போலவும், சிறிய படை பெரிய படையைப் போலவும் தெரிகிறார்கள். இந்த கண்ணாடி வழியாகப் பாருங்கள் இதன் மூலம் வானில் உள்ள சூரியனையும், சந்திரனையும் நட்சத்திரங்களையும் நம்மருகில் வரச் செய்யலாம்” என்று சத்தமாக கூறியபடி தனது கண்டுபிடிப்பின் அதிசயத்தைக் காண அழைக்கிறார் ஒருவர். நீதான் பெரிய ஆளாயிற்றே, சாத்தான்களோடு சேர்ந்து சித்துவேலை செய்கிறாய். உன் சம்பந்தமே வேண்டாம் என்று அவரைச் சுற்றியிருந்த பலரும் விலகிச் சென்று தனிமைப்படுத்தினர்.
ஒளியின் அறிவியல்: இந்த நபருக்கு இருந்த திறமையைப் பயன்படுத்தி அன்றிருந்த அரசர்களையும் இளவரசர்களையும் அவ்வப்போது சந்தித்திருந்தால் ஏராளமான பரிசுப்பொருட்களைப் பெற்று வசதியாக வாழ்ந்திருக்கலாம். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. அது தனது சுதந்திரத்தைத் தடை செய்யும். தாம் சுதந்திரமாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இயலாது என மறுத்து வாழ்நாள் முழுவதும் ஆய்வுகளை மட்டுமே தொடர்ந்தார். வாழ்நாளில் சுமார் 14 ஆண்டுகள் சிறையிலும் கழித்தார். மத நிறுவனங்கள் விதித்த கட்டுப்பாடுகளால், இவர் செய்த பலவற்றையும் பதிவு செய்யாமலேயும் மறைந்தார். யார் இவர் ? விஞ்ஞானி ரோஜர் பேக்கன் (1214- 1292).
இங்கிலாந்து நாட்டில் உள்ள இல்செஸ்டர் என்ற இடத்தில் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். அன்றைய வழக்கப்படி 13-வது வயதில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயிலச் சென்றார். இறையியல் பாடப்பிரிவில் சேர்ந்து கடவுள், மதம் குறித்து ஆழமாகப் படித்தார். இதனைப் படித்துக்கொண்டே வானவியல், இயற்கை அறிவியல், ஒளியியல், இயந்திரவியல் போன்ற துறைகளில் இருந்த கூறுகளையும் தமது ஆர்வத்தின் பேரில் கற்றார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலேயே சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர் பாரிஸ் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றினார். பின்னர் சிறிது காலம் அவரது வாழ்நாள் பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை.
அத்தனையும் கேள்வி கேள்! - அந்த நாட்களில் பெரும்பாலும் படிக்க, எழுத வசதியான இடங்களாக மடங்களே இருந்தன. எனவே அவர் கிறிஸ்தவ மதத்தின் ஒரு பிரிவாக இருந்த பிரான்ஸிஸ்கன் பிரிவில் சேர்ந்தார். அந்நாட்களில் (இப்போதும்தான்) பொதுவாகவே ஏற்கெனவே நிலவி வரும் கூற்றுகளைக் கேள்வி கேட்டு ஆராய பலரும் முன்வருவதில்லை. முன்னோர்கள் கூறியதை அடிப்படையாக வைத்தே வாதங்களை நடத்தி வந்தனர். பேகன் அவர்களோ அனைத்தையும் கேள்விக்குட்படுத்தி ஆராய முற்பட்டார். இது அந்த மதநிறுவனத்தினருடன் பெரும் முரண்பாடுகளை ஏற்படுத்தியது. அங்கிருந்த உயர் மதகுருக்களின் கோபத்திற்கு ஆளானார். இவரை ஆய்வுகள் மேற்கொள்ளக்கூடாது; நூல்கள் எழுதக்கூடாது என தடை விதித்தனர்.
ஆனாலும், பேகன் விடாப்பிடியாக ஆய்வுகளை மேற்கொண்டவாறே இருந்தார். கையில் கிடைத்த அனைத்தையும் பயன்படுத்தி அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டார். ஒளியியலும், கண்ணாடியும் இவருக்கு கை கொடுத்தன. வாயில் நீரை ஊற்றி அதனைப் பக்குவமாகச் சூரிய ஒளியில் தெறிக்கவிட்டு வானவில்லைக் கூட உண்டாக்கிக் காட்டியுள்ளார். நீர் நிரம்பிய டம்ளரைக் கொண்டும் வானவில்லை உருவாக்கிக் காட்டினார். இந்தவகையில் நீயூட்டனுக்கு 400 ஆண்டுகளுக்கு முன்னரே இவர் ஒளியியலுக்கான, நிறப்பிரிகைக்கான அடிப்படையைக் கண்டறிந்திருந்தார். வெடிமருந்து, உப்பு தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொண்டார்.
“சமரசமின்றி ஆய்வுகளைச் செய்து பார்க்க எனது வாழ்நாள் முழுவதும் நான் பின்பற்றிய கோட்பாடுகளை மனித இனம் ஒருநாள் ஒப்புக்கொள்ளும். செய்து பார்க்க முயல்வது, தவறுகள் செய்வது, புதியனவற்றைக் காணும் தீரம் பெறுவது போன்றவை சுதந்திரமான மனிதர்களின் நம்பிக்கையாக இருக்க வேண்டும்” என்று தனது மாணவர்களைக் கூட்டிச் சொல்லிய சில நாட்களுக்குப் பிறகுதான் அவர் மறைந்தார். அவர் உண்டாக்கிய வெளிச்சத்தினை அன்றைய கிறிஸ்தவ மத நிறுவனங்கள் மறுத்தாலும் உண்மையின் ஒளியினை அவரது சந்ததியினர் கண்டறியவே செய்தனர். அறிவியலுக்கேது நிரந்தர தடைகள்.
(தொடரும்)
கட்டுரையாளர்: பள்ளி தலைமையாசிரியர்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
தொடர்புக்கு:
thulirmadhavan@gmail.com