

ஆன்லைன் ஷாப்பிங் மூலம் எப்படியெல்லாம் ஏமாற்று வேலைகள் நடைபெறுகின்றன என்பதை கடந்த வாரம் பார்த்தோம். ஆனால், அப்படி ஏமாந்த பின் அதிலிருந்து மீள முயற்சி எடுக்கப் போய் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படலாம். அதனால் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நண்பர் ரமேஷ் ஒரு வலைத்தளத்தில் ஒரு பொருளை வாங்க முனைகிறார். ஹேக்கர்கள் ரமேஷை வாட்ஸப்பில் தொடர்பு கொண்டு பொருளுக்குப் பணம் கட்ட சொல்கிறார்கள். ரமேஷும் பணம் கட்டுகிறார். பல மாதம் ஆகியும் பொருள் வரவில்லை.
அடுத்த சதி வலை கோபமடைந்த ரமேஷ் தன் பணத்தைத் திரும்பக் கொடுக்கச் சொல்கிறார். அவர்களும் மீண்டும் ஒரு லிங்கை வாட்ஸப்பில் அனுப்புகிறார்கள். அதை க்ளிக் செய்து தகவல்கள் கொடுத்தால் பணம் திரும்ப வரும் என்று கூறுகிறார்கள். அந்த வார்த்தையை நம்பி ரமேஷ் அந்த லிங்கை க்ளிக் செய்கிறார். அதன் பிறகு ஜிபே செயலி தானாகத் திறக்கிறது. ரமேஷின் ரகசிய ‘பின்’ நம்பரைக் கொடுக்கச் சொல்கிறது. தன் பணம் கிடைக்கப் போகிறது என்ற மகிழ்ச்சியில் தனது ‘பின்’ நம்பரைக் கொடுக்கிறார் ரமேஷ். அவ்வளவுதான், அவரின் வங்கிக் கணக்கில் இருந்து மேலும் 75 ஆயிரம் ரூபாய் காணாமல் போகிறது. அவருக்கு வர வேண்டிய பணம் 7,500 ரூபாய். ஆனால், அந்த பணத்தை மீட்கப் போய் அவர் மேலும் 75 ஆயிரம் ரூபாயை இழந்துவிட்டார்.
நம்பி ஏமாந்தார்: அடுத்து நடந்ததுதான் இன்னும் கொடுமை. தன் பணம் எடுக்கப்பட்டதை அந்த வாட்ஸப்பில் சொல்லுகிறார். அந்த பக்கத்தில் இருந்து நபர் ஒருவர் அழைக்கிறார். “சார் மன்னிசிடுங்க, நாங்க புதுசா தொழில் செய்யறவங்க, எங்க பேர் கெட்டுபோய்டும். ஏதோ டெக்னிகல் தவறு மீண்டும் லிங்க் அனுப்புகிறேன், இந்த முறை உங்க 7500 75 ஆயிரமும் உங்கள் கணக்கில் வந்துவிடும். எங்கள மன்னிச்சிடுங்க, திரும்ப ட்ரை பண்ணுங்க சார்” என்ற கெஞ்சல் குரலை நம்பி ரமேஷ் மீண்டும் லிங்கை க்ளிக்குகிறார். ‘பின்’ நம்பர் கேட்கிறது. மீண்டும் அவர் வங்கிக் கணக்கில் இருந்து 75 ஆயிரம் ரூபாய் காலி. இப்படியே கெஞ்சல் குரலில் ரமேஷை நம்ப வைத்து சுமார் 3 லட்ச ரூபாயைத் திருடிவிட்டார்கள். ரமேஷ் முதலில் இழந்தது 7,500 ரூபாய். அதன் பின் அதை மீட்கப் போய் அவர் இழந்தது 3 லட்ச ரூபாய். இப்போது இதைப் படிப்பவர்களுக்கு ஒரு கேள்வி. நீங்கள் ஜிபே, பேடிஎம். மாதிரியான செயலிகளைப் பயன்படுத்தி இருப்பீர்கள். பணம் பெற்றிருப்பீர்கள். இதுவரை உங்களுக்குப் பணம் அனுப்ப, மற்றவர்களுக்கு உங்களுடைய பின் நம்பரைக் கொடுத்து இருக்கிறீர்களா? யோசியுங்கள். அடுத்த வாரம் இதைப் பற்றி மேலும் ஆராய்வோம்.
(தொடர்ந்து பேசுவோம்)
கட்டுரையாளர்:
டிஜிட்டல் சமூக ஆய்வாளர்
தொடர்புக்கு: write2vinod11@gmail.com