டிஜிட்டல் கில்லாடி ஆகலாம்! - 10: மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது எப்படி?

டிஜிட்டல் கில்லாடி ஆகலாம்! - 10: மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது எப்படி?
Updated on
2 min read

மனிதனால் சுயமாக ஆற்றலை உருவாக்க முடியாது. ஆனால், ஒரு ஆற்றலை மற்றொரு ஆற்றலாக மாற்றி பயன்படுத்த முடியும் என்பதை தனது அறிவால் நீரூபித்துள்ளது மனித இனம்.

உதாரணமாக பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளை மனிதனால் உருவாக்க முடியாது. ஆனால் அவற்றை கொண்டு கார், பஸ், பைக்கில் உள்ள இன்ஜின்கள் வேலை செய்ய வைக்க முடியும் என்பதை மனிதன்தான் கண்டுபிடித்தான்.

அதே நேரம் மனிதனால் இயற்கை ஆற்றலை நேரடியாக தன் வசப்படுத்த ஒரு எல்லை உண்டு. ஒரு கம்பை ஒரு பக்கத்தில் அசைத்தால் மற்றொரு பக்கம் அசைகிறது. அதுவே கம்பின் நீளம் அதிகமாக இருந்தால் ஒரு பக்கம் அசைத்தால் மறுபக்கம் அசையாது. நாம் எவ்வளவு பலமாக கத்தினாலும் சில மீட்டர்களுக்கு தாண்டி நமது சத்தம் போகாது.

அப்போதுதான் அறிவியலின் துணை கொண்டு ஆற்றலுக்கு புதிய வடிவம் கொடுக்க மனிதன் முயன்றான். இப்படித்தான் பொறியாளர்கள் எப்படி ஆற்றலை வெகு தூரம் கொண்டு செல்வது என்று யோசிக்க தொடங்கினர். அவர்களுக்கு இது முடியும் என்பதை மின்னல் உணர்த்தியது.

விஞ்ஞானி பெஞ்சமின் பிராங்க்ளின் மின்னலை பற்றி விரிவாக ஆராயத் தொடங்கினார். அதன் விளைவாக உருவான துறை மின்சாரவியல் (Electricity). மின்னலின் சாரம் என்பதால் இந்த ஆற்றலை மின்சாரம் (Electrical) என்றும் இந்தத் துறையை மின்சாரவியல் என்றும் அழைத்தனர்.

மின்சாரம் என்பது ஒரு புது வகையான ஆற்றல் அவ்வளவே. உதாரணமாக அரிசியை விற்று பணமாக மாற்றுகிறோம். பின்னர் பணத்தை கொடுத்து தோசை மாவு வாங்கி உண்கிறோம். நம்மால் பணத்தை உருவாக்கவும் முடியாது பணத்தை உண்ணவும் முடியாது. ஆகவே பணம் என்பது ஒரு இடைத்தரகர் (middle man) தான். அதேபோல் மின்சாரமும் ஒரு இடைத்தரகர்தான்.

சூரியன் போன்ற மின்சாரம்

எளிதாக மின்சாரம் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது என்று பார்க்கலாம். இரண்டு உலோக தகடுகளை எடுத்துக் கொள்வோம். இரண்டிலும் நிறைய அணுக்கள் இருக்கும். அணு என்பது மனிதனால் மேலும் பிளக்க முடியாத ஒரு சிறிய பொருள். இந்த அணுவை இரண்டாகப் பிரிக்கிறார்கள்.

ஒன்று உட்பகுதி. மற்றொன்று வெளிவட்ட பாதை. இந்த உட்தொகுதியை மையப் பகுதி அல்லது நியூக்ளியஸ் என்று அழைக்கிறார்கள். வெளிவட்டப் பாதையை ஆர்பிட் என்று அழைக்கிறார்கள். நியூக்ளியஸின் உள்ளே புரோட்டான் மற்றும் நியூட்ரான் ஆகிய துகள்கள் உள்ளன.

வெளிவட்டப் பாதையில் எலக்ட்ரான் துகள்கள் சுற்றிக் கொண்டிருக்கும். எலக்ட்ரான்களின் எடையை விட புரோட்டான்களின் எடை 1800 மடங்கு அதிகம். இது சூரியனை கோள்கள் சுற்றி வருவதைப் போல இருக்கும். இந்த எலக்ட்ரான்கள் ஒரு குறிப்பிட்ட வட்டப்பாதையில் சுற்றி வரும்.

அணுவுக்கு வெளியே எலக்ட்ரான்கள் வராது. அவ்வாறு அணுவில் வட்டப்பாதையில் இருந்து எலக்ட்ரான்களை வெளியே கொண்டு வருவதற்கு சக்தி தர வேண்டும். அதே போல் எலக்ட்ரான்களை அணுவிற்குள் செலுத்துவதற்கும் சக்தி தேவை.

தொடர்ந்து டிஜிட்டல் மொழி பேசுவோம்...

கட்டுரையாளர் பொறியாளர், தொழில்நுட்பப் பயிற்றுநர்

தொடர்புக்கு: balajeeseshadri@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in