

புத்தகக் கடைப் பணி, பைண்டிங் பணிகளுக்கு மத்தியில் ராயல் கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சொற்பொழிவுகளை வாய்ப்புள்ள போதெல்லாம் சென்று கேட்டுக் கொண்டிருந்தார் மைக்கேல் பாரடே.
அவ்வாறு ஒரு முறை அறிஞர் ஒருவர் சொற்பொழிவாற்ற வந்திருந்தார். அவரது சொற்பொழிவுகளை அப்படியே குறிப்பெடுத்து அதனை ஒரு அழகான கட்டுரையாகத் தொகுத்தார் பாரடே. அவருக்குத்தான் அழகாக பைண்ட் செய்யவும் தெரியுமே. அதனை அழகாக பைண்ட் செய்தும் அவருக்கு அனுப்பிவைத்தார்.
அதனைப் பெற்றவரும் அகமகிழ்ந்துபோகிறார். யார் அவர்? அவர்தான் அறிஞர் ஹம்ப்ரி டேவி. இவரைத்தான் தான்ஸ் குறிப்பிட்டார். ஹம்ப்ரி டேவியின் சொற்பொழிவைக் கேட்க சீட்டு வாங்கிக் கொடுத்ததும் தான்ஸ்தான். அப்போது ஹம்ப்ரி டேவியிடம் தமக்கு ஏதாவது பணி அவரது ஆய்வகத்தில் கிடைக்குமா என பாரடே கேட்டிருந்தார்.
கரும்புதின்ன கூலியா?
பாரடேவை அழைத்து ஹம்ப்ரி டேவி சுத்தம் செய்யும் பணியினை அளித்து ஒன்றைக் கூறினார். “இங்கு பணியில் சேரலாம். ஆனால் ஊதியம் நீங்கள் தற்போது பெற்றுக் கொண்டிருப்பதைவிடவும் குறைவாகவே கிடைக்கும்.
பரவாயில் லையா?” என்று கேட்டார். பாரடேவோ, “எனக்கு வறுமை பழக்கமான ஒன்றுதான். அறிவைத் தேடித்தான் நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். தங்களுடன் இருக்கும்போது எனக்கு விரிவடைய வாய்ப்புள்ள அறிவே போதும்” என்று பணியில் உடனே சேர்ந்துவிட்டார்.
மெல்ல மெல்ல தனது தகுதியினை வளர்த்துக் கொண்டு ஹம்ப்ரி டேவியின் ஆய்வுகளுக்கு உதவியாக இருக்கும் உதவியாளராகப் பரிணமித்தார். பின்னர் அவரே தாமாக பல ஆய்வுகளைச் செய்யும் அளவுக்கு உயர்ந்தார்.
மின்காந்தவியல், வேதியியல் உள்ளிட்டதுறைகளில் தொடக்க கால பங்களிப்புகளைச் செய்தார். இன்றைக்கு மோட்டார் பயன்படாத சாதனம் ஏதும் உண்டா? அதன் அடிப்படையான மின்காந்தவியல் பாரடேவின் கண்டுபிடிப்பே. இதற்காக அவர் பட்ட இன்னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
கடுமையாக எதிர்த்த துணைவியார்
ஒரு முறை ஹம்ப்ரி டேவி அவரது துணைவியாருடன் ஐரோப்பா முழுவதும் அறிவுச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பாரடேவையும் உடன் வர இயலுமா எனக் கேட்டார். கரும்புதின்ன கூலியா? பாரடேவும் சம்மதித்தார். பயணம் முழுக்க ஹம்ப்ரி டேவியுடன் அறிவார்ந்த உரையாடல்களை மேற்கொண்டார்.
ஜெனிவாவில் இருந்த நண்பரின் வீட்டுக்கு ஒருமுறை விருந்திற்கு ஹம்ப்ரியும் பேரடேவும் சென்றனர். அந்த நண்பரும் பாரடேவின் அறிவுத் திறனை மதித்து அவர்கள் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து விருந்துண்ண ஏற்பாடு செய்தார். ஆனால், ஹம்ப்ரி டேவியின் துணைவியார் இதனைக் கடுமையாக எதிர்த்தார். இதனால் பாரடே தனியே உணவருந்த வேண்டியதாகிற்று.
முரண் கடந்த அன்பு
எது எப்படி இருந்தாலும் பாரடே அவருடன் தொடர்ந்து பயணித்தார். ஒருமுறை ஹம்ப்ரி டேவி சுரங்கத்தில் பயன்படுத்த ஏதுவான விளக்கு ஒன்றை வடிவமைத்தார். இதன் பாதுகாப்புத் தன்மை குறித்த விவாதம் வந்தபோது பாரடே ”இது பாதுகாப்பானதல்ல” என்று உண்மையைக் கூறிவிட்டார்.
சுரங்கத்தில் பணி புரியும் உழைப் பாளர்களின் உயிர் தனது ஆசானின் கெளரவத்தைவிட முக்கியம் என்று பாரடே கூறினார். இதன் பின்னர் இருவருக்கும் அந்த அளவுக்கு நட்பு இருக்கவில்லை. டேவி ஒருபடி மேலே சென்று ராயல் கழகத்தின் தலைவராக பாரடே ஆகவிடாமல் தடுத்து வந்தார்.
ஆனால், பாரடே தனது ஆசான் மேல் எந்த வெறுப்பையும் காட்டவில்லை. பிற்காலத்தில் ஹம்ப்ரி டேவியிடம், அவருடைய கண்டுபிடிப்புகளிலேயே சிறந்தது எது என்று கேட்கப்பட்டபோது, “மைக்கேல் பாரடே” என்று பதில் வந்ததாம்.
கட்டுரையாளர்: பள்ளி தலைமையாசிரியர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
தொடர்புக்கு:thulirmadhavan@gmail.com