

நவீன தொழில்நுட்பத்தை கற்க முயலும் அனைவரும் சிறிது குழம்பிப் போகிறார்கள். அதிகம் குழம்பிக் கொள்ளாமல் குறுகிய காலத்தில் நவீன தொழில்நுட்பத்தில் நிபுணராவது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
ஆரம்பக் காலகட்டத்தில் மொபைல் போனை பயன்படுத்துவது மிகவும் கடினம். ஆனால், இன்றைய ஸ்மார்ட்போனை குழந்தை கூட பயன்படுத்த இயலும். அதேபோலதான் நவீன தொழில்நுட்பமும். கடினம், எனக்கு வராது. என்னிடம் பணம் இல்லை, என்னிடம் படிப்பு இல்லை, எனக்கு எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை போன்ற பல நிறங்கள் உள்ள கண்ணாடி வழியாக நவீன தொழில்நுட்பத்தைப் பார்க்காமல் சாதாரணமாக பார்க்க பழகினால் நவீன தொழில்நுட்பத்தை கற்பது சுலபம் என்பது புரியும்.
எல்லா சாதனங்களிலும் உள்ளது!
நமக்கு நன்றாகத் தெரியும் இன்றைய நவீன தொழில்நுட்பத்தின் ஆதாரமே எலக்ட்ரானிக் துறையின் அபரிமிதமான வளர்ச்சிதான் என்று. எல்லோருக்கும் தெரிந்த விவரம் எலக்ட்ரானிக் துறையின் வளர்ச்சியால் கம்ப்யூட்டர் துறையில் வளர்ச்சி ஏற்பட்டது என்பது.
ஆனால், பலருக்கு தெரியாத ஒரு உண்மை இன்றைய நவீன எலக்ட்ரானிக் துறை கம்ப்யூட்டரை சுற்றி பின்னப்பட்ட வலை என்பது. அதாவது எலக்ட்ரானிக்ஸ் துறையின் வளர்ச்சியால் கம்ப்யூட்டர் துறை வளர்ந்தது. அதேபோல் கம்ப்யூட்டர் துறையின் வளர்ச்சியால் எலக்ட்ரானிக்ஸ் துறை வளர்ந்தது.
இதைவிட மேலும் ஒரு முக்கியமான தகவல் உள்ளது. இன்று நாம் பயன்படுத்தும் அனைத்து எலக்ட்ரானிக் பொருள்களிலும் அதன் உள்ளே ஒரு கம்ப்யூட்டரோ அல்லது பல கம்ப்யூட்டர்களோ உள்ளன.
உதாரணமாக நமது வீட்டில் உபயோகிக்கும் டி.வி. ரிமோட் கண்ட்ரோலின் உள்ளே ஒரு கம்ப்யூட்டர் உள்ளது. இன்றைய கார்களில் நூற்றுக்கணக்கான கம்ப்யூட்டர்கள் உள்ளன. ஆகவே, இன்றைய எலக்ட்ரானிக் துறையில் நிபுணத்துவம் அடைய கம்ப்யூட்டர் புரொக்ராமிங்கில் திறமை வேண்டும்.
3 முக்கிய பகுதிகள்
இப்பொழுது நாம் கம்ப்யூட்டருக்கும், நவீன எலக்ட்ரானிக்ஸிற்கும் உள்ள சிறிய வித்தியாசத்தைப் பார்க்கலாம்.
கம்ப்யூட்டரில் மூன்று முக்கிய பகுதிகள் உள்ளன.
1) கீபோர்டு - உள்ளீடு (Input)
2) CPU - செயல்படுத்தும் பகுதி
3) மானிடர் - வெளியீடு (OUTPUT)
கீபோர்டில் தட்டச்சு செய்யும் எழுத்துகள் / எண்கள் CPU-ஆல் புரிந்து கொள்ளப்பட்டு பின்னர் அதன்படி செயல்பட்டு பின்னர் மானிடர் வழியாக வெளியீட்டினைத் தருகிறது. பொதுவாக இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதேபோல் எலக்ட்ரானிக்ஸிலும் 3 முக்கிய பகுதிகள் உள்ளன.
1) உள்ளீடு பகுதி (INPUT)
2) செயல்படும் பகுதி (Process)
3) வெளியீடு பகுதி (OUTPUT)
உள்ளீடு பகுதி வெளியில் இருந்துவரும் சிக்னல்களை (உதாரணமாக ஒளி, ஒலி, வெப்பம், அழுத்தம், சுவிட்சு) எலக்ட்ரிகல் சிக்னல்களாக மாற்றி செயல்படும் பகுதிக்கு அனுப்புகிறது. பின்னர் செயல்படும் பகுதி உள்ளீடாக வரும் எலக்ட்ரிகல் சிக்னல்களை செயல்படுத்தி பின்னர் வெளியீடு எலக்ட்ரிக்கல் சிக்னல்களாக அனுப்புகிறது.
பின்னர் வெளியீடு பகுதி எலக்ட்ரிகல் சிக்னல்களைப் பெற்று அதனை வேற்று சிக்னல்களாக (ஒலி, ஒளி, வெப்பம்,....) மாற்றி வெளி உலகத்திற்குத் தருகிறது. இது மிகவும் எளிதாக தோன்றினாலும், இதைப் புரிந்து கொள்ள சிறிது பயிற்சி தேவை.
தொடர்ந்து டிஜிட்டல் மொழி பேசுவோம்…
கட்டுரையாளர், பொறியாளர், தொழில்நுட்பப் பயிற்றுநர்.
தொடர்புக்கு: balajeeseshadri@gmail.com