

இரும்புக்கொல்லர் ஒருவரின் குடும்பம் கிராமத்தில் வசிக்கிறது. கொஞ்சம் அதிகம் சம்பாதிக்க வசதியாக பக்கத்தில் இருந்த நகரத்திற்கு நகர்கிறது. அங்கும் வருமானம் பெருகிவிடவில்லை. வறுமையிலேயே வாடுகிறது.
தாய் கொடுக்கும் ஒரு ரொட்டியை வாரம் முழுக்க 14 துண்டுகளாகப் பிரித்து வைத்துக் கொண்டு காலையிலும் இரவிலும் மட்டும் தின்று உயிர்வாழ்கிறது அவர்களது வீட்டில் ஒரு குழந்தை.
திக்கித் திக்கிப் பேசும் அந்த குழந்தை ஒரு கொடுமனம் படைத்த ஆசிரியையிடம் சிக்கிக் கொள்கிறது. அந்த ஆசிரியை அக்குழந்தையின் அண்ணனிடமே கொஞ்சம் பணத்தைக் கொடுத்து கடைக்குச் சென்று ஒரு பிரம்பை வாங்கிவரச் சொல்கிறார். அவன் பிரம்பை வாங்கி வந்தவுடன் எல்லோரையும் கூப்பிட்டு பலர் முன்னிலையிலும் அந்த குழந்தையை அடிப்பது என்பது ஏற்பாடு.
அந்த அண்ணனோ திறமைசாலி. அவர் கொடுத்த காசை வெளியே எறிந்துவிட்டு அம்மாவிடம் சென்று தகவலைப் பகிர்கிறான். அவனது அம்மாவும் உடனடியாக வந்து குழந்தையை அழைத்துச் செல்கிறாள். அந்த குழந்தை தான் பின்னாளில் மின்னியல் மற்றும் வேதியியலில் பல சாதனைகள் புரிந்த மைக்கேல் பாரடே (1792-1867).
நியுங்க்டன் என்ற ஊரிலிருந்து மான்செஸ்டர் நகருக்கு வந்த பின்னரும் இரும்புத் தொழிலையே அக்குடும்பம் மேற்கொண்டு வந்தது. உள்ளூரிலிருந்த பள்ளியும் மண்டு என பட்டம் கட்ட வெறும் எண்ணும் எழுத்தும் மட்டும் கற்ற பின்னர் பாரடேயின் முறையான கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது.
வறுமையில் வாடியதால் கல்வியை வேண்டுமானால் தவிர்க்கலாம். வயிற்றுப்பாடு இருக்கிறதே. அந்த நாட்களில் குழந்தை தொழிலாளர் முறை என்பதெல்லாம் இயல்பான ஒன்று. ஒரு புத்தக நிலையத்தில் பாரடே பணியில் அமர்த்தப்படுகிறார். அந்த புத்தக நிலையம் அச்சகம், பைண்டிங் செய்தல் பணியையும் கவனித்து வந்தது.
யாருடைய புத்தகம்?
இதனோடு மட்டுமல்லாமல் செய்தித்தாள் களையும் விற்பனை செய்துவந்தது. இது போதாதா? காலையில் வந்து கடையைச் சுத்தம் செய்துவிட்டு தினசரிகளை கொண்டு சென்று சந்தாதாரர்களுக்கு விநியோகிக்க வேண்டும். பின்னர் வந்து பைண்டிங் செய்யும் பணியைக் கவனிக்க வேண்டும். இத்தனை பணிகளையும் ஆர்வமாகச் செய்துகொண்டே அங்கு பைண்டிங் செய்ய வரும் புத்தகங்களையும் ஆர்வமாக வாசித்தார். குறிப்பாக அறிவியல் மற்றும் மின்சாரம் தொடர்புடைய நூல்களை அவர் வாசிக்கத் தவறுவதில்லை.
ஒருமுறை ஒரு புத்தகத்தினை பைண் டிங்க செய்து கொண்டிருக்கும்போதே அதை வாசித்து முடிக்க முயன்றார். எவ்வளவு முயன்றும் அந்த புத்தகத்தை வாசித்து முடிக்க இயலவில்லை. பைண்டிங் முடிந்த பின்னர் அந்த புத்தகத்தை எடுத்து வைத்து வாசித்துக் கொண்டே இருக்கிறார்.
அதே நேரம் அந்த நூலை பைண்டிங் செய்யக் கொடுத்தவரும் வந்துவிடுகிறார். பாரடேயும் வாசிப்பில் ஆழ்ந்து கவனிக்காமல் விட்டுவிடுகிறார். அவரும் பொறுமையாக காத்திருக்கிறார். பின்னர் ஒருவாறு கவனித்த பின்னர் எப்படி இருக்கிறது இந்த புத்தகம் உங்களுக்குப் புரிகிறதா எனக் கேட்கிறார்.
பாரடேயும் ஒரளவுக்குப் புரிகிறது. சரி ஐயா உங்களது புத்தகம் ஏதும் பைண்டிங் செய்யக் கொடுத்திருக்கிறீர்களா நூலின் பெயரைக் கூறுங்கள் என்று கூறிவிட்டு காக்க வைத்தமைக்கு மன்னிப்பு கேட்கிறார். நீங்கள் படித்துக்கொண்டிருந்த நூல்தான் நான் கொடுத்திருந்த நூல் எனது பெயர் தான்ஸ் என்கிறார்.
பாரடேயின் ஆச்சரியம் எல்லை மீறுகிறது. ஐயா நீங்கள்தான் இந்த புத்தகத்தை எழுதியவரா? அப்படியானால் நீங்கள் எனக்கு அவசியம் உதவவேண்டும் என்று வேண்டுகிறார். உனக்கு உதவும் அளவுக்கு எனக்கு இப்போது இயலாது, நானும் இன்னும் மாணவன் நிலையில்தான் உள்ளேன்.
ஆனால், எனக்குத் தெரிந்து ஒருவர்தான் உன்னை வழிநடத்த சரியான நபர். ஆனால், அவரை சாதாரணமாக சந்திக்க முடியாது. இங்குள்ள ராயல் கழகத்திற்கு சொற்பொழிவாற்ற வருவார். அப்போது முயற்சி செய் என்றார். சரி அவர் பரிந்துரைத்த நபர் யார்?
(ஸ்கோப் தொடரும்)
கட்டுரையாளர்: பள்ளி தலைமையாசிரியர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
தொடர்புக்கு: thulirmadhavan@gmail.com