டிஜிட்டல் கில்லாடி ஆகலாம்! - 8: மனித மூளையைக் கண்டான் மைக்ரோ பிராசஸர் படைத்தான்!

டிஜிட்டல் கில்லாடி ஆகலாம்! - 8: மனித மூளையைக் கண்டான் மைக்ரோ பிராசஸர் படைத்தான்!

Published on

நவீன தொழில்நுட்பம் எப்பொழுது ஆரம்பமானது, எங்கு, யாரால் ஆரம்பிக்கப்பட்டது போன்ற கேள்விகளோடு கடந்த வாரம் முடித்தோம். இப்பொழுது அவற்றுக்கான விடைகளை பார்க்கலாம்.

பல நூற்றாண்டுகளாக மனிதன் இதை நோக்கி செல்லத் தொடங்கினாலும், 1970-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிறிய எலக்ட்ரானிக் பாகம்தான் இந்த நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.

அந்த பாகத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பாக மனிதனின் மூளையை பற்றிய புரிதல் அவசியமாகிறது. மனித மூளையில் பல்வேறு பாகங்கள் உள்ளன. வெளியே ஒரே ஒரு பாகமாகத் தெரிந்தாலும் மூளையின் உள்ளே நிறைய சிறிய பகுதிகள் உள்ளன.

அவற்றில் மூளையில் அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தும் முன்மடல் (Frontal Lobe) மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி ஆகும். இது பெருமூளையின் ஒரு பகுதி. இதனை “செயல்படுத்தும் பகுதி” அல்லது “Processor" என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும். Process என்றால் செயல்படுத்துவது, ஆகவே பிராஸசர் என்றால் செயல்படுத்தும் பகுதி என்று பொருள்.

முதலில் தயாரித்த நிறுவனம்!

மூளையின் செயல்பாடுகளை விளக்குவது இந்த கட்டுரையின் நோக்கம் அல்ல. மூளையின் செயல்பாடுகளுடன் நவீன தொழில்நுட்பத்தை ஒப்பிட்டு நவீன தொழில்நுட்பத்தை விளக்கவே மூளையின் செயல்பாடுகள் குறித்து இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம். அதேநேரம், மூளையின் செயல்பாடுகளைப் பற்றி இணையத்தில் நிறைய தகவல்கள் உள்ளன. அவற்றை ஓரளவுக்குப் வாசித்தால் ஆங்காங்கே நவீன தொழில்நுட்பத்துடன் மூளையின் பகுதிகளை ஒப்பிட்டு புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் என்பது போல, மனித மூளையின் செயல்படுத்தும் பகுதியை பொறியாளர்கள் உற்றுநோக்கிய போதுதான் அதேபோல் ஒரு சிறிய பாகத்தை தயாரிக்கத் தூண்டப்பட்டார்கள். அவ்வாறு பொறியாளர்கள் தயாரித்த பாகத்தின் பெயர் “மைக்ரோ பிராசஸர்”.

மைக்ரோ என்றால் சிறிய என்று பொருள். பிராசஸர் என்றால் செயல்படும் பகுதி என்று அர்த்தம். இந்த மைக்ரோபிராஸசரை 1970-ம் ஆண்டு இன்ட்டல் (INTEL) என்ற நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இன்றும் கணினிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் “மைக்ரோபிராஸசர்", இன்ட்டல் நிறுவனத்தின் மைக்ரோபிராஸசர் தான்.

இன்ட்டல் நிறுவனத்தின் முதல் மைக்ரோபிராஸரின் பெயர் “4004”. இது 16 பின்கள் கொண்ட சிறிய பாகம். இந்த பின்கள் மூலம் மைக்ரோபிராஸசர் வெளி உலகுடன் தொடர்பு கொள்கிறது.

நமது மூளையில் உள்ள செயல்படும் பகுதி, காதுகள் மூலம் கேட்ட தகவல்களை ஆராய்ந்து வாய் மூலம் விடையளிப்பது போல மைக்ரோபிராஸசர் நாம் பேசுவதை மைக் மூலமோ அல்லது கீ-போர்டில் தட்டுவதையோ புரிந்துகொண்டு செயல்படுத்தி ஸ்பீக்கர் மூலமோ அல்லது மானிடர் மூலமோ வெளியிடும். இதைப் பற்றி விரிவாகவும் தெளிவாகவும் அடுத்த வாரம் பேசுவோம்.

தொடர்ந்து டிஜிட்டல் மொழி பேசுவோம்…

கட்டுரையாளர், பொறியாளர், தொழில்நுட்பப் பயிற்றுநர்

தொடர்புக்கு: balajeeseshadri@gmail.com

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in