அறிவியல்ஸ்கோப் - 8: ஆப்பிள் ஏன் என் தலையில் விழுந்தது?
அது 16 ஆம் நூற்றாண்டு. மன்னராட்சியில் மன்னர் பேச்சுக்கு மறுபேச்சேது. அப்போதைய மன்னர் இரண்டாவது ஜேம்ஸ் தமது நண்பர் ஒருவருக்கு எம்.ஏ. பட்டம் கொடுக்க கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவிற்கு சிபாரிசு செய்கிறார். சிபாரிசு செய்யப்பட்ட பாதிரியாரோ எழுதப் படிக்கக்கூடத் தெரியாதவர். மன்னரின் ஆணையை எப்படி மறுப்பது? ஒருவழியாக ஆட்சிமன்றக் குழுவினர் நெஞ்சுரத்துடன் மறுத்தும் விட்டனர். கோபம் கொண்ட மன்னர் யாரெல்லாம் இதற்குக் காரணம் என்று பட்டியலிட்டு விசாரிக்கச் சொல்கிறார். “பல்கலைக்கழக உரிமைகள் புனிதமானவை. இந்த உரிமைகளை மதிப்பிழக்கும் வகையில் எந்த மன்னரும் இதுவரை நடந்துகொள்ளவில்லை” என தமது தரப்பு நியாயத்தை எடுத்துக்கூறினார் ஒருவர். மன்னரும் வேறுவழியின்றி தனது உத்தரவை திரும்பப் பெற்றாராம். அப்படி நியாயத்தைத் துணிந்து எடுத்துரைத்தவர்தான் நியூட்டன் (1642 -1727)
பிறக்கும் போதே நோஞ்சானாக இருந்த நமது கதையின் நாயகன் உடன் பயின்றோரிடம் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. ஒருமுறை கல்லூரியில் இவரை மிகவும் வற்புறுத்தி ஒரு ஒட்டப்பந்தயத்தில் சேர்த்துவிட்டனர்.
இவர் மைதானம் புகும்போது பலத்த காற்று வீசியது. தலைவர் காற்றைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கிவிட்டார். அந்த காற்றும் இவருக்கு ஆதரவாக அமைந்து பந்தயத்தில் வெற்றி பெற்றார்.
நாம் ஏற்கெனவே பார்த்தபடி, பெருந்தொற்று விடுமுறைக்கு வந்தவர் டெஸ்கார்ட்டஸ், யூக்ளிட், கெசாண்டி போன்ற பல்துறை அறிஞர்களின் நூல்களையும் வாசித்தார். இப்படிப்பட்ட ஓர் நாளில்தான் இவர் தலையில் ஆப்பிள் விழுந்தது. மரத்திலிருந்து விடுபட்ட ஆப்பிள் ஏன் நமது தலையில் விழவேண்டும் என்ற யோசனையில் ஆழ்ந்தார். அனைத்துப் பொருட்களையும் பூமி தனது மையத்தை நோக்கி இழுக்கிறது என்ற முதற்கட்ட சிந்தனைக்கு வந்தார். பின்னர் வானத்தில் எறியப்படும் கல் குறிப்பிட்ட தூரம் வரை சென்று திரும்புகிறது. எனவே உந்துசக்தி புவியீர்ப்பு விசைக்கு எதிராகச் செயல்படுகிறது என்ற அடிப்படையையும் கைக்கொண்டார். இதனை அடிப்படையாக வைத்து இயக்கம், உந்துசக்தி, ஈர்ப்பு சக்தி போன்ற கருதுகோள்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டார்.
விடை விரைவில்!
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நியூட்டன் படித்துக் கொண்டிருந்தபோது அறிஞர் ஹேலியை ஒருமுறை சந்தித்தாராம். அப்போது சூரியனை சுற்றும் பாதையில் கோள்கள் எப்படிப்பட்ட வளைவை ஏற்படுத்தும்? என்று ஹேலி கேள்வி எழுப்பினாராம். எப்போதுமே ஒளியைப் பற்றியும் விண்பொருட்களைப் பற்றியும் ஆராய்ந்துகொண்டிருந்த நியூட்டன் நீள்வட்டப்பாதை என்றாராம்.
ஆச்சரியமடைந்த ஹேலி இதை எவ்வாறு கண்டுபிடித்தாய் எனக் கேட்டார். அதற்கு, “நான் இதற்கான முதற்கட்ட கணக்கீடுகளுடனே இருக்கிறேன். விரைவில் இதற்கான துல்லியமான விடையைத் தருவேன்” என்றாராம் நியூட்டன். அவர் சொன்னபடியே இரண்டாண்டுகளில் Philosophi Naturalis Principia Mathematica நூலை வெளியிட்டார் நியூட்டன்.
டிரினிட்டி கல்லூரி பேராசிரியர், ராயல்சொசைட்டியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர், நாணயங்கள் அச்சிடும் நிறுவனத்தின் தலைவர் என பல பொறுப்புகளில் இருந்தபோதும் அறிவியல் ஆராய்ச்சியை நியூட்டன் தொடர்ந்துகொண்டேயிருந்தார். “உண்மை என்பதை எளிமையானவற்றிலிருந்துதான் கண்டறிய வேண்டும், பல்வகைகளிலிருந்து, பல குழப்பங்களிலிருந்தும் அல்ல” என்பார் நியூட்டன். ஆம் உண்மை எளிமையானதுதானே.
(ஸ்கோப் தொடரும்)
கட்டுரையாளர்: பள்ளி தலைமையாசிரியர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
தொடர்புக்கு: thulirmadhavan@gmail.com
