

நாம் கற்பனை செய்து பார்க்க முடியாதவைகூட நவீனத் தொழில்நுட்பத்தில் சாத்தியமாகிறது. நாம் கேட்கும் கேள்விகளுக்கு எவ்வாறு ஒரு இயந்திரம் பதில் அளிக்கிறது? நாம் முகக் கவசம் அணிந்திருக்கிறோமா, இல்லையா என்பதை இயந்திரம் எவ்வாறு கண்டுபிடிக்கிறது, இவை எவ்வாறு சாத்தியமாகிறது என்பதை யோசித்ததுண்டா?
ஆரம்பக் காலத்தில் ஏற்பட்ட தொழில் புரட்சிக்கும், நவீன தொழில் புரட்சிக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை முதலில் புரிந்து கொள்வது இங்கு முக்கியம்.
ஆரம்ப கால தொழில் புரட்சியில் மனிதனின் உடல் உழைப்பை இயந்திரங்கள் குறைத்தன. நவீன தொழில் புரட்சியில் மனிதன் மூளை உழைப்பை தொழில்நுட்பம் குறைக்கிறது. அதாவது ஆரம்பக் காலத்தில் மனிதன் நடப்பதற்கு பதிலாக காரைக் கண்டுபிடித்தான். ஆனாலும் காரை மனிதன்தான் ஓட்ட வேண்டும்.
இயந்திர கற்றல் முறை வந்துவிட்டது!
காரில் பிரேக், ஆக்சிலேட்டர், கிளட்ச், ஸ்டியரிங் வீல், கியர் போன்றவை இருக்கும். மனிதன் தனது மூளையை உபயோகித்து எவ்வாறு இவற்றை உபயோகப்படுத்துவது என்று கற்றுக் கொண்டு பின்னர் சாலையில் செல்லும்போது இவற்றை எப்பொழுது பயன்படுத்துவது என்று யோசித்து செயல்பட்டான்.
உதாரணமாக, காரை கிளப்பும்போது கியரை ஒன்றிற்கு மாற்றி, மெதுவாக ஆக்சிலரேட்டரை அழுத்தி காரை கிளப்புவோம். அதேபோல் கார் சென்று கொண்டிருக்கும் போது குறுக்கே யாராவது வந்தால் பிரேக்கை உபயோகித்து காரை நிறுத்துவோம். இது பழைய தொழில்நுட்பம்.
புதிய தொழில்நுட்பத்தில் மனிதன் தனக்கு பதிலாக பிரேக், ஆக்சிலரேட்டர், கிளச், கியர், ஸ்டியரிங் வீல் போன்றவற்றைக் கட்டுப்படுத்த ஓர் இயந்திரத்தைக் கண்டுபிடித்தான். பின்னர் காரை, என்ன செய்ய வேண்டும், காரின் குறுக்கே யாராவது வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று அந்த இயந்திரத்திற்கு சொல்லிக் கொடுத்தான்.
மேலும் அது வளர்ச்சி பெற்று இயந்திரமும் பலமுறை நடந்தவற்றை நினைவில் (மெமரி) சேமித்து பின்னர் தானாகவே முன்பு நடந்தவற்றையும், தற்போது நடப்பதையும் ஒப்பிட்டு ஒரு முடிவுக்கு வருகிறது.
இது இயந்திரக் கற்றல் (Machine Learning) என்று அழைக்கப்படுகிறது. இதன் அடிப்படையே ஒரு இயந்திரத்திற்குத் தானாக யோசிக்கும் அறிவைத் தர முடியுமா என்று பொறியாளர்கள் சிந்தித்ததன் விளைவே. இது முடியுமா, சாத்தியமா என்று கேள்விகள் இன்றும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், பொறியாளர்கள் இந்த பிரிவை செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்று அழைத்து அதில் முன்னேறி வருகிறார்கள். ஆனால், என்னுடைய தனிப்பட்ட கருத்து “தானாக யோசிக்கும் அறிவை” மனிதனால் இயந்திரத்திற்குள் செலுத்த இயலாது என்பதே. ஆனால், பொறியாளர்கள் எதற்கும் சோர்ந்து விடுவதில்லை.
இந்த நவீனத் தொழில்நுட்பம் எப்பொழுது ஆரம்பமானது, எங்கு, யாரால் ஆரம்பிக்கப்பட்டது போன்ற கேள்விகளுக்கு அடுத்த வாரம் விடை கண்டறிவோம்.
தொடர்ந்து டிஜிட்டல் மொழி பேசுவோம்…
கட்டுரையாளர், பொறியாளர், தொழில்நுட்பப் பயிற்றுநர்
தொடர்புக்கு: balajeeseshadri@gmail.com