

புதுப்படம் ரிலிசாகிவிட்டால் முதல் நாள் முதல் ஷோ பார்க்க வேண்டுமா, எளிதாக ஸ்மார்ட்போனில் டவுன்லோட் செய்துவிட்டு, ஒரு அரை மணி நேரத்தில் படத்தைப் பார்த்துவிடலாம். டிக்கெட் வேண்டாம், அதற்காக கால் வலிக்கக் கூட்டத்தில் வரிசையிலும் நிற்க வேண்டாம். அதை விட முக்கியமாக ‘ஓடிடி’யில் பணம் கூட கட்ட வேண்டாம். எளிதாக இலவசமாக ஒரு புதுப்படத்தைப் பார்த்துவிடலாம். அடடே நன்றாகத்தானே இருக்கிறது, இதில் என்ன ஆபத்து இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்.
அப்படி என்றால் நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். உங்களுக்கு ஏன் அவர்கள் இலவசமாகப் படங்களைத் தரவிறக்கம் செய்யத் தருகிறார்கள்?
எந்த வித லாப நோக்கமும் இல்லாமல் ஒருவர் இணையத்தில் செயல்படுவாரா?
நிச்சயமாக இல்லை. இந்த தொடரைப் படிக்க ஆரம்பித்தவர்களுக்கு இதன் சூழ்ச்சி இப்போது ஓரளவு புரிந்திருக்கும்.
உண்மையில் நீங்கள் இலவச படங்கள் டவுன்லோட் செய்யும் போது அதனுடன் எண்ணற்ற வைரஸ்களும் ‘மால்வேர்’களையும் உங்கள் ஸ்மார்ட்போனில் டவுன்லோட் செய்து விடுகிறீர்கள். உங்களுக்கே தெரியாமல் உங்கள் செல்போனில் இருந்து பல தகவல்களை அவர்கள் திருடிப் பயன்படுத்தத் தொடங்கி இருப்பார்கள்.
ஒருவேளை நீங்கள் பணப் பரிமாற்றம் செய்ய வைத்திருக்கும் செயலியின் பாஸ்வேர்ட்கள், இன்ன பிற அந்தரங்க தகவல்கள், நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் புகைப்படங்கள் எனப் பல தகவல்கள் திருடப்பட்டு கள்ளச் சந்தையில் விற்கப்படலாம். அல்லது நீங்களே ஹேக் செய்யப்பட்டு பணம் கேட்டு மிரட்டப்படலாம்.
அதனால் நீங்கள் இலவச படங்களைத் தரவிறக்கம் செய்யும்போது உங்கள் செல்போனில் வேறு என்ன ‘ஆப்’கள் புதிதாக நுழைகின்றன என்பதைக் கண்காணிப்பது நலம்.
இந்த விஷயத்தைச் சொன்னால் நிச்சயம் ஒருவராவது “என் போனில் இருக்கும் தகவலைத் திருடினால் எனக்கு ஒரு நஷ்டமும் இல்லை, தாராளமாகத் திருடிக்கொண்டு போகட்டும்” என்பார்.
நல்லது. ஆனால், நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது, உங்கள் போனில் நுழைந்து காண்டாக்ட் லிஸ்டில் (Contact List) இருக்கும் அனைவருக்கும் உங்கள் பெயரில் ஒரு மெசெஜ் அனுப்பி, லிங்கை க்ளிக் செய்ய வைத்துவிட்டால் போதும், அவர்களின் போனிலும் நுழைந்துவிட முடியும். அதாவது எளிமையாக உங்களை போன் மூலம் நுழைந்து உங்கள் வீட்டிலிருப்பவர்களின் போனிலும் அவர்களால் நுழைந்துவிட முடியும். உங்களிடம் விலை மதிப்புமிக்க தகவல்கள் இல்லை என நீங்கள் சொல்லலாம், ஆனால், உங்கள் அப்பாவிடமோ, அம்மாவிடமோ, தங்கையிடமோ அல்லது நண்பர்களிடமோ அப்படியான தகவல்கள் இல்லை என உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?
ஆரோக்கியமாக இருக்கும் நமது உடலை வைரஸ் தாக்கினால் நம்மை ஒன்றும் செய்யாமல் விடலாம். ஆனால், நம்மிடம் இருந்து பரவும் வைரஸ் பலவீனமானவரின் உயிரை பதம் பார்த்துவிடலாம் அல்லவா?
(தொடர்ந்து பேசுவோம்)
கட்டுரையாளர் டிஜிட்டல் சமூக ஆய்வாளர்
தொடர்புக்கு: write2vinod11@gmail.com