

சந்தையில் விற்பதற்கான சில பொருட்கள் ஒரு வண்டியில் செல்கின்றன. அந்த வண்டிக்காரரோடு அந்த பொருட்களை விற்க அனுப்பப்பட்ட ஒரு சிறுவனும் செல்கிறான். கிராமத்தைக் கடந்து கொஞ்சம் மரங்களடர்ந்த காட்டிற்குள் அந்த வண்டி செல்கிறது.
அந்த வண்டிக்காரரிடமே பொருட்களை விற்கும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு தான் மட்டும் காட்டுக்குள் சென்றுவிடுகிறான் அந்த சிறுவன். பின்னர் தாம் கையோடு கொண்டுவந்த நூல்களில் ஆழ்கின்றான்.
சந்தை விற்பனை முடிந்து வண்டி வீட்டிற்குத் திரும்புகையில் நல்ல பிள்ளையாக வண்டியில் அமர்ந்து வீடு வந்து சேர்கிறான். சில நாட்கள் நகர்கின்றன. அந்த சிறுவனின் மாமா இதைக் கண்டுபிடித்துவிடுகிறார். அவனுக்குக் கல்வியின் மேல் உள்ள ஆர்வத்தைப் புரிந்துகொண்டு மேற்படிப்பில் சேர்த்துவிடுகிறார்.
யார் இந்த சிறுவன்? ஆம் நம் கதையின் நாயகன் ஐசக் நியூட்டன் (1642- 1727). குறை மாதத்தில் பிறந்ததால் குழந்தை உயிர்த்திருக்குமா என்ற சந்தேகம் கூட பலருக்கு இருந்தது. நியூட்டனின் தாயார் கருவுற்றிருந்தபோதே தந்தை இறந்துவிட்டார். கிராமத்திலேயே இருந்த பள்ளியில் தொடக்க கால கல்வியைக் கற்றார்.
இதனிடையே அவரது தாய் மறுமணம் செய்துகொண்டார். இதனால் பாட்டியிடம் வளர்ந்தார். ஆரம்பக் கல்வியை மட்டுமே முடித்த நிலையில் குடும்பத்தின் வறுமையைப் போக்க விவசாய வேலைகளில் ஈடுபட்டு தானியங்களை சந்தையில் விற்க சென்றபோதுதான் மேற்கண்ட சம்பவம் நடந்தது.
பள்ளியில் நாட்களில் மற்ற மாணவர்கள் விளையாடுகையில் நியூட்டனோ சிறு உளி, ரம்பம் போன்ற பொருட்களைக் கொண்டு பல்வேறு புதுப்புது பொம்மைகளைத் தயாரித்துக் கொண்டிருந்தார். மாதிரி காற்றலைகள், தண்ணீரை அடிப்படையாகக் கொண்ட கடிகாரங்கள் ஆகியவற்றை வடிவமைக்க முயன்றார். பின்னர் சூரியனை அடிப்படையாகக் கொண்ட கடிகாரங்களும் வடிவமைக்க முயன்றார்.
ஒருமுறை வீட்டுக்கு வந்த விருந்தினர் முப்பட்டகக் கண்ணாடியைக் (Prism) கொண்டு வந்திருந்தார். இதன் மேல் ஆவல் கொண்டு அவரிடம் அதனைக் கேட்டார். அந்த நாளில் கண்ணாடிப் பொருட்களை எடையிட்டு அதற்கான விலை கொடுத்து வாங்கும் பழக்கம் இருந்தது. அவ்வாறு எடையிட்டு வாங்குவதை விட அவர் கேட்ட அதிகவிலை கொடுத்து வாங்கி அதில் சோதனைகள் செய்தார். இதன் மூலம் சூரிய ஒளியானது பல நிறங்களின் கலவை என்று புரியவைத்தார். அப்போதிருந்த மதவாதிகள் சூரியனின் வெண்மைக்கு இவர் களங்கம் கற்பிக்கிறார் என்று கூட வாதிட்டனர்.
“நாம் அதிகமான சுவர்களைக் கட்டிக்கொள்கிறோம் பாலங்களைக் கட்டுவதில்லை” என்ற கருத்துடைய நியூட்டன் மனித உறவுகளைப் பராமரிப்பதிலும் அதிக கவனம் செலுத்தினார். சமகாலத்தில் நாம் கடந்ததுபோன்ற ஒரு பெருந்தொற்று 1665 -1666 களில் அவரது காலத்திலும் வந்தது. அப்போது அவரது கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. விடுமுறைக்காக சொந்த கிராமம் சென்றபோது அவருக்கு ஏற்பட்ட அனுபவம் உலக அறிவியல் வரலாற்றுக்கு ஒரு புதிய கண்டுபிடிப்பை அளித்தது. அது என்ன?
(தொடரும்)
கட்டுரையாளர்: பள்ளி தலைமையாசிரியர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
தொடர்புக்கு: thulirmadhavan@gmail.com