

செயலி என்பது மிகவும் குழப்பமான, பார்க்கவும் முடியாத ப்ரொகிராம்களின் தொகுப்பு. இதை யார் எழுதுகிறார்கள், நம் ஸ்மார்ட்போனில் உள்ள தகவல்கள் யார் கைக்குப் போகிறது, குறிப்பாக என்ன தகவல் போகிறது என்பதை உங்களால் ஒரு போதும் கணிக்க முடியாது. ஆகையால், ஸ்மார்ட்போனில் என்ன செயலிகளை (APP) இன்ஸ்டால் செய்கிறீர்கள் என்பதில் அதிக கவனம் வேண்டும்.
அதனால்தான் நம் போனில் உள்ள செயலிகள் கேட்கும் அனைத்து பர்மிஷன்களையும் கொடுக்கக் கூடாது. ஒரு ‘ஆப்’ என்ன வேலை செய்யப் போகிறது அதற்கு நம் ஸ்மார்ட்போனில் உள்ள கேமராவை இயக்கும் அனுமதி தர வேண்டுமா என்பதை முதலில் சிந்திக்க வேண்டும்.
செயலிகள் என்பதை யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம். உங்கள் கவனத்திற்கு வராமல், உங்கள் தகவலை திருடி, அதை வேறு ஒரு நபருக்குப் பகிரும் செயலிகளைதான் நாம் தீச்செயலிகள் என்கிறோம்.
முதலில், நீங்கள் தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டியது, செயலிகளை யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம். நீங்கள் கூட ஒரு செயலியை உருவாக்கி பலரின் பயன்பாட்டிற்கு வெளியிடலாம்.
கண்டுபிடிப்பது எப்படி?
அடுத்து சரியான செயலியை எப்படிக் கண்டுபிடிப்பது? சில எளிய வழிகள் உள்ளன.
செயலிகளை குறிப்பிட்ட ஸ்டோர்களில் இருந்துதான் தரவிறக்கம் செய்ய வேண்டும். ஆண்ட்ராய்ட் தொலைபேசி என்றால் கூகுள் ப்ளே ஸ்டோர். ஆப்பிள் என்றால் ஆப்பிள் ஐ-ஸ்டோர்.
இந்த நிறுவனங்கள் தவறான செயலிகளைத் தொழில்நுட்ப ரீதியாகக் கண்காணித்து அவற்றை ஒன்றுஆரம்பத்திலேயே அனுமதிக்காது; ஒருவேளை ஏதேனும் தவறுகள் செய்தால் அந்தசெயலிகளை தங்கள் ஸ்டோர்களில் இருந்துநீக்கவும் தயங்கமாட்டார்கள்.
அவ்வப்போது செய்திகளில் இந்தியஅரசு சில செயலிகளை தடை செய்வதைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அது முக்கியமாக சைபர்கிரைம் காரணமாகத்தான். இந்தியக் குடிமக்களின் தகவலை சமூக விரோதிகள் சேகரிப்பதாக இந்திய அரசு கண்டுபிடித்தால் அந்த செயலிகளை இந்தியாவில் உள்ள ஆப்-ஸ்டோர்களில் இருந்து நீக்கிவிடுவார்கள்.
ஆகவே ஸ்டோர்களில் இருந்து டவுன்லோட் செய்வதுதான் சரி. ஒருவேளை சந்தேகமோ, தடை குறித்த செய்திகளோ அறிந்தால் அந்த ‘ஆப்’களை உங்கள் ஸ்மார்ட்போன்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.
அதேபோல் இதற்கு நேர்மாறாக ஸ்டோர்களில் இல்லாமல், நேரடியாக வலைத்தளங்களில் இருந்து செயலிகளை ஒருபோதும் தரவிறக்கம் செய்யக் கூடாது.
அடுத்து இலவச திரைப்படங்கள் டவுன்லோட் செய்யும் செயலிகளில் உள்ள விபரீதங்களைப் பார்க்கலாம்.
(தொடர்ந்து பேசுவோம்)
கட்டுரையாளர்: டிஜிட்டல் சமூக ஆய்வாளர்
தொடர்புக்கு: write2vinod11@gmail.com