

அது 16 -ம் நூற்றாண்டு ஜெர்மனி. அந்த நாட்களில் “தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும்” என்ற பழமொழிக்கேற்ப யாருக்காவது கஷ்டம் என்றால் அங்குள்ளோரில் குரலற்றவர்களை குற்றம் சாட்டிவிடுவார்கள்.
குறிப்பாக கணவனை இழந்த பெண்களே அவர்களது குறியாக இருக்கும். அவர்களை சூனியக்காரிகள் என்று குற்றம்சாட்டி கொளுத்திவிடுவார்கள்.
இந்த காலகட்டத்தில் வறுமையிலும், ஊட்டச்சத்துக் குறைபாட்டுடனும், பார்வை கோளாறுகளுடனும் வளர்கிறது ஒரு குழந்தை. இது மட்டுமல்ல வயிறு தொடர்பான குறைபாடுகளும் பெரிய தலையோடும் பிழைத்திருப்பதே பாக்கியம் என வளர்கிறது. பின்னர் ஒருவாறு பிழைத்து தட்டுத்தடுமாறி பயின்று வேலையில் கவனம் செலுத்தி ஓரளவுக்கு உயர்வடைகிறது.
இளைஞரானதும் பிராக் நகரில் மன்னரின் கணித நிபுணராகப் பணியாற்றிவருகிறார். அந்த நேரம் அவரது தாயை சூனியக்காரி என குற்றம்சாட்டிக் கொளுத்தத் துணிகிறது ஒரு கூட்டம்.
அந்த கூட்டத்தை எதிர்த்து திறமையாக வாதாடி தாயைக் காக்கிறார் அந்த இளைஞர். அவர்களது குற்றச்சாட்டு என்ன? அதை இவர் எவ்வாறு முறியடித்தார் என்பதெல்லாம் சுவாரஸ்யமான கதை. தேடிக்கண்டுபிடித்து வாசியுங்கள். அப்படி தமது பணிப்பளுவிலும் தாயைக் காத்தவர்தான் கோள்களின் இயக்கம் பற்றிய துல்லியமான கோட்பாடுகளை விளக்கிய ஜேஹான்ஸ் கெப்ளர்.
நவீன வானியலின் தந்தை
இந்த உலகம் இன்றைக்கிருப்பது போலவே என்றைக்கும் இருக்கும் என்றார் கிரேக்க தத்துவ ஞானி அரிஸ்டாட்டில். அவர் கூறியது வளமையாய் வாழ்ந்த அரசர்களுக்கும் ஏனையோர்க்கும் வசதியாக இருந்தது. ஏன் அதனை மறுக்கப்போகிறார்கள். இவரும் தாலமி போன்ற அறிஞர்களும் பூமிதான் மையம் சூரியன் போன்ற மற்ற விண்பொருட்கள் பூமியைச் சுற்றிவருகின்றன என்ற புவி மையக் கோட்பாட்டை உயர்த்திப் பிடித்தனர்.
இதனைச் சீரமைத்து பூமி உள்ளிட்ட கோள்கள் சூரியனை சுற்றுகின்றன எனும் சூரிய மையக் கோட்பாட்டுக்கான ஆரம்பகால கருத்துக்களை கோபர்நிக்கஸ், டைகோ பிராஹே போன்றோர் கணித்தனர். இவரை அடியொற்றி கோள்களின் இயக்கம் தொடர்பான கோட்பாடுகளை கெப்ளர் உருவாக்கினார்.
நவீன வானியலின் தந்தை என அழைக்கப்படும் கெப்ளர் ஜெர்மனியிலுள்ள வைல்டர்ஸ்டாட் நகரில் 1571-ம் ஆண்டு டிசம்பர் 27-ல் பிறந்தார். மாணவராக இருந்தபோதே வான்வெளியை உற்றுநோக்கி பலவற்றையும் கற்றறிந்தார். சந்திரகிரகணம் குறித்து கூட யோசித்திருக்கிறார்.
தமது அருகில் உள்ள பள்ளிகளில் கல்வி கற்றார். ஜெர்மனி நாட்டின் டுபினின் பல்கலைக்கழகத்தில் இறையியல் படித்தார். இருப்பினும் வானியல் தொடர்பான ஆர்வங்களால் உந்தப்பட்டு அத்திசையில் பயணிக்கத் தொடங்கினார். கிராஸ் பல்கலைக்கழகத்தில் பிராஹேவின் அழைப்பை ஏற்று கணித பேராசிரியராகப் பணியாற்றினார்.
இவரது நூல் Mysterium cosmographicum மூலம் பிரசித்தி அடைந்தார். தொலைநோக்கி வேலைசெய்யும் விதத்தையும் விளக்கினார். கணிதவியலாளர், கோட்பாட்டு வானியலாளர் போன்ற சிறப்புகளுக்கும் உரியவர் இவர்.
இவரது கோள்களின் இயக்கம் தொடர்பான மூன்று விதிகளும் வானியல் அறிவியலில் புரட்சியை ஏற்படுத்தின. பலரும் நம்பிவந்தபடி கோள்கள் வட்டவடிவில் இயங்கவில்லை. நீள்வட்டப் பாதையில் இயங்குகின்றன.
சூரியனைச் சுற்றிய நீள்வட்டப் பாதையில் சுழலும் கோள்கள் சூரியனை நெருங்கும்போது வேகமாகவும் தூரமாகச் செல்லும்போது குறைந்த வேகத்திலும் இயங்குகின்றன உள்ளிட்ட அறிவியல் பார்வையை முன்வைத்தார்.
சமூகத்தில் நிலவிய தவறான நம்பிக்கைகளால் பாதிக்கப்பட்ட தனது தாயையும் காப்பாற்றி தான் நேசித்த துறையின் ஆராய்ச்சிகளுக்கு வலு சேர்த்த கெப்ளர் 1639-ல் மறைந்தார். அவரது ஆய்வுக்குப் பின்னர் வானியல் அறிவியல் புதுப்பாய்ச்சலில் வளர்ந்ததை யாரால் மறுக்க இயலும்!
(தொடரும்)
கட்டுரையாளர்: பள்ளி தலைமையாசிரியர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
தொடர்புக்கு:thulirmadhavan@gmail.com