

ஆதிகாலம் தொட்டே ஒரு வேலையை எவ்வாறு சீக்கிரமாக முடிப்பது என்பதில் மனிதர்கள் குறியாக இருந்தார்கள். மரம் வெட்டுவதற்கு, மரம் அறுப்பதற்கு, குழி தோண்டுவதற்கு என்று பற்பல கருவிகள் வடிவமைத்தார்கள்.
அதேபோல் எண்ணுவதை சுலபமாக்க மற்ற வழிமுறையை தேடினார்கள்.
ஒரு குவியலில் 268 மாங்காய்களும் அடுத்த குவியலில் 117 மாங்காய்களும் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். அதன் மொத்தத்தைக் கணக்கிடுவதற்கு ஒன்று ஒன்றாக ஆரம்பத்தில் எண்ணினார்கள். இந்த வேலையை சுலபமாக்கக் கூட்டல் முறை கண்டுபிடிக்கப்பட்டது.
அதேபோல் ஒரே எண்ணை பலமுறை கூட்டும்போது நேரம் அதிகம் ஆயிற்று. அந்த நேரத்தையும் மிச்சப்படுத்தப் பெருக்கல் கண்டுபிடிக்கப்பட்டது. பெருக்கலையும் வேகமாக செய்துமுடிக்க ‘பெருக்கல் அட்டவணை’ வடிவமைக்கப்பட்டது. ஆகவே, எப்படி வேலையை சுலபமாக்குவது என்பதை நோக்கித்தான் மனிதனின் பல முயற்சிகள் உள்ளன.
தானாக செய்ய வேண்டுமே!?
பிறகு தனக்கு கீழே வேலை செய்வதற்கு ஆட்களை நியமித்தார்கள். ஆட்களிடம் என்ன வேலை செய்யவேண்டும் என்று கட்டளையிட்டு வேலை வாங்கினார்கள். அதே காலகட்டத்தில் கணிதம், அறிவியல், பொறியியல் ஆகியவை மெதுவாக வளரத்தொடங்கின.
அப்போது, ஒரு பொறியாளர் தனது தந்தை இரவு பகலாக அலுவலகத்தில் பணி செய்வதைப் பார்த்து அவரது வேலையை சுலபம் ஆக்குவதற்கு இயந்திரவியல் பாகங்களைக் (Mechanical Parts) கொண்டு ஒரு இயந்திரத்தை உருவாக்கினார். அந்த இயந்திரம், கொடுக்கப்பட்ட கணித செயல்பாடுகளை பிறர் உதவியின்றி தானாக செய்து விடைதந்தது.
அந்த கருவியின் பெயர் “டிஃபரன்ஸ் என்ஜின்” (Difference Engine). அந்த பொறியாளரின் பெயர் சார்லஸ் பாப்பேஜ். அவர் அந்த இயந்திரத்தைக் கண்டுபிடித்த ஆண்டு 1832. இதுதான் உலகின் முதல் தானியங்கி கணக்கிடும் இயந்திரம்.
கணினியின் வளர்ச்சி
இந்த கணக்கிடும் இயந்திரத்துக்கு “கம்ப்யூட்டர்” என்று பெயரிட்டனர். கணினி என தமிழில் பெயர்சூட்டப்பட்ட கம்ப்யூட்டரைப் பற்றி தெரிந்துகொள்ளாமல் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை புரிந்துகொள்வது கடினம். நவீன தொழில்நுட்பத்திற்கு கணினியைப் போலவே வேறொரு துறையும் பெரும் உதவி புரிந்துள்ளது.
அந்த துறையின் பெயர் மின்னணுவியல் (Electronics). இவற்றை எல்லாம் பற்றி வரும் வாரங்களில் விரிவாகப் பார்ப்போம். முதலில் கண்டுபிடிக்கப்பட்டது இயந்திரவியல் கணினி (Mechanical Computer). அடுத்து பொறியியல் துறையின் வளர்ச்சி காரணமாக மின்சாரவியல் கணினி (Electrical Computer) கண்டுபிடிக்கப்பட்டது.
கடைசியாக மின்னணுவியல் கணினி (Electronic Computer) கண்டுபிடிக்கப்பட்டது. முதல் மின்னணுவியல் கணினியின் பெயர் ENIAC. கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1945. அன்று தொடங்கிய தானியங்கி கணினியின் வளர்ச்சி இன்றுவரை நிற்கவே இல்லை.
தொடர்ந்து டிஜிட்டல் மொழி பேசுவோம்…
கட்டுரையாளர், பொறியாளர், தொழில்நுட்பப் பயிற்றுநர்