

டிஜிட்டல் பாதுகாப்பில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டிய விஷயம் பாஸ்வேர்ட். இதற்கு பொருள் உங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு ரகசிய சொல் அல்லது எண்.
தற்போதைய ஸ்மார்ட்போன்களில் நாம் பின் நம்பர், பேட்டர்ன் எனப் பலவற்றைப் பயன்படுத்துகிறோம். ‘பாஸ்வேர்ட்’ என்ற சொல்இவை அனைத்தையும் குறிக்கும். உங்களுடைய டிஜிட்டல் ஆவணங்கள், பயனாளிகணக்கு ஆகியவற்றை பாஸ்வேர்ட்கள்மூலம் உங்களால் பாதுகாக்க முடியும்.
மின்னஞ்சல் அல்லது உங்கள் சமூகவலைத்தள கணக்குகளுக்கு மட்டும்தான் பாஸ்வேர்ட் என நினைக்க வேண்டாம். டிஜிட்டல் ஃபைல்கள், ஃபோல்டர்கள், செயலிகள் எனப் பலவற்றுக்கும் நீங்கள் பாஸ்வேர்ட் அமைத்துக் கொள்ளலாம்.
உங்கள் அந்தரங்க தகவல்களை, மற்றவர்களுக்குத் தெரியாமல் பாஸ்வேர்ட் மிகவும்பத்திரமாகப் பாதுகாக்கிறது. உங்கள் பணத்தையும்தான். ஆனால், நம் மக்களிடையே பாஸ்வேர்ட் வைப்பதில் நிறைய கவனக்குறைவும் அலட்சியமும் உள்ளது.
உலகில் பல பயனர் கணக்கின் பாஸ்வேர்ட் என்ன தெரியுமா? ‘Password’தான். பலரின் பின் நம்பர் 1234. அதுவே ஆறு இலக்க பின் நம்பர் என்றால் 123456. பலரின் ATM ‘பின்’ நம்பரும் இதேதான்.
உங்கள் பாஸ்வோர்ட் என்பது உங்கள் வீட்டின் சாவியைப் போன்றது. பூட்டை அலட்சியமாகப் பூட்டுபவரும், சாவியை அலட்சியமாக கையாளுபவரும், திருட்டில் இருந்து தப்பிப்பது கஷ்டம். அதனால் உங்கள் பாஸ்வேர்ட்களை அமைப்பதிலும், பகிருவதிலும் அசட்டை வேண்டாம்.
ஒருவரின் பாஸ்வேர்ட் கணிக்க ஹேக்கர்கள் பல்வேறு உளவியல் நுட்பங்களை கடைப்பிடிப்பார்கள். அதன் பெயர் Social engineering. இதைப் பற்றி நாம் பின்னால் விரிவாக விவாதிப்போம்.
உங்கள் பாஸ்வேர்ட்டை எவ்வளவு தூரம் கணிக்க முடியாத அளவு வைக்கிறீர்களோ அவ்வளவு நீங்கள் உங்கள் டிஜிட்டல் வாழ்க்கையை பாதுகாப்பாக வாழலாம். அதுபோல யாரிடமும் பாஸ்வேர்டை பகிரவும் கூடாது. பகிரும் நிலை வந்தாலும், உடனடியாக மாற்றிவிட வேண்டும்.
உங்கள் பாஸ்வேர்டை பாதுகாப்பாக வைக்க சில வழிகள்:
# எழுத்துக்கள், எண்கள் வாய்ப்பிருந்தால் சிறப்பு எழுத்துக்கள் (@,!,#,$,%) கலந்து பாஸ்வேர்டை வைக்கவும்.
# பாஸ்வேர்ட் சிறியதாக வைக்க வேண்டாம்.
# உங்களைப் பற்றிய தகவல்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றும் பட்சத்தில் மிக எளிதாகக் கணிக்கும்படியான பாஸ்வேர்ட்களை வைக்க வேண்டாம்.
# எண்கள் எனும் பட்சத்தில் எளிதில் யூகிக்கக் கூடிய எண்கள், உங்களுடைய பிறந்த தேதி, வருடம் ஆகியவற்றை வைக்க வேண்டாம்.
# ஒவ்வொரு பயனர் கணக்கிற்கும் வெவ்வேறு பாஸ்வேர்ட்களை வைக்கவும். அதேபோல் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் பாஸ்வேர்ட்களை மாற்றிக்கொண்டே இருக்கவும்.
# மிகவும் முக்கியமானது பாஸ்வேர்ட்களை எழுதி வைக்க வேண்டாம்.
(தொடர்ந்து பேசுவோம்)
கட்டுரையாளர்: டிஜிட்டல் சமூக ஆய்வாளர்
தொடர்புக்கு: write2vinod11@gmail.com