

தன்னை பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள் என உங்களிடம் நண்பர் கேட்கிறார் என வைத்துக்கொள்வோம். உங்களுக்கு அவரை பிடிக்கவில்லை. இருந்தாலும் முகத்தில் அடித்தார்போல சொல்ல ஒருவித தயக்கம் உள்ளது. கொஞ்சம் போல நல்ல விதமாகச் சொல்லுவீர்கள்.
அதையே அவர் தொலைபேசியில் கேட்டால், கொஞ்சம் உண்மையைச் சொல்வீர்கள். அதையே உங்களுடைய பெயரை குறிப்பிடாமல் ஒரு காகிதத்தில் தட்டச்சு செய்து தரச் சொன்னால்? அப்படியே உண்மையைப் போட்டு உடைத்துவிடுவீர்கள். நம்முடைய அடையாளம் எவ்வளவு தூரம் மறைக்கப்படுகிறதோ அந்த அவ்வளவு நம் மனதில் உள்ளதை வெளியே சொல்லுவோம். ஒருவேளை நம்முடைய மனதில் தீய விஷயங்கள் இருந்தால்?
மாய மனிதன் என்ன செய்வான்?
ஒரு மாய துணியை போர்த்திக்கொண்டதும் நீங்கள் இருப்பதை பிறரால் பார்க்க முடியாது என்கிற நிலை வந்தால், நீங்கள் என்னென்ன செய்வீர்கள்?
பல பேர் நல்லது செய்யலாம். ஆனால், சிலர் தீய செயல்களில் ஈடுபடக் கூடும்.
இதே நிலை இணையத்துக்கும் பொருந்தும். இணையம் செயல்படும் முறையில் இன்று வரை நம் உண்மையான பெயர், அடையாளங்கள் பரிசோதிக்கப்படுவது இல்லை. அதனால் சமூகவலைத்தளங்களில் நீங்கள் கொடுப்பதுதான் பெயர், ஊர் எல்லாம். இதனால் ஒருவித ரகசியத் தன்மை பயனாளர்களுக்குக் கிடைக்கிறது.
ஆனால், உண்மையில் உங்களுடைய ஐபி அட்ரஸ், பிற அடையாளங்கள், உங்கள்ஸ்மார்ட்போன் எண், லொகேஷன் என எல்லாம் உங்களுக்கு இணையச் சேவை வழங்கும் நிறுவனத்துக்கும், காவல் துறைக்கும் தெரியும். பொதுவாக சமூகவலைத்தளத்தில் உலவுபவருக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. சமூக ஊடகங்களான ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்றவற்றின் வழியாக உங்களுக்குக் கிடைத்திருக்கும் புதிய நண்பர் உண்மையிலேயே ஆணா, பெண்ணா, அவரது உண்மையான ஊர் தஞ்சாவூரா, துபாயா, நியூயார்க்கா இதெல்லாம் உடனடியாக தெரியவாய்ப்பில்லை.
இப்படியான உண்மையான அடையாளத்தை மறைத்துக் கொண்டு ரகசியமாக உலாவலாம் என்கிற எண்ணத்தில் மயங்கி சிலர் மரபுகளையும் சட்டங்களையும் மீறிவிடுகிறார்கள். இதைதான் சைபர் உளவியலின் தந்தை என்றழைக்கப்படும் ஜான் சுலர் ‘ஆன்லைன் இன்ஹிபிஷன் எஃபெக்ட்’ (Online Inhibition Effect) என்கிறார்.
எச்சரிக்கையோடு யோசி!
இதனால், நாம் யாரை நம்ப வேண்டும் என்பதைதான் முதலில் இணையத்தில் தெரிந்து கொள்ள வேண்டும்
# நம்மை பற்றிய தகவலை யாருக்குக் கொடுக்கலாம் என்பதை நிச்சயம் யோசிக்க வேண்டும்.
# சமூக வலைத்தளங்களில், விவாத தளங்களில் சாட் செய்யும் போது எச்சரிக்கை தேவை.
# தனிப்பட்ட தகவல்களைப் பதிவிடும் பகுதியில் அதிகபட்சம் மின்னஞ்சல் முகவரியை கொடுக்கலாம். ஆனால், பாஸ்வோர்ட், அலைபேசி எண், ஆதார் எண், அரசு கொடுத்திருக்கும் இதர அடையாளங்களைப் பகிர வேண்டாம்.
# நீங்கள் உலாவும் வலைத்தளங்கள், விவாததலங்கள், ஆப்களில் உங்கள் ஸ்மார்ட்போன் எண்ணை கொடுக்க வேண்டாம்.ஒருவேளை வலியுறுத்திக் கேட்டால், அந்நிறுவனத்தின் privacy policy-ஐ படித்துப் பாருங்கள். உங்களுடைய அலைபேசி எண்ணை தவறாக பயன்படுத்த மாட்டார்கள் என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
# உங்கள் மொபைல் எண் கொடுத்தால் பரிசு கொடுப்போம், குலுக்கல் பரிசு கொடுப்போம் என்று கேட்டாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
# நண்பர்களின் சமூக வலைத்தள பக்கங்களிலும் அனைவரும் பார்க்கும் கமெண்ட் செக்ஷனில் உங்கள் எண்ணை பகிர வேண்டாம்.
(தொடர்ந்து பேசுவோம்)
கட்டுரையாளர்: டிஜிட்டல் சமூக ஆய்வாளர்
தொடர்புக்கு: write2vinod11@gmail.com