

அது 1783-ம் ஆண்டு. பிரான்ஸ் நாட்டின் ஓரிடத்திலிருந்து பலூனை விண்ணில் ஏவும் முயற்சி நடைபெறுகிறது. இதை பார்க்க கூட்டம் கூடுகிறது. கூட்டத்திலிருக்கும் ஒருவர், “இப்படி பலூனைப் பறக்கவிடுவதால் என்ன பயன்?” என்று கிண்டலடிக்கிறார்.
அங்கிருந்த ஒருவர் “ஆமாம் பிறந்த குழந்தையால் என்ன பலன் இருக்கும்” என்று கிண்டலான, ஆனால் நியாயமான பதிலளிக்கிறார். எந்த அறிவியல் உண்மையானாலும் அது கண்டுபிடிக்கப்படும் காலத்தைவிட பிற்பாடு அதிக அளவிலான பலனை அளித்துவருவது கண்கூடு என்றார் ஒரு அறிவியலாளர்.
இவரேதான் பின்வருமாறும் கூறினார், “இறந்த பிறகும் நீங்கள் மறக்கப்படாமல் இருக்க வேண்டுமானால், ஒன்று சிறந்த படைப்புகளை எழுதுங்கள் அல்லது பிறர் உங்களைப் பற்றி எழுதும் அளவுக்கு அர்த்தமுள்ள வாழ்க்கை வாழுங்கள்”.
பெஞ்சமின் பிராங்க்ளின் என்று அழைக்கப்படும் அறிவியலாளர்தான் இப்படிப்பட்ட கருத்துக்களைக் கூறியவர். அமெரிக்காவில் எளிய குடும்பத்தில் பிறந்தவர் பெஞ்சமின் பிராங்க்ளின். குடும்பத்தில் நிலவிய கடும் வறுமை காரணமாக இவரால் முறைப்படியான கல்வியைப் பெற இயலவில்லை.
ஒரு அச்சகத்தில் உதவியாளராகப் பணியாற்றினார். இதன் காரணமாக அங்கு பதிப்பிக்க வரும் நூல்கள் பலவற்றையும் வாசிக்கும் வாய்ப்பைப் பெற்றார். இதனாலேயே பின்னாட்களில், நடமாடும்இரவல் நூலகங்களை உருவாக்க அரும்பாடுபட்டார். வாழ்க்கையின் தொடக்கக்காலத்தில் பத்திரிக்கைகளுக்குக் கட்டுரை எழுதிக்கொண்டும் பதிப்பித்துக் கொண்டும் இருந்த இவர் ஒரு கட்டத்தில் இவரே பத்திரிக்கைகளை நடத்தவும் தொடங்கினார்.
அமெரிக்காவின் சுதந்திரப்போராட்டத்திலும் பங்கேற்ற இவர் இதற்காக அரும்பாடுபட்டார். பிரான்ஸ் அரசாங்கத்தோடு நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் பங்கேற்ற முக்கியப் பிரமுகர் பின்னாட்களில் அமெரிக்காவின் சுதந்திரத்திற்குப் பிறகு அமெரிக்காவின் சட்டவரைவையும் உண்டாக்கும் பொறுப்பையும் ஏற்றவர்.
எல்லோருக்கும் பயன்படட்டுமே!
அறிவியலில் இவரது ஆர்வம் அளவுகடந்தது. “பென்சில்வேனியா அடுப்பு” என்ற ஒரு கண்டுபிடிப்பு பிரபலமானது. இது அப்போதிருந்த பல அடுப்புகளைவிட நேர்த்தியானதாகவும் குறைந்த அளவிலான சக்தியைப் பயன்படுத்தி அதிக வெப்ப ஆற்றலை அளிப்பதாகவும் இருந்தது. மின்னல் என்பது ஒருவகை மின்சார ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதா என்பதை தனது பட்டுநூலினைக் கொண்டு பறக்கவிடப்பட்ட பட்டம் மூலம் கண்டறிந்தவர்.
இன்றைக்கு உயரமான கட்டிடங்கள் அனைத்தின் மீதும் நிறுவப்படும் இடிதாங்கியினை முதன்முதலில் வடிவமைத்த பெருமைக்குரியவரும் இவரே. பயிர்களுக்கு உரமிட்டால் அவை செழிப்பாக வளரும் என்றகருத்தையும் வெளியிட்டவர். வயது முதிர்வில் ஏற்படும் கிட்டப் பார்வை மற்றும்தூரப்பார்வை இரண்டு குறைபாடுகளுக்கும் சேர்த்து அளிக்கப்படும் ஒருவகைகண்ணாடியும் இவரது கண்டுபிடிப்பேயாகும்.
இப்படிப்பட்ட பல கண்டுபிடிப்புகளுக்கும் இவர் காப்புரிமை பெறவில்லை. ஏன் பெறவில்லை என்ற கேள்விக்கு மற்றவர்களின் கண்டுபிடிப்புகளை நாம் சுதந்திரமாகப் பயன்படுத்தும்போது நமது கண்டு பிடிப்புகளும் மற்றவர்களுக்குப் பயன்படட்டுமே என்றாராம். எவ்வளவு பரந்த மனது பாருங்கள்.
பகைவரையும் நேசிப்போம்!
இவ்வாறான பல கண்டுபிடிப்புகளுக்கும் சாதனைகளுக்கும் காரணமாக அமைந்தது இவரது நிதி மேலாண்மையும் நேர மேலாண்மையுமே ஆகும். இதனை தம் வாழ்க்கையின் பல நேரங்களிலும் உணர்த்தியுள்ளார்.
தொடக்க காலங்களில் இவர் தயாரித்த ஒருவகை நாட்காட்டி சிறந்த விற்பனையாகும் படைப்பாக இருந்தது. சிறந்த சிந்தனைகளையும் இவர் தம் வாழ்நாளில் பரப்பினார். “நேர்மையோடும் சிக்கனமாகவும் வாழ்ந்து கடும் உழைப்பால் ஒருவர் தன்னை வறுமையிலிருந்து விடுவித்துக்கொள்ள இயலும்”, “உங்கள் பகைவர்களை நேசியுங்கள் அவர்கள் உங்கள் குறைகளை சொல்வார்கள்”, “என்னிடம் சொல்லுங்கள் நான் மறப்பேன், எனக்கு கற்பியுங்கள் நான் நினைவில் கொள்வேன் என்னை ஈடுபடுத்துங்கள் நான் கற்பேன்” என்பது போன்றவை இவரது சிறந்த சிந்தனை துளிகளில் சில.
(ஸ்கோப் நீளும்)
கட்டுரையாளர்: பள்ளி தலைமையாசிரியர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம். தொடர்புக்கு: thulirmadhavan@gmail.com