அறிவியல்ஸ்கோப் - 2: கல்யாணத்தை மறந்த மாப்பிள்ளை! :

அறிவியல்ஸ்கோப் - 2: கல்யாணத்தை மறந்த மாப்பிள்ளை! :
Updated on
2 min read

ஒரு தேவாலயத்தில் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்துகொண்டிருக்கிறது. உறவினர்கள் வரத்தொடங்கிவிட்டனர். மணப்பெண்ணும் வந்துவிட்டார். திருமண நேரமும் நெருங்கிவிட்டது. ஆனால், மாப்பிள்ளையைக் காணவில்லை.

பலரும் திரைப்படத்தின் விறுவிறுப்பான காட்சிகளில் இருக்கையின் நுனிக்கு வந்துவிடுகின்றனர். அந்த தேவாலயத்தின் பாதிரியார் கொஞ்சமும் பதற்றமின்றி, “அந்த பையன் வேறு எங்கிருப்பான் அவனது ஆய்வுக்கூடத்துக்குச் செல்லுங்கள், கண்டுபிடித்துவிடலாம்” என்கிறார். அவரது கூற்றுப்படியே ஆய்வுக்கூடத்துக்குச் சென்று மாப்பிள்ளையை அழைத்துவருகின்றனர்.

யார் அந்த மாப்பிள்ளை? வேறு யார்! இன்றைக்கு நோய்களைப் பற்றிய அறிவியலை நுணுக்கமாகக் கண்டறிந்த லூயி பாஸ்டர்தான். அந்த அளவுக்கு ஆராய்ச்சியில் ஈடுபாடு கொண்டவர். பால் போன்ற உணவுப்பொருட்கள் கெட்டுப் போகாமலிருக்க உயர்ந்த அளவுக்கு வெப்பமேற்றி குளிர்விக்கும் முறை இவரது பெயராலேயே ‘பாஸ்டுரைசேஷன்’ என்று அழைக்கப்படுகிறது.

நோய்களின் உருவாக்கத்தில் கிருமிகளின் பங்களிப்பைக் கண்டறிந்தது இவரது பெரிய சாதனை. நாய்க்கடிகளின் மூலம் பரவும் ரேபீஸ் வைரசுக்கு எதிராக இவரது தடுப்பூசி பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதற்காக ரேபீஸ் தொற்றுள்ள நாயின் வாயிலிருந்து உமிழ்நீரினை தாமே உறிஞ்சி எடுத்தார். அந்த அளவுக்கு இடரை எதிர்கொள்ளத் தயாராயிருந்தவர்.

பட்டுப்பூச்சியைக் காப்பாற்றியவர்!

பிரான்சு நாட்டில் டோல் என்ற குக்கிராமத்தில்தான் லூயி பாஸ்டர் பிறந்தார். இக்கிராமத்தில் 1822 டிசம்பர் 27-ம்தேதி தந்தை ஜோசப் மற்றும்தாய் எதியா நெயில் ஆகியோரது மகனாகப் பிறந்தார். படைவீரராகப் பணியாற்றிய இவரது தந்தை லூயி ஆசிரியராக வரவேண்டும் என ஆசைப்பட்டார்.

இவரது குடும்ப சூழ்நிலைக்கேற்ப பல்வேறு கல்வி நிலையங்களிலும் சிரமப்பட்டுப் பயின்று முன்னேறினார். அடிப்படையில் தோல் பதனிடும் குடும்பத்திலிருந்து வந்து படிப்படியாக உயர்ந்து வேதியியலில் ஆராய்ச்சிப் படிப்பு வரை முன்னேறியது அந்த நாட்களில் கற்பனைகூட செய்துபார்க்க இயலாத சாதனை.

1865-ம் ஆண்டில் பட்டுப்பூச்சிகளில் பரவிய ஒரு நோய் பட்டுநூல் தொழிற்சாலைகளைப் பாடாய்ப்படுத்தியது. நுண்ணுயிரியலில் இவரது ஆர்வத்தைக் கண்ட சிலர்பாஸ்டரை அணுகி “இதற்கு ஏதாவது செய்யஇயலுமா பாருங்கள்” என்றனர். இவரும்மூன்றாண்டுகளுக்கும் மேலாக உழைத்துஇரண்டு வகையான நோய்களால் பட்டுப்பூச்சிகள் பாதிக்கப்படுகின்றன எனவும் அவற்றின் பரவலைத் தடுக்க இயலும் என்றும் கண்டறிந்து கூறினார்.

கடமையே கண்!

இதுபோலவே அப்போது பிரான்சில் இயங்கிய ஒயின் தொழிற்சாலையில் அதிகஅளவிலான ஒயின் புளித்துப் போய் வீணாகிக் கொண்டிருந்தது. இதற்கும் வழிகண்டுபிடித்துத் தருமாறு அப்போதைய அரசர் நெப்போலியன் இவரிடம் வேண்டிக்கொள்ள அதற்கும் வழிகண்டறிந்தார். அதாவது 50 முதல் 60 டிகிரி செல்சியசுக்கு ஒயினை வெப்பப்படுத்திக் குளிர்வித்தால் நீண்ட நாட்களுக்கு அது கெட்டுப்போகாமல் இருக்கும் என்று கண்டறிந்து கூறினார். இதுவே இன்றைக்கு அவரது பெயராலேயே பாஸ்டுரைசேஷன் என்று அழைக்கப்படுகிறது.

பட்டுப்பூச்சியில் ஏற்பட்ட நோய்கள் தொடர்பாக அவர் ஈடுபட்டிருந்தபோது அவரது மூன்றுகுழந்தைகள் வரிசையாக இறப்பைத் தழுவின. ஆனாலும் மனம் தளராது இவர் முயற்சியைத் தொடர்ந்து கொண்டிருந்தார். அப்போது நண்பர்களில் சிலர் இவரை அணுகி, “நீங்கள்தீரமிக்கவர் அதனால் தான் இப்படி செயலாற்றுகிறீர்கள்” என்றனர். ஆனால், இவரோ “எனக்குத் தீரமிருக்கிறதா என்றெல்லாம் தெரியாது ஆனால் எனக்கு எனது கடமை தெரியும்” என்றாராம்.

வெறி நாய்க்கடியால் பாதிக்கப்பட்டோர் நாய்போல குரைத்து இயல்புக்கு மீறி செயல்பட்டு இறந்து கொண்டிருந்தனர். இதற்கு அறிவியல் பூர்வமான சிகிச்சைகள் இல்லாமல் இருந்தது. சில நாடுகளில் கடிக்கப்பட்ட இடத்தில் சூடு வைத்து குணப்படுத்திக்கொண்டிருந்தனர். இந்தியா போன்ற நாடுகளிலோ நாய்களுக்குப் பேய் பிடிப்பதனால்தான் அது கடிக்கிறது எனவே அடிபட்ட இடத்தை செருப்பால் அடித்துப் பேயை விரட்டுவோம் என களத்தில் இறங்கினர்.

ஆனால், ரேபீஸ் வைரசைத் தனியாகப் பிரித்தெடுத்து நோயைப் பரப்பும் கிருமியையே பதப்படுத்தி உடலுக்குள் செலுத்தும் முறையைக் கண்டறிந்து இவர் வெற்றி பெற்றார். இதற்காக இவர் அடைந்த இன்னல் கொஞ்ச நஞ்சமல்ல. இப்போது போலவே அப்போதும் மருந்துகளைச் சோதிப்பதில் பல கட்டுப்பாடுகள் இருந்தன. நாய் கடித்த ஒருநபரின் மகனுக்கு எவ்வித அரசு அனுமதியும் பெறாமல் செலுத்தி வெற்றி கண்டார்.

(தொடரும்)

கட்டுரையாளர்: பள்ளி தலைமையாசிரியர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

தொடர்புக்கு:thulirmadhavan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in