தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு செயற்கைக்கோள் வடிவமைப்பு போட்டி

தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு செயற்கைக்கோள் வடிவமைப்பு போட்டி
Updated on
1 min read

இரா.வினோத்

தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சிஅமைப்பின் (என்டிஆர்எஃப்) தலைவரும், விஞ்ஞானியுமான‌ மயில்சாமி அண்ணா துரை, அந்த அமைப்பின் இயக்குநர் வி.டில்லிபாபு ஆகியோர் பெங்களூருவில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

பெங்களூருவில் உள்ள தேசியவடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சிஅமைப்பின் பொன் விழா ஆண்டையொட்டி, இந்த ஆண்டு தேசியஅளவிலான செயற்கைக்கோள் வடிவமைப்பு போட்டி நடத்தப்படுகிறது. இதில் 8-ம் வகுப்பு முதல் 12-ம்வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். ஒரு குழுவில் அதிகபட்சம் 5 பேர் இருக்கலாம்.

மாணவர்கள் தங்களின் புதுமையான யோசனைகளின் மூலம் 3.8செ.மீ கன சதுரத்திற்குள் அதிகபட்சம் 50 கிராம் எடை உடைய செயற்கைகோளின் தாங்கு சுமையை (Pay Load) வடிவமைக்க வேண்டும். இதில் புதுமையான வடிவமைப்பு, செயல்படும் விதம் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த 12 யோசனைகள் தேர்ந்தெடுக்கப்படும். தேர்வுசெய்யப்படும் மாணவர்களுக்கு செயற்கைக்கோள் வடிவமைப்பு தொடர்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். முப்பரிமாணத்தில் அச்சிடப்பட்ட 3.8 செ.மீ. கன சதுர செயற்கைக்கோள் பெட்டியும் இலவசமாக வழங்கப்படும். இறுதியில் தேர்வு செய்யப்பட்ட மாணவ குழுக்களின் 12 செயற்கைக்கோள்கள் சென்னையிலிருந்து ஏவப்படும்.

போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் என்.டி.ஆர்.எஃப் நிறுவனத்தின் இணைய‌தளத்தில் (www.ndrf.res.in) தங்கள் விவரங்களையும் புதுமையான செயற்கைக்கோளின் தாங்கு சுமை யோசனைகளையும் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பிக்கக் கடைசி நாள் நவம்பர் 25-ம்தேதி. விண்ணப்பக் கட்டணம் கிடையாது. போட்டியின் முடிவுகள் டிசம்பர்15-ம் தேதி என்.டி.ஆர்.எஃப் இணைய‌தளத்தில் அறிவிக்கப்படும்.

போட்டி குறித்த சந்தேகங்களுக்கு ndrf85@gmail.com என்ற மின்னஞ்சலிலும், 080-2226 4336 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in