புதுமை புகுத்து - 18: கொட்டும் நீர் ஏற்படுத்தும் சப்தம்

புதுமை புகுத்து - 18: கொட்டும் நீர் ஏற்படுத்தும் சப்தம்
Updated on
2 min read

மழை பொழியும்போது கூரையிலிருந்து ஒழுகும் நீர் நிலத்தில் தேங்கியுள்ள நீரில் மோதும்போது 'டொக் டொக்’ என்று ஓசை ஏற்படுத்துகிறது. குழாயைத் திறந்து குவளையில் தண்ணீரைப் பிடிக்கும்போது ’கொடகொட’வெனச் சப்தம் எழும்புகிறது.

கொதிக்கும் தேநீரைக் குவளையிலிருந்து பருகும் கப்புக்கு ஊற்றும்போது முதலில் கப் அருகே துருத்தி இருக்கும். தேநீரை ஊற்ற ஊற்ற இயல்பாகவே தேநீர் குவளையை உயரே எடுத்துச் செல்கிறோம். இதன் தொடர்ச்சியாக எழும் ’சொர்ர்ர்’ என்ற சபதம் உயர்ந்தெழுகிறது.

சியோல் தேசியப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மௌத் பௌடினா, ஜூனோஹ் கிம், ஹோ-யங் கிம் ஆகியோர் குவளையில் உள்ள நீரின் மீது குழாய் நீர் விழும்போது ஏன் சில சமயம் கூடுதல் ஓசையோடும் சில சமயம் குறைந்த ஓசையோடும் ஒலி எழும்புகிறது என ஆய்வு செய்தனர். இதன் மூலம் வியக்கத்தகு விடையைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வைப் பயன்படுத்தி ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு போன்றவற்றை அளக்கும் நவீனக் கருவிகளைத் தயார் செய்யலாமென ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

குமிழி எழுப்பு ஓசை: நீர் நிரம்பிய குவளையின் சிறிய மூக்கு துவாரத்தின் வழியே நீரை விழச் செய்து ஏற்படும் சப்தத்தைப் பதிவு செய்து ஆய்வு செய்தனர். விழும் நீர் ஏற்படுத்தும் குமிழிகளை கேமரா கொண்டு பதிவு செய்தனர். ஒலிவாங்கி கொண்டு ஏற்படும் சப்தத்தையும் அளவீடு செய்து கணினி மூலம் பகுப்பாய்வு செய்தனர். மூக்கு துவாரத்தின் வாய் அகலத்தைக் கூட்டிக் குறைத்தும்; விழும் தொலைவைக் கூட்டிக் குறைத்தும் ஆய்வு செய்து பார்த்தனர்.

முதலில் சில மில்லி மீட்டர் வாய் அளவு உடைய நுண் துருத்தி மூலம் நீரைப் பல்வேறு உயரங்களிலிருந்து நீர் நிரம்பிய குவளையில் விழச் செய்து ஆய்வு செய்தனர். கொட்டும் உயரம் குறைவாக இருந்தபோது விழும் நீர்க் கசிவு மெல்லிய குச்சிபோல அமைந்தது. குச்சி போன்ற வடிவில் கொட்டிய நீர் ஒழுக்கு குவளையின் திரவத்தின் உள்ளே பாய்ந்து சென்றது. அதன் ஊடே திரவத்தின் உள்ளே சென்ற காற்றுக் குமிழி வெடித்து ஓசை ஏற்படுத்துகிறது எனக் கண்டனர்.

குவளையில் உள்ள திரவத்தின் மீது மோதும் நீர் சப்தம் ஏன் ஏற்படுத்துகிறது? விழும் நீர் திவலைகளின் கீழே காற்று உள்ளது. திவலைகளின் கணத்தில் உந்தப்பட்டு சிறிதளவு காற்றும் திவலையோடு திவலையாகக் குவளையில் உள்ள திரவத்தில் புகுகிறது. குவளை திரவத்தில் புகுந்த காற்று சிறு குமிழியாக வடிவெடுத்து மேல் நோக்கி மிதக்கிறது. மேற்புரத்தை அடைந்ததும் குமிழி வெடிக்கிறது. இந்த வெடிப்பே சப்தமாக வெளிப்படுகிறது எனக் கண்டுபிடித்தனர். அதாவது கூடுதல் குமிழிகள் உருவானால் கூடுதல் வெடிப்பு ஏற்பட்டுக் கூடுதல் சப்தம் கேட்கும்.

உயரமும் தடிமனும்: துருத்தியின் உயரத்தை அதிகரித்தபோது காற்றின் ஊடே கொட்டும் தொலைவு கூடியது. கொட்டும் நீர் தள்ளாடியது. காற்றில் தள்ளாடிய நீர் ஒழுக்கு மணிமணியாக பிரிந்து சிறுசிறு திவலைகளின் தொடராக மாறியது. திவலைகள் குவளையில் உள்ள நீரில் மோதியபோது கூடுதல் குமிழிகள் உருவாயின; எனவே கூடுதல் சப்தம் எழுந்தது. அதாவது உயரம் கூடினால் சப்தம் கூடும் எனக்கண்டனர்.

அடுத்ததாகத் துருத்தியின் வாய் அகலத்தைக் கூட்டிக் குறைத்தும் ஆய்வு செய்தனர். நுண் துருத்தியின் வாய் அகலம் குறைவாக இருந்தால் கொட்டும் நீர் மெலிந்து விழும். மெலிந்து கொட்டும் நீர் கூடுதல் சப்தம் எழுப்புகிறது எனவும், வாய் பெரிதாக இருந்தால் பொலபொலவென விழும் நீர் குறைவான சப்தம் எழுப்புகிறது எனவும் கண்டனர். அதாவது கொட்டும் நீரின் தடிமனைப் பொருத்து சப்த அளவு மாறுபடுகிறது.

வாய் பெரிதான துளை வழி விழும் நீரைக்காட்டிலும் நுண் துளைவாய் வழியே வெளிப்படும் மெலிந்த நீர் பிரிந்து கூடுதல் திவலைகளாகக் கீழே விழுந்தன. நீர் மூலக்கூறுகள் இடையே உள்ள பிணைப்பின் காரணமாகத் தடிமனான நீரொழுக்கை ஒப்புநோக்கும்போது மெலிந்த நீரொழுக்கு எளிதில் பிரிந்து திவலைகளாக மாற முடிந்தது. கூடுதல் திவலைகள் கூடுதல் சப்தம் எழுப்பும்; எனவே தான் மெலிந்து நீரைக் கொட்டச் செய்தால் கூடுதல் சப்தம் எழுகிறது எனக் கண்டுபிடித்தனர்.

- கட்டுரையாளர்: அறிவியல் எழுத்தாளர், புது டெல்லியில் உள்ள ‘விஞ்ஞான் பிரச்சார்’ நிறுவனத்தின் முதுநிலை விஞ்ஞானி, தொடர்புக்கு: tvv123@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in