

புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானம் உதித்தது என்பார்கள். சிகாகோவில் உள்ள ஃபீல்ட் அருங்காட்சியகத்தில் ஆய்வாளராகப் பணியாற்றும் ஷானன் ஹாக்கெட்-க்கு (Shannon Hackett) மகனின் பள்ளி ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் அத்தகைய ஞானம் பொதிந்த கேள்வி பிறந்தது. அந்தப் பள்ளியின் ஹாக்கி அணியிலிருந்த அவரது மகன் உட்பட அனைவரும் விளையாடும்போது தலைக்கவசம் அணிந்து இருந்தனர்.
ஹாக்கி மட்டுமல்ல, தலையில் கவசம் அணிந்து தான் பைக் ரேஸ் வீரர்கள் போட்டியில் பங்கு பெறுவார்கள். தப்பித்தவறி விபத்து ஏற்பட்டு கவிழ்ந்து கீழே விழுந்தால் வன்குலுக்கு ஏற்பட்டு அதிர்ச்சியில் மூளையில் உள்காயம் ஏற்படும். உள்காயம் பலமாக இருந்தால் கோமா நிலைக்குக் கூட இட்டுச் செல்லும்.
அவர் பணிபுரிந்த பீல்ட் அருங்காட்சியகத்தில் பல்வேறு மீன்கொத்தி பறவைகளின் உடல்கள் பதப்படுத்தப்பட்டு பாதுகாப்பாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நீரில் தலைகுப்புற சர்ர்ர்ர் என்று டைவ் செய்யும். கணத்தில் மீனைக் கவ்விப் பிடித்து சிறகை அசைத்துப் பறந்து வெளிவரும். மணிக்கு நாற்பது கிலோமீட்டர் வேகத்தில் நீரின் உள்ளே தலைகுப்புற பாயும் மீன்கொத்தி பறவையின் தலையில் ஏன் வன்குலுக்கு ஏற்பட்டு அதன் மூளையில் அதிர்ச்சி ஏற்படுவது இல்லை?
ஆபத்தான டைவ்: நீச்சல் குளத்தில் குதிப்பது மென்மையான பொருளில் விழுவது; ஆகையால் கடினத் தன்மை கொண்ட கான்கிரீட் சாலையை விட ஆபத்து அற்றது என நாம் கருதுவோம். ஆனால், உள்ளபடியே நீச்சல் குளத்தில் நீரின் மேலே தலைகுப்புற விழுவது அதைவிட ஆபத்தானது. எனவே தான் நீச்சல் குளத்தில் டைவ் போட்டியில் பங்கு பெறுபவர்களும் தலையில் கவசம் அணிந்து இருப்பார்கள்.
மீன்கொத்தி பறவையில் பத்தொன்பது இனங்களை (genus) சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட உயிரினங்கள் உண்டு. இந்த உயிரினங்கள் எல்லாம் மீனை உணவாகக் கொள்வது இல்லை. எடுத்துக்காட்டாகத் தமிழகத்தில் மரங்களில் வாழும் வெண் தொண்டை மீன்கொத்தி நண்டு, புழு போன்ற ஊர்வன, சிறு எலி போன்ற விலங்குகளைச் சாப்பிடும்.
நீரில் டைவ் செய்து மீனைப் பிடிக்கும் மீன்கொத்தி வகைகளில் ராக்கெட் மூக்கு போல நீளமாகக் கூரான மூக்கு இருக்கும். டைவ் செய்யும்போது நீரைக் கிழித்துச் செல்ல இந்த வடிவம் உதவும். எனினும் நீரில் மணிக்கு நாற்பது கிலோமீட்டர் வேகத்தில் மோதும் போது மூளை அதிர்ச்சி ஏற்பட வேண்டும். ஆயினும் தலையில் கவசம் அணியாமலேயே பாதுகாப்பாக இருப்பது எப்படி என ஆராய முடிவு செய்தார் ஹாக்கெட்.
உலகின் பல பகுதியிலிருந்து வரவழைத்து அவரது அருங்காட்சியகத்தில் பதம் செய்து பாதுகாத்து வந்த முப்பது வகை மீன்கொத்தி உயிரினங்களின் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தார். முதலில் அவற்றின் திசுக்களை ஆய்வு செய்து அந்தப் பறவைகளின் மரபணு தொகுதியை வரிசையைத் தயார் செய்தார்.
புரதம் செய்யும் மாயம்: ஆய்வுக்கு உட்படுத்திய வகைகளில் சில டைவ் செய்து மீனைப் பிடித்து உண்பவை. மற்றவை மீன் உண்ணா வகையைச் சார்ந்தவை. நீரில் டைவ் செய்யும் மீன்கொத்தி பறவைகளின் மரபணு தொகுதியில் உள்ள எந்தெந்த ஜீன்கள் (மரபணு) மீன் உண்ணா வகைகளில் இல்லை என இரண்டு வகை மீன்கொத்திக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை இனம் கண்டார்.
டைவ் செய்யும் மீன்கொத்தி பறவைகளில் 93 மரபணுக்களில் மாற்றம் இருப்பதை இனம் கண்டார். உணவு விருப்பத்தேர்வோடு இந்த மரபணு தொடர்புடையது. இந்த மரபணு தான் மீன் உணவை நாடிச் செல்லத் தூண்டுகோளாக இருக்கலாம். அதேபோல டாவ் புரதத்தை உற்பத்தி செய்யும் MAPT மரபணுவிலும் மாற்றம் தூக்கலாகத் தென்பட்டது. செயல்களின் வடிவம் குலையாமல் நிலைநிற்க டாவ் புரதம் உதவி செய்யும்.
மூளையில் உள்ள செல்களை உறுதிப்படுத்த டாவ் புரதம் உதவுகிறது. குறிப்பிட்ட வடிவம் குலையாமல் மூளை செல்கள் நிலைநிற்பதால் மூளை ஆரோக்கியமாகச் செயல்படுகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. அதுபோல அதிகப்படியாக டாவ் புரதம் குவிந்தால் மூளை செல்களில் சிக்கல் ஏற்பட்டு அல்ஸைமர் போன்ற மூளை நோய் ஏற்படும்.
டைவ் செய்யும் மீன்கொத்தி பறவை நீரில் மோதும்போது ஏற்படும் அதிர்ச்சியை மூளை செல்கள் தாங்கும் படியாக டாவ் புரதம் உதவுகிறது என்பது தெளிவு. ஆனால், எப்படி அதிர்வைச் சமாளிக்க உதவுகிறது போன்ற கேள்விகள் இன்னும் மிச்சம் உள்ளன என்கிறார் ஹாக்கெட்.
- கட்டுரையாளர்: அறிவியல் எழுத்தாளர், புது டெல்லியில் உள்ள ‘விஞ்ஞான் பிரச்சார்’ நிறுவனத்தின் முதுநிலை விஞ்ஞானி; தொடர்புக்கு: tvv123@gmail.com