

வட அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட அவுரிநெல்லி (Blueberries) கனிகள் பார்வைக்கு பளிச்சென்று நீல நிறமாகத் தென்படும். ஆனால், இந்தக் கனிகளின் தோலை ஆய்வு செய்தபோது அடர் சிவப்பு நிறம் தரக்கூடிய அந்தோசயனின் நிறமி தான் செறிவாக உள்ளது தெரியவந்தது. சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டிய அவுரிநெல்லிக்கனி நீல நிறத்தில் பளபளப்பது எதனால்?
மனித உடலை பொருத்தவரை, மெலனோசைட் எனும் தோல் செல்கள் உமிழும் நிறமி வேதிப்பொருள்தான் தோல் நிறத்தை தீர்மானிக்கிறது. அதுவே, வானம் நீல நிறமாகத் தென்படுவதற்கு நிறமிகள் காரணம் அல்ல. வானத்தில் உள்ள காற்று மூலக்கூறுகள் ஒளியைச் சிதறடிக்கின்றன.
பல நிறங்களின் கலவையான சூரிய ஒளி காற்று மூலக்கூறுகளால் சிதறடிக்கப்படும்போது நிறப்பிரிகை ஏற்படுகிறது. நீல நிறம் கூடுதலாகச் சிதறுகிறது. எனவே எல்லாத் திசையிலும் நீல நிற ஒளி படர்ந்து வானம் முழுவதும் நீல நிறத்தில் காட்சியளிக்கிறது.
மலர்களில் கரோட்டினாய்டுகள், ஃபிளாவனாய்டுகள் எனும் இரண்டு முக்கிய நிறமி வகைகள் உள்ளன. மஞ்சள், ஆரஞ்சு சிவப்பு நிறங்களை கரோட்டினாய்டு வகை சார்ந்த கரோட்டின் நிறமி உருவாக்கும். சிவப்பு, ஊதா, மெஜந்தா, நீலம் போன்ற நிறங்களை ஃபிளாவனாய்டு வகை சார்ந்த அந்தோசயனின் நிறமி உருவாக்கும்.
இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்திலும், ஜெர்மனியில் உள்ள டிரெஸ்டன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திலும் ஆராய்ச்சி மேற்கொண்டு வருபவர் ராக்ஸ் மிடில்டன். இவரது தலைமையிலான குழு இந்த புதிர் கேள்விக்கு நானோ தொழில்நுட்பத்தின் உதவியோடு விடை கண்டுபிடித்துள்ளனர்.
மெழுகு பூச்சு: ஸ்கேனிங் எலக்ட்ரான் நுண்ணோக்கி வழியே கனிகளின் தோலை நுணுக்கமாக ஆய்வு செய்தனர். பழத்தோலின் மேல் மெல்லிய மெழுகு பூச்சு படர்ந்திருப்பது அதில் தெரிந்தது. இந்தப் பூச்சு வெறும் இரண்டு மைக்ரோமீட்டர் தடிமன் மட்டுமே கொண்டது. இதன் மீது பல நிறங்களின் கலவையான சூரிய ஒளி படும்போது ஒளிச்சிதறல் ஏற்பட்டு நிறங்கள் பிரியும். குறிப்பாக நீல நிறம் மற்றும் புற ஊதா கூடுதலாகச் சிதறடிக்கப்படுகிறது எனக் கண்டனர்.
நீல மற்றும் புற ஊதா நிற ஒளியைத் தோலின் மேலே மெழுகு பூச்சில் உள்ள நானோ கட்டமைப்புகள் வலுவாக பிரதிபலிப்பதால் அதன் உண்மை நிறமான சிவப்பு அடிபட்டுப் போகிறது எனவும் கண்டனர். அவுரிநெல்லி மட்டுமல்ல ஒரேகான் திராட்சை பிளம்ஸ் போன்ற கனிகளின் கருநீல நிறமும் நிறமிகள் தரும் நிறம் அல்ல. நானோ கட்டமைப்பின் தொடர்ச்சியாக ஒளிச்சிதறல் ஏற்பட்டு உருவாகும் கருநீல நிறக்காட்சி எனக் கண்டுபிடித்துள்ளனர்.
நுண் நானோ கட்டமைப்பு: கையால் நன்கு தேய்த்துத் தேய்த்து மெழுகு பூச்சை அகற்றிவிட்டால் கனி அடர்சிவப்பு நிறத்தில் இருப்பதை காண முடிந்தது. மெழுகு பூச்சை மட்டும் தனியே எடுத்துப் பார்த்தல் நிறம் ஏதும் தெரியவில்லை. மெழுகின் வழியே ஒளி புகும். எனவே இதில் வியப்பு ஏதுமில்லை.
பலவகை கனிகளின் மேற்பகுதியில் மெல்லிய மெழுகு பூச்சு உள்ளது. அழுகிப் போகாமல் பாதுகாக்க இயற்கை அளித்த கவசம் என்றுதான் இவ்வளவு காலம் கருதப்பட்டது. பல தாவரங்களில் விதைப் பரவல், பறவை, பூச்சி முதலியவற்றின் உதவியோடு நடைபெறுகிறது. விதை பரவச் செய்ய பறவைகளை கனிகள் கவர்ந்து இழுக்க வேண்டும்.
குறிப்பிட்ட சில நிறம் கொண்ட கனிகளைத் தான் குறிப்பிட்ட பறவைகள் கொத்தித் தின்னும். ஆகையால், சிவப்பு நிறத்தில் காட்சியளிக்க வேண்டிய சிலவகை பழங்கள் நீல நிறத்துக்கு மாறுவது விதைப் பரவலுக்கு உதவுவதற்காகத்தான்.
- கட்டுரையாளர்: அறிவியல் எழுத்தாளர், புது டெல்லியில் உள்ள ‘விஞ்ஞான் பிரச்சார்’ நிறுவனத்தின் முதுநிலை விஞ்ஞானி; தொடர்புக்கு: tvv123@gmail.com