புதுமை புகுத்து - 15: விட்டில் பூச்சி விளக்கை சுற்றி வருவதேன்?

புதுமை புகுத்து - 15: விட்டில் பூச்சி விளக்கை சுற்றி வருவதேன்?
Updated on
2 min read

தீ, மெழுகுவர்த்தி, மின்விளக்கு, தெருவிளக்கு போன்றவற்றை சுற்றி சுற்றி விட்டில் பூச்சிகள் முதல் பல பூச்சிகள் வட்டமடிப்பதைக் கண்டிருப்போம். பிரகாசமான செயற்கை ஒளியில் பூச்சிகள் கண் கூசி சிறைப்படுகின்றன என ஒருகாலத்தில் இதனை கருதினர்.

இரவில் நிலவைவிட செயற்கை மின்விளக்கு பிரகாசமாக இருப்பதால் அதை நிலவு என பிசகாகக் கருதி பூச்சிகள் விளக்கை சுற்றி வட்டமடிக்கின்றன எனவும் சொல்லப்பட்டது. ஆனால், இந்த விளக்கங்கள் எதுவும் பரிசோதனை ஆய்வில் வெற்றி பெறவில்லை. எனவே அறிவுலகம் ஏற்கவில்லை. நூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் புதிராக இருந்த இந்த இயற்கை நிகழ்வை புதிய ஆய்வு விளக்கியுள்ளது.

அதிவேக வீடியோ கேமரா கொண்டு அகச்சிவப்பு நிறத்தில் பூச்சிகளின் இயக்கத்தை கண்காணித்தது ஒரு ஆய்வுக்குழு. புளோரிடா இயற்கை வரலாற்று அருங்காட்சியக பரிணாமவியல் ஆய்வாளர் யாஷ் சோந்தி தலைமையிலான குழு அது. வானம் எந்த திசை, நிலம் எந்த திசை என குழம்பி மின்விளக்கை சுற்றி சுற்றி பூச்சிகள் வட்டமிட்டபடி இருக்கின்றன என அனுமானம் செய்துள்ளனர்.

தலைகீழாகப் பறந்த பூச்சிகள்: மேகம் சூழ்ந்திருக்கையில் விமானியின் கண்களுக்கு நிலம் எந்த திசை, வானம் எந்த திசை என புலப்படவில்லை என்றாலும் விமானத்தில் உள்ள பல்வேறு கருவிகளைக் கொண்டு அறிந்து கொள்வார். அதன்படி விமானத்தின் முதுகு வானம் நோக்கியும் கால்கள் தரை நோக்கியும் இருக்குமாறு பார்த்துக்கொள்வார். அதுபோல பூச்சியும் தமது முதுகு பகுதி வானை நோக்கியும், கால்கள் தரையை நோக்கியும் பறக்கும்.

மனிதன் கண்டுபிடித்த செயற்கை விளக்குவருகைக்கு முன்னர் இரவுகள் வானத்துவிண்மீன்கள் மற்றும் நிலவின் அரசல்புரசலான ஒளியோடுதான் கழிந்தன. அதிலும்தரை பகுதி கும்மிருட்டாக இருந்தது. எனவேபரிணாமத்தில் இரவில் பறக்கும் பூச்சிகள் அரசல்புரசலாகப் பரவிய ஒளியை வானம் எனவும் அதற்கு எதிரான இருட்டு திசையைத் தரை எனவும் அறிந்து கொள்கின்றன என்கிறார் யாஷ் சோந்தி.

இந்த ஆய்வை அவரது குழுவினர் கோஸ்ட்டா ரிக்காவில் உள்ள வனத்தின் நடுவே இயற்கை சூழலில் அமைந்திருக்கும் ஆய்வு நிலையத்தில் செய்து பார்த்தனர். கூரை போன்ற அமைப்பிலிருந்து மின்விளக்கை தொங்கவிட்டால் பூச்சிகள் விளக்கை சுற்றி வட்டமடித்தன. தரையில் விளக்கைப் பொருத்தி விண்ணோக்கி ஒளியை பரவச் செய்தால் பூச்சிகள் தலைகீழாகப் பறந்து தரையில் மோதின.

சோதனைக்கு சில பூச்சிகளைப் பிடித்து அதன் உடலில் அகசிவப்பு கதிரில் ஒளிரும் பொருளைப் பொருத்தினர். இந்த பூச்சிகளின் இயக்கத்தை அதிவேக வீடியோ கேமரா கொண்டு படம்பிடித்து ஆய்வு செய்தனர். தரையில் வெள்ளை தாளை வைத்து ஒளியை பிரதிபலிக்க செய்தபோது பூச்சிகள் கவிழ்ந்து புரண்டு தலைகீழாகப் பறந்தன. அதே வெள்ளைத் தாளை தலைக்கு மேலே கூரையில் பொருத்தியபோது இயல்பாக பறந்தன.

புதிய கண்டுபிடிப்பை நோக்கி... அதாவது கூரையின் மீது இயற்கையாக இரவில் தோன்றும் மங்கலான ஒளியை ஏற்படுத்தியபோது முதுகு வான் நோக்கியும் கால்கள் தரை நோக்கியும் பூச்சிகள் பறந்தன. அதே சமயம் தரையிலிருந்து வான் நோக்கி மங்கலான ஒளியை செலுத்தி ஆய்வு செய்தபோது பூச்சிகள் புரண்டு கவிழ்ந்தன. இப்போது முதுகு பக்கம் தரை நோக்கியும், கால்கள் வான் நோக்கியும் இருந்தது.

எல்லா சூழலிலும் தங்கள் முதுகு பக்கம் பிரகாசமான ஒளி இருக்கும்படி பறந்தன. இந்த ஆராய்ச்சியின் மூலம் ஏன் தெருவிளக்கைச் சுற்றி சுற்றி பைத்தியம் பிடித்தது போல பூச்சிகள் வட்டமிடுகின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆய்வு முடிவின் அடிப்படையில் இரவு வாழ் பறவைகள், பூச்சிகள் முதலியவற்றுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் எப்படி தெருவிளக்குகளை வடிவமைக்கலாம் என்று விஞ்ஞானிகள் ஆராயத் தொடங்கினர்.

- கட்டுரையாளர்: அறிவியல் எழுத்தாளர், புது டெல்லியில் உள்ள ‘விஞ்ஞான் பிரச்சார்’ நிறுவனத்தின் முதுநிலை விஞ்ஞானி; தொடர்புக்கு: tvv123@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in