புதுமை புகுத்து - 11: டைனசோர்களை கொன்று அழித்தது யார்?

புதுமை புகுத்து - 11: டைனசோர்களை கொன்று அழித்தது யார்?
Updated on
2 min read

பல மசாலா திரைப்படங்களில் போலீஸ் வரும்போது கையில் ரத்தக்கறை கொண்ட கத்தியோடு கொலை செய்யப்பட்ட பிணத்தின் அருகே ஹீரோ பிடிபடுவார். ஆனால், திரைப்படத்தின் இறுதியில் அவர் குற்றவாளி இல்லை கொலை செய்தது வில்லன் தான் என நிரூபணம் ஆகும்.

அதுபோல இதுவரை சுமார் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் மீது மோதிய ஒரு விண்கல்தான் டைனசோர்களையும் வேறுபல உயிரினங்களையும் கொன்று குவித்தது என அந்த விண்கல்லை எல்லோரும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திக் கொண்டிருந்தனர்.

ஆனால், அமெரிக்காவின் டார்ட்மவுத் கல்லூரியில் கணிதவியல் புவியியலாளராக பணிபுரியும் அலெக்சாண்டர் காக்ஸ் தலைமையில் ஒரு குழு, இந்தியாவில் தக்காணப் பீடபூமி எனும் மேட்டுநிலத்தை உருவாக்கிய எரிமலைகள் தாம் உண்மை குற்றவாளி என சமீபத்தில் சாட்சி அளித்துள்ளனர்.

சிவா எனும் பள்ளம்: கிட்டத்தட்ட 16.5 கோடி ஆண்டுகள் பூமியில் ராஜா போல வாழ்ந்த டைனசோர்ஸ் எனும் பெரிய பல்லி வகை உயிரினம் சுமார் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் கிரீத்தேசியஸ் யுகத்தின் முடிவுக்கும் அடுத்து வந்த பலியோசீன் யுகத்தின் தொடக்கத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் திடீர் என நசிந்து விட்டது. டைனசோர்ஸ் மட்டுமல்ல அன்று பூமியில் வாழ்ந்த பல்வேறு வகை உயிரினங்களில் நான்கில் மூன்று அழிந்து அதன் பின்னர் சுவடே இல்லை.

டைனசோர்ஸ் இனங்கள் முற்றிலும் அழிந்தஇதே காலகட்டத்தில் சுமார் 10 - 15 கிலோமீட்டர் விட்டம் கொண்ட விண்கல் மெக்சிக்கோவில் உள்ள யுகடான் தீபகற்பம் (Yucatán Peninsula) பகுதியில் விழுந்தது. அதன் தொடர்ச்சியாக யுகடான் தீபகற்பத்தின் கடலுக்கு அடியில் சிக்சுலப் பள்ளம் எனும் 150 கி.மீ. விட்டம் கொண்ட மோதலில் ஏற்பட்ட கிண்ணக்குழி வடு இன்றும் உள்ளது.விழுந்த விண்கல்லின் ஒரு துண்டு இந்தியாவுக்கு மேற்கே மும்பை நகருக்கு அருகே அரபிக் கடலில் விழுந்து சிவா எனும் கிண்ணக்குழி பள்ளத்தை ஏற்படுத்தியது.

இந்த மோதலில் தொடர்ச்சியாக ஏற்பட்ட சுனாமி, காடுகளில் பற்றிய தீ, போன்றவற்றின் காரணமாக பல நாட்கள் சூரிய ஒளியே பூமியின் தரையில் படவில்லை எனப்படுகிறது. இந்த மோதலின் தொடர்ச்சியாக ஏற்பட்ட பிரளயத்தில் பூமியின் காலநிலை வெகுவாக மாறி, பல்வேறு வகை உயிரினங்கள் அழிந்து விட்டன எனக் கருதப்படுகிறது. எனவே இந்த விண்கல் மோதலில் ஏற்பட்ட பிரளயத்தில் கோடானுகோடி உயிரினங்கள் அழிந்து விட்டன எனக் கருதப்பட்டு வருகிறது.

பெருக்கெடுத்த எரிமலைக் குழம்பு: இந்த மோதல் நிகழ்வு நடைபெறுவதற்கு முன்பாக சுமார் மூன்று லட்சம் ஆண்டுகளாகவே இந்தியாவின் மேற்கு பகுதியில் நூற்றுக்கணக்கான எரிமலைகள் சீற்றம் கொண்டு வெடித்துக் கொண்டிருந்தன. மேலும் மோதலுக்குப் பின்னர் சுமார் ஐந்து லட்சம் ஆண்டுகள், அதாவது மொத்தம் எட்டு லட்சம் ஆண்டுகள் இந்த எரிமலைகள் அடுத்தடுத்து சீற்றம் கொண்டு வெடித்துச் சிதறின.

ஒவ்வொருமுறை எரிமலைகள் குமுறிய போதும் லாவா எனப்படும் எரிமலைக் குழம்பு கசிந்து ஓடியது. நதி போல ஓடிய எரிமலைக் குழம்பு குளிர்ந்து கட்டி பாறைகளாக மாறின. அடுத்த குமுறலில் வெளிப்பட்ட குழம்பு இதன் மீது மேலே புதிய அடுக்காகப் படர்ந்தது.

எட்டு லட்சம் வருடத்தில் அடுத்தடுத்து உருவான அடுக்கின் காரணமாக அணிலின் முதுகு மேலே உள்ள வரிகள் போல பாறை அடுக்குகள் அமைந்தன. எனவே இவற்றை தக்காண வரிப்பாறைகள் என்கிறார்கள்.

எரிமலை குமுறும்போது வெறும் குழம்பு மட்டும் வெளிப்படுவது இல்லை. அத்துடன் கார்பன்டை ஆக்சைடு மற்றும் சல்பர் டை ஆக்சைடு வெளியேறும். வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு கூடினால் புவி வெப்பம் கூடும். ஆனால், சல்பர் டை ஆக்சைடு கூடினால் புவி வெப்பம் குறையும். எரிமலை வெடித்து சீறிய எட்டு லட்சம் வருடங்களில் மொத்தமாக 10 லட்சம் கோடி கார்பன் டை ஆக்சைடும் சுமார் 9.3 லட்சம் சல்பர் டை ஆக்சைடும் உமிழ்ந்தன என கண்டுபிடித்துள்ளார்கள்.

(மேலும் துப்பு துலக்குவோம்)

- கட்டுரையாளர்: அறிவியல் எழுத்தாளர், புது டெல்லியில் உள்ள ‘விஞ்ஞான் பிரச்சார்’ நிறுவனத்தின் முதுநிலை விஞ்ஞானி, தொடர்புக்கு: tvv123@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in