

இதுவரை பூமியில் நிகழ்ந்துள்ள நிலநடுக்கங்களைவிட ஐந்து மடங்கு அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் 2022ஆம் ஆண்டு மே 4 அன்று செவ்வாய் கோளில் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோவின் மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் விண்கலமும் இந்த கண்டுபிடிப்புக்கு உதவி செய்துள்ளது என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையைச் சேர்ந்த டாக்டர் பெஞ்சமின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார். இவரின் தலைமையில் சர்வதேச ஆய்வுக்குழு இந்த ஆய்வை மேற்கொண்டது.
செவ்வாய் கோளில் உள்ள எலிசியம் சமவெளி பகுதியில் நாசாவின் இன்சைட் (InSight) விண்கலம் 2018ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று தரையிறங்கியது. செவ்வாயில் ஏற்படும் நில அதிர்வுகள், நிலப்பரப்பின் வெப்ப கடத்து தன்மை, புவியியல் சலனம் முதலியவற்றை இனம் காண்பது தான் இந்த விண்வெளித் திட்டத்தின் முக்கிய நோக்கம். மிகவும் நுட்பமான நில அதிர்வு கருவியை ஏந்தி சென்ற இந்த விண்கலம் 2018 முதல் 2022 டிசம்பர் 20-ம் தேதிவரை 728 நாட்கள் நடத்திய ஆய்வில் சிறிதும் பெரிதுமான 1,300 செவ்வாய் கோள் நிலநடுக்கங்களை இனம் கண்டுள்ளது. ஆரம்பத்தில் நடத்திய ஆய்வில் 2021 டிசம்பர் 24 அன்று ஏற்பட்ட 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்தான் அதுவரை வலுவான நிலநடுக்கமாகப் பதிவாகி இருந்தது.
கிண்ணம் போன்ற குழி: இந்நிலையில், திடீர் என 2022 மே 4 அன்று செவ்வாய் கோளில் இந்த விண்கலம் சுமார் 2,200 கிலோமீட்டர் தொலைவில் 4.7 அளவு நிலநடுக்கத்தை இனம் கண்டது. சாதரணமாக செவ்வாயில் ஒரு மணிநேரத்தில் நிலநடுக்கம் நின்றுவிடும். ஆனால் இந்த முறை நடுக்க அதிர்வுகள் ஆறுமணிநேரம் நிற்காமல் தொடர்ந்தது. பூமிக்கு அடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்படும் போது, டெக்டானிக் தட்டுகள் நகர்வதனால் இடம்பெறும் அதிர்வு நில நடுக்கத்தை ஏற்படுகிறது. ஆனால் செவ்வாய் கோளில் அவ்வாறு நிகழ்வதில்லை. செவ்வாயின் மீது பற்பல விண்கற்கள் மோதுவதினால் அதில் நிலநடுக்கம் ஏற்படுகிறது.
விண்கல் மோதும்போது கிண்ண வடிவில் வடுவை ஏற்படுத்தும். சிறு நடுக்கம் என்றால் விண்கல் அளவு சிறிதாக இருக்கவேண்டும்; அது ஏற்படுத்தும் குழியின் அளவும் சிறியதாக இருக்கும். இனம் காண்பது கடினம். அதுவே, பெரிய விண்கல் விழுந்திருந்தால் தான் பெரும் ஆற்றலுடன் நிலநடுக்கம் ஏற்படக்கூடும். அந்த மோதலின் வடு இனம் காணத்தக்க அளவில் இருக்கும்.நடுக்க அலைகளைக் கொண்டு சற்றேறக்குறைய எங்கே 2021 டிசம்பர் 24 அன்று நிலநடுக்கம் ஏற்படுத்திய விண்கல் விழுந்திருக்கும் என்பதை கணித்தனர் நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். அதை வைத்து நாசாவின் மார்ஸ் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர் கொண்டு விண்கல்லை தேடினார்கள். அமேசானிஸ் சமவெளி பகுதியில் 150 மீட்டர் விட்டம் உடைய புத்தம் புதிய கிண்ண வடிவ குழியை இனம் கண்டார்கள். இதே போல வேறு ஏழு தடவையும் நிலநடுக்கம் ஏற்படுத்திய மோதல் தழும்பை கண்டுபிடித்தார்கள்.
பூமியில் புழுதிப்படலம்! - அடுத்ததாக, 2022 -ம் ஆண்டு மே 4 ஏற்பட்ட அளவு நில நடுக்கத்தை ஏற்படுத்திய விண்கல்லை கண்டுபிடிக்கும் பணி தொடங்கியது. இது நிச்சயம் மிகப்பெரிய விண்கல்லாக இருக்க வேண்டும். அந்த விண்கல் சுமார் 300 மீட்டர் விட்டம் கொண்ட புதிய கிண்ணக்குழியை ஏற்படுத்தி இருக்கவேண்டும், மேலும் மோதலில் செவ்வாய் மண் தெறித்து வானத்தில் புழுதிப்படலம் உருவாக்கி இருக்க வேண்டும். இரண்டும் நிலநடுக்கம் ஏற்பட்ட அதே சமயத்தில் தோன்றும்.
புதிய கிண்ணக்குழியையும் மேலெழும்பும் தூசி படலத்தையும் கண்டுபிடிக்க இந்தியாவின் மார்ஸ் ஆர்பிடர், சீனாவின் தியான்வென் 1 ஐக்கிய அமீரகத்தின் ஹோப் விண்கலம் ஐரோப்பிய-ரஷ்ய கூட்டு எச்சோ மார்ஸ், ஐரோப்பிய மார்ஸ் எக்ஸ்பிரஸ், நாசாவின் மேவன், மார்ஸ் ஒடிசி, மார்ஸ் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர் ஆகிய எட்டு விண்கலங்கள் தேடலைத் தொடங்கின. தேடலின் இறுதியில் புதிய கிண்ணக்குழி அல்லது தூசு படலம் ஏதும் தென்படவில்லை. எனவே இந்த நிலநடுக்க நிகழ்வு விண்கல் மோதலில் உருவானது அல்ல என்பது தெளிவானது. செவ்வாய் கோளின் உள்ளிருந்து அழுத்தம் வெளிப்பட்டு மேலோட்டு பேரியக்கவிசை உருவாக்கி இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்கிறார் பெஞ்சமின் பெர்னாண்டோ. விண்கல் தவிர செவ்வாய் கோளின் உள்அழுத்தம் கூட நிலநடுக்கத்தை ஏற்படுத்தலாம் என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
- கட்டுரையாளர்: அறிவியல் எழுத்தாளர், புது டெல்லியில் உள்ள ‘விஞ்ஞான் பிரச்சார்’ நிறுவனத்தின் முதுநிலை விஞ்ஞானி, தொடர்புக்கு: tvv123@gmail.com