புதுமை புகுத்து - 7: புதிய பார்வை தரும் ‘பயோனிக்’ இயந்திரக் கண்

புதுமை புகுத்து - 7: புதிய பார்வை தரும் ‘பயோனிக்’ இயந்திரக் கண்
Updated on
2 min read

உலகம் முழுவதும் நான்கு கோடி பேருக்கு முழுமையாகக் கண்பார்வை இல்லை. மேலும் 13.5 கோடி பேருக்கு குறை பார்வை மட்டுமே உள்ளது என்கிறது உலக சுகாதார நிறுவனம். அப்படியிருக்க விபத்து, நோய் அல்லது மரபணு பிறழ்வு காரணமாகக் கண் பார்வை பறிபோனவர்களுக்கு பயோனிக், இயந்திர கண் கொண்டு கண்பார்வை வழங்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்கின்றனர் விஞ்ஞானிகள். ஆரோக்கியமான நிலையில் இருக்கும் கண், பார்வை வழியே ஒளியை கடத்தி விழியின் லென்ஸ் கொண்டு கண்ணின் பின்புறம் உள்ள விழித்திரையில் ஒளியைக் குவிக்கிறது. விழித்திரையில் கோல் வடிவிலும் கூம்பு வடிவிலும் ஒளி உணர்வு செல்கள் உள்ளன. 910 லட்சம் கோல் வடிவ செல்களும், 45 லட்சம் கூம்பு வடிவ செல்களும் மனித விழித்திரையில் உள்ளன. ஒளி உணரும் திறன் கொண்ட இந்த செல்கள் விழித்திரையில் படியும் காட்சியை மின் சமிக்ஞைகளாக மாற்றி பார்வை நரம்பு வழியாக மூளைக்குச் செலுத்துகின்றன. இந்த தரவுகளை கொண்டு மூளை காட்சியை உருவாக்குகிறது.

கண் இயந்திரம் எதற்கு? - இந்த அமைப்பில் எங்காவது கோளாறு ஏற்பட்டால் பார்வை குறைபாடு உருவாகும். விழி லென்ஸ் சரியாக வேலை செய்யவில்லை என்றால் கண்ணாடி போட்டுச் சரி செய்வது போல பொருத்தமான மருத்துவ தொழில்நுட்பத்தை கைக்கொண்டு பார்வை குறைபாட்டை நீக்கிப் பார்வையை மீள் செய்ய முடியும். சிதைவு நோய், விபத்து போன்றவை காரணமாக விழித்திரையில் பாதிப்பு ஏற்பட்டால் சரிசெய்வது இதுவரை எளிதாக இருக்கவில்லை. பொதுவே இந்த நோய் உள்ளவர்களுக்குக் கண்ணின் ஒளி உணர் செல்கள் சரிவர இயங்க முடிவதில்லை.

எனவே விழித்திரையில் விழும் ஒளியை உணர்ந்து மின் தூண்டலை ஏற்படுத்தி சமிக்ஞை பார்வை நரம்பு வழியே மூளைக்குச் செல்வது தடை படுகிறது. இந்த நோயாளிகளின் பார்வை நரம்பில் அல்லது மூளைக்கு வந்து சேரும் மின் சமிக்ஞைகளைக் கொண்டு பார்வை காட்சியை உருவாக்கும் திறனிலோ எந்த குறையும் இருப்பதில்லை. இங்கு தான் பார்வையை மீள் செய்ய பயோனிக் கண் வரப்பிரசாதமாக அமைகிறது. பயோனிக் கண் சிகிச்சையில் முதலில் கண் அறுவை சிகிச்சை செய்து விழித்திரையில் மின்முனைகளை பொருத்தி விடுவார்கள். மின்முனைகளை விழித்திரையின் மேல் பகுதியில் அல்லது அடியில் பொருத்துவார்கள்.

’பயோனிக்’ கண் இயங்கும் முறை: இதற்கென்று தயாரிக்கப்பட்ட (1) கண்ணாடி போன்ற கருவியில் கேமரா பொருத்தப்பட்டிருக்கும். (2) கேமரா காட்சி சட்டை பையில் அல்லது கழுத்தில் மாட்டிக்கொள்ளும் வீடியோ காட்சி கணிப்பிக்கு (processor) அனுப்பப்படும். அங்கே கேமராவின் படக்காட்சியை பகுத்து மின்னணு தரவு உருவாகும். (3) இந்த தரவுகள் ஒய்-ஃபை கம்பியில்லாத் தொடர்பு மூலம் விழித்திரையில் பதியப்பட்ட மின்முனையை எட்டும். (4) வந்து சேரும் தரவுகளுக்கு ஏற்ப மின்முனைகள் மின் தூண்டுதலை ஏற்படுத்தும். இந்த மின்தூண்டல் பார்வை நரம்பு வழியே மூளையை அடையும். (5) மின்தூண்டலை பகுத்து மூளை காட்சியை ஏற்படுத்தும். பயோனிக் கண் பொருத்தப்பட்ட அந்த நபருக்கு பார்வை மீளும்.

தற்போது உள்ள நடைமுறையில் குறைந்த அடர்த்தியில் தான் மின்முனைகளை பொருத்த முடிகிறது. எனவே அரசல் புரசலான கருப்பு வெள்ளை காட்சியே கிடைக்கிறது. ஆய்வு நிலையில் மட்டுமே இந்த தொழில்நுட்பம் தற்போது உள்ளது. பார்வை குறைபாட்டை நீக்கும் சிகிச்சையாகப் பயன்படுத்த மருத்துவ அனுமதி இல்லை. பல ஆயிரம் மின்முனைகளை ஒழுங்கு செய்து பொருத்தினால் மேலும் கூர் பார்வை கிடைக்கும். கூர் பார்வையும், நிறங்களைப் பகுத்தறியும் பார்வைக் காட்சியையும் தர ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

- கட்டுரையாளர்: அறிவியல் எழுத்தாளர், புது டெல்லியில் உள்ள ‘விஞ்ஞான் பிரச்சார்’ நிறுவனத்தின் முதுநிலை விஞ்ஞானி; தொடர்புக்கு: tvv123@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in