புதுமை புகுத்து - 6: ஜென்டூ பெங்குயின் அதிவேகமாக நீந்துவது எப்படி?

புதுமை புகுத்து - 6: ஜென்டூ பெங்குயின் அதிவேகமாக நீந்துவது எப்படி?
Updated on
2 min read

உலகில் மிக வேகமாக நீந்தும் பறவை அண்டார்டிக்காவில் வாழும் ஜென்டூ பெங்குயின்தான். மனித கைகுழந்தை அளவே உடல் கொண்ட இந்த பென்குயின் கடும் குளிரான கடல் நீரில் மணிக்கு 35.4 கிலோமீட்டர் வேகத்தில் நீந்தக் கூடியது. சீன ஆய்வாளர்கள் ஜென்டூ பெங்குயின் நீந்துவதை வீடியோ படம் எடுத்து ஆய்வு செய்தனர். பிரசெர்ட் பிரபமந்தோன் (Prasert Prapamonthon) என்பவர் தலைமையில் சீன அறிவியல் அகாடமி பல்கலைக்கழக, சீன அறிவியல் அகாடமி மற்றும் லட்க்ராபாங் கிங் மோங்குட்டின் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி ஆகிய உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

அப்போது, துடுப்பு போன்ற இறக்கைகளை ஜென்டூ பெங்குயின் குறிப்பிட்ட கோணத்தில் வளைத்துக் கொள்வதே அதன் அதிவேகத்தின் ரகசியம் என்பதைக் கண்டுபிடித்தனர். ஏனைய பறவைகள் காற்றில் சிறகடிக்கும். ஆனால், ஜென்டூ பெங்குயின் காற்றைவிட அதிக அடர்த்தி கொண்ட நீரில் இறக்கை கொண்டு நீந்த வேண்டும். எனவே மற்ற பறவைகளின் இறக்கைகளை விட குட்டையாகவும் தட்டையாகவும் இதற்கு இறக்கை இயற்கை அளித்துள்ளது.

நொடிக்கு நொடி சிறகடித்தல்: மேலும் துடுப்பு போன்ற இறக்கை, செதில் இறகுகளால் மூடப்பட்டு தட்டையான கை போல விமான இறக்கை வடிவில் உள்ளது. விமானத்தின் இறக்கை போலவே, முன்புறத்தில் தடிமனாகவும் அதன் இறுதி பகுதியில் குறுகலாகவும் இருக்கும். முன்புறம் தடிமன், பின்புறம் மெலிந்த இறக்கை விமானத்தில் மேல் நோக்கிய தள்ளு விசையை ஏற்படுத்துகிறது. ஜென்டூ பெங்குயினுக்கு இருக்கும் இத்தகைய இறக்கை அதனை முன்னே வேகமாகச் செலுத்துகிறது. கைகளைச் சுழற்றி நீரை தள்ளி நாம் நீந்துகிறோம்.

தள்ளிய நீர் கொந்தளிப்பு செய்து நம்மை பின் நோக்கி இழுக்கும். ஆனால், பென்குயினின் செதில் போன்ற அடர்த்தியான, குறுகிய இறகுகளில் காற்றைப் பூட்டி வைத்து நீரின் உராய்வு விசையை குறைத்துக்கொள்கிறது. மேலும் நீந்தும் போது ஏற்படும் நீர் கொந்தளிப்பை இந்த அமைப்பு குறைத்து பின்புறமாக இழுவை செய்யும் விசையை தடுக்கிறது. மெலிந்த இறக்கையின் பின் பகுதியை பென்குயின் முன்னே பின்னே வளைக்க முடியும். இதன் காரணமாக நீருக்கும் இறக்கைக்கும் இடையில் உள்ள கோணம் மாறும். நீரின் உராய்வு விசை இதன் தொடர்ச்சியாகக் குறைந்து போகிறது. மணிக்கு எவ்வளவு தடவை சிறகடிக்கிறது என்பதும் வேகத்தைத் தீர்மானம் செய்யும். நொடிக்குப் பலதடவை சிறகடித்தால் கூடுதல் வேகம் கிட்டும்.

ஆனால், விரைவில் ஆற்றலை இழந்து பறவை சோர்வடைந்து விடும். சரியான அளவில் சிறகடித்து, தேர்வான கோணத்தில் இறக்கையை மடித்து வைத்தல் வேகமாக செல்ல முடியும் என ஆய்வாளர்கள் கண்டனர். 18 டிகிரி கோணத்தில் பின்புறமாக இறக்கையை மடித்து வைத்துக்கொண்டு நொடிக்கு ஒருதடவை சிறகடித்தால் அதிகபட்ச வேகத்தில் செல்லும். இறக்கை கோணத்தைக் கூட்டிக்குறைத்துச் சிறகடித்து உந்துவிசை ஏற்படுத்தும் நீர் வாழ் விலங்குகளின் பொறிமுறையை (mechanism) அறிந்து கொள்வதன் மூலம் அடுத்த தலைமுறை நீருக்குள் மூழ்கிச் செல்லும் ரோபோ கப்பல்களை வடிவமைக்க முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

- கட்டுரையாளர்: அறிவியல் எழுத்தாளர், புது டெல்லியில் உள்ள ‘விஞ்ஞான் பிரச்சார்’ நிறுவனத்தின் முதுநிலை விஞ்ஞானி; தொடர்புக்கு: tvv123@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in