

தனது ஒரு வயது பெண்குழந்தை மிசுசுவை தோளில் போட்டு தட்டி தூங்க வைக்க முயன்று கொண்டிருந்தார் ஜப்பானின் சிபா பல்கலைக்கழக தோட்டக்கலை இணை பேராசிரியர் யுயா ஃபுகானோ (Yuya Fukano). குழந்தையை சமாதானம் செய்ய எப்போதும் போல அன்றும் தனது வீட்டின் அருகே சுற்றிவந்து கொண்டிருந்தார்.
அப்போது, ஆங்காங்கே புதராக வளரும் புளியாரைக்கீரை அவரின் கண்ணில்பட்டது. வீட்டின் அருகே அங்கும் இங்கும் இருந்த மணல் திட்டில் புல்லுடன் புளியாரைக்கீரையும் வளர்ந்திருந்தது. அதில் ஒன்றும் வியப்பு இல்லை. புல், தக்காளி போன்ற தாவரங்களின் எண்ணிக்கையில் உலகில் மூன்றாவது நிலையில் உள்ள புளியாரைக்கீரை காணக்கிடைப்பது அதிசயம் அல்ல.
மைதானம், பூங்கா, சாலையோரம், ரயில் பாதைகள், ஆற்றங்கரை, புல்வெளிகள், விவசாய நிலங்கள், ஏன் நடைபாதையில் உள்ள இடைவெளியில் கூட இந்தத் தாவரத்தை எளிதில் காணலாம். சிவப்பு இலைகள் மற்றும் பச்சை இலைகள் கொண்ட இரண்டு வகை புளியாரைக்கீரை (Oxalis Corniculata) வகைகள் உள்ளன.
பச்சை இலைகள் சிவப்பாகிறது: அவரது வீட்டின் அருகே எல்லாபுளியாரைக்கீரையும் சிவப்பு இலைகளைக் கொண்டவையாக இருந்தன. அதே சமயம் பூங்கா, புல்வெளி போன்ற பசுமையான பகுதிகளில் வளர்ந்த புளியாரைக்கீரை எல்லாம் பச்சை இல்லை கொண்டவையாக இருந்தன. அதுதான் அவருக்கு வியப்பை ஏற்படுத்தியது.
“எனது ஆய்வு கூட்டாளிகளிடம் இதை கூறியபோது, வியப்பாக இருக்கிறதே , நாம் ஆய்வு செய்து பார்க்கலாம் என முன்வந்தனர். அப்படி தான் ஆய்வு செய்ய தொடங்கினோம்" என்கிறார் ஃபுகானோ. “எங்களதுஆய்வின் இறுதியில், நகரமயமாக்கலின் தொடர்ச்சியாக நகர்புறங்களில் சிவப்பு நிற இலைகள் கொண்ட புளியாரைக்கீரை பரிணாம தேர்வு அடைகிறது எனக்கண்டோம்" என்கிறார்.
தாவரங்களைப் பொறுத்தவரை பரிணாம படிநிலை வளர்ச்சி முடிந்த ஒன்றல்ல, இன்றும் தொடர்கிறது என இந்த ஆய்வு சுட்டுகிறது. மேலும் நகர்புறம் போன்ற புதிய சுற்றுசூழல் உருவாகும்போது அதற்கு ஏற்றார்போலவும் பரிணாம வளாச்சி ஏற்படுகிறது என்பதையும் இது நிரூபிக்கிறது.
1750களில் தொடங்கிய தொழில்புரட்சியின் தொடர்ச்சியாக உலகில் பற்பல பெரிய நகரங்கள் தோன்றின. இதனால் வளர்ச்சி என்ற பெயரில் நகரத்தின் பெரும்பகுதிகள் சிமெண்ட், செங்கல், கருங்கல் ஆகியவற்றால் மூடப்பட்டுவிட்டன. இதன் விளைவாக சுற்றியுள்ள இடங்களை விட நகர்புறத்தில் வெப்ப அலைவீசிக் கொண்டிருக்கிறது. 'நகர்புற வெப்ப தீவு' எனப்படும் இந்த புதிய சூழலில் பரிணாம வளர்ச்சியின் காரணமாக தாவரங்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்த ஆய்வாளர்கள் டோக்கியோ நகரில் ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள்.
நகரின் தார் சாலைகளில் கருஞ்சிவப்பு நிற இலை கொண்ட புளியாரைக்கீரை செடிகள் கூடுதலாகக் காணப்பட்டன. அதே சமயம் அதே நகரில் பூங்கா, வெட்ட வெளி போன்ற பசுமை பகுதிகளில் பச்சை நிற இலை கொண்ட புளியாரைக்கீரை செடிகள் கூடுதலாக இருந்தது; சிவப்பு நிற இலைகள் கொண்ட புளியாரைக்கீரை அறவே இல்லை.
‘சன்ஸ்கிரீன்’ போன்ற நிறமி: அந்தோசயனின் எனும் நிறமி பொருள் செறிவு கூடக் கூட இலையின் நிறம் பச்சையிலிருந்து கரும்சிவப்பு மற்றும் செவ்வூதாவாக மாறுகிறது. வெயிலில் முகம் கருத்து விடாமல் இருக்க முகப்பூச்சு போட்டுக்கொள்வது போல, வெப்பநிலையை தாக்கு பிடிக்க அந்தோசயனின் வேதிப்பொருள் இலைகளுக்கு உதவும். எனவே நகர்புற வெப்ப தீவுகளில் கூடுதல் செறிவில் அந்தோசயனின் உமிழும் மரபணு மாற்றம் ஏற்பட்டு சிவப்பு நிற இலை புளியாரைக்கீரை வளர்வதாக ஆய்வாளர்கள் கருதினார்கள்.
கண்டதே காட்சி; கொண்டதே கொள்கை என்று அறிவியல் செயல்பட முடியாது. எனவே இந்த கருதுகோளை சோதனை செய்து பார்க்க ஆய்வுக்கூடத்தில் பல பரிசோதனைகளை மேற்கொண்டனர். வெப்ப நிலை இயல்பாக உள்ள 25°C வெப்ப நிலை, 60% ஈரப்பதம் கொண்டது முதல் அறை. வெப்ப அலை வீசும் 35°C உயர் வெப்பம் அதே 60% ஈரப்பதம் கொண்டது இரண்டாம் அறை. இந்த இரண்டு அறைகளிலும் பச்சை இலை புளியாரைக்கீரை, சிவப்பு இலை புளியாரைக்கீரை விதைகளை விதைத்து சோதனை செய்தனர்.
எழு வார வளர்ச்சிக்கு பிறகு ஒப்பிட்டு நோக்கினார்கள். வெப்ப தாக்குதல் இல்லாத முதல் அறையில் பச்சை இலை புளியாரைக்கீரை தளதளவென வளர்ந்தது. பச்சை இலை தாவரங்களில் காய்த்த பழங்களின் எண்ணிக்கையும் கூடுதலாக இருந்தது. அதே சமயம் வெப்ப அலை வீசும் நகர்புறம் போன்ற இரண்டாம் அறையில் நிலைமை தலைகீழாக இருந்தது.
செங்கல் போன்ற பொருளை அடுக்கி நடைபாதை உருவாக்கப்படுகிறது. இதில் உள்ள இடுக்குகளில் எந்த விதை முளைக்கிறது என்ற பரிசோதனையும் செய்து பார்த்தார்கள். பச்சை இலை விதைகளை விட சிவப்பு இலை தாவர விதை கூடுதல் அளவு முளைவிட்டது, மேலும் வளர்ந்த போது கூடுதல் பழங்கள் காய்த்தன.
பரிசோதனையில் நகர்புற வாழ்வு சூழலில் சிவப்பு இலை புளியாரைக்கீரை தான் வெற்றி பெற்றது. எனவே தான் உலகம் முழுவதும் நகர்ப்புறங்களில் சிவப்பு இலை புளியாரைக்கீரை காணப்படுகிறது.
- கட்டுரையாளர்: அறிவியல் எழுத்தாளர், புது டெல்லியில் உள்ள ‘விஞ்ஞான் பிரச்சார்’ நிறுவனத்தின் முதுநிலை விஞ்ஞானி; தொடர்புக்கு: tvv123@gmail.com