

சீனாவின் வுஹானில் உள்ள ஹுவாஜோங் (Huazhong) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஏய்க் லி (Yike Li), பின் சு ( Bin Su) முதலியோர் அடங்கிய ஆய்வுக் குழு சேர்ந்து கரை பிடிக்காத கழிவறை கிண்ணங்களை தயார் செய்துள்ளனர். அதன் அதிவழுக்கும் தன்மையின் காரணமாக ஏதும் அதில் படிந்து ஒட்டிக்கொள்வதில்லை. எல்லாம் வழுக்கி நழுவி கிழே விழுந்து விடுகிறது என கண்டுபிடித்துள்ளார்கள்.
பொதுவாகப் புழக்கத்தில் இருக்கும் பீங்கான் மற்றும் செராமிக் கழிப்பறை கிண்ணங்கள் ஓரளவு நழுவு தன்மை கொண்டவை என்றாலும் எளிதில் கரை படியும். காலப்போக்கில் சிதைவு ஏற்பட்டு கழிவறை பிசிறு ஒட்டிக்கொண்டு அசுத்தம் அடையும்.
மணலோடு பிணைந்த பிளாஸ்டிக்: இதனை மாற்ற பாலிப்ரொப்பிலீன் துகள்கள் மற்றும் நீரை விலக்கும் தன்மை கொண்ட மணல் துகள்களை லேசர் ஒளிக்கற்றை கொண்டு பிணைத்தனர். 3D பிரின்டர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாதிரி கழிவறை கிண்ணத்தை உருவாக்கி சோதனை செய்தனர்.
நீரை விலக்கும் தன்மை கொண்ட மணல் துகளும்பிளாஸ்டிக் துண்டுகளும் சிக்கல் மிகுந்த வடிவில் ஒன்றுடன் ஒன்று பிணைந்த பின்னர் புதுமையான பொருள் உருவானது. இந்த பொருளின் மீது ஆய்வாளர்கள் டைமிதைல் சிலிக்கான் எண்ணெய் பூச்சு செய்தனர்.
லேசர் கொண்டு சின்டரிங் (sintering) பிணைப்பு முறையில் மணல்மற்றும் பாலிப்ரொப்பிலீன் துகள்கள் கொண்டு ஒரு கிண்ணம் வடிவமைக்கப்பட்டது. அதில் நுண்துளைகள் ஏற்பட்டன. சின்டரிங் முறையில் பொருட்களின் மீது வெப்பம் பாய்ச்சப்படுவதால் இரண்டு பொருள்களுக்கு இடையில் நுண்துளை கொண்ட அமைப்பு ஏற்படும். ஊறுகாயில் உரைப்பும் உப்பும் சேர்வது போல மணல் துகள் பிளாஸ்டிக் துண்டுகளுக்கு இடையே உள்ள நுண் துளைகளில் சிலிக்கான் எண்ணெய் மசகுப் பொருள் புகுந்து கொண்டது. இதன் தொடர்ச்சியாகக் கழிவறை கிண்ணத்துக்கு அதி வழுக்கும் தன்மையை அளித்தது.
கழிப்பறை கிண்ணம் முழுவதும் எல்லா இடங்களிலும் நுண் துளைகளின் உள்ளே மசகு எண்ணை பொருள் நிரம்பி இருந்தது. எனவே குறிப்பிட்ட பகுதியில் தேய்மானம் ஏற்பட்டாலும் சட்டென்று மசகு பொருள் வடிந்து அந்த பகுதியிலும் புகுந்து கொண்டது. எனவே கழிவறை கிண்ணத்தின் மேல் பரப்பை அழுத்தித் தேய்த்தாலும் அதன் நழுவு தன்மை குறையவில்லை.
ஐடியா தந்த தாவரம்: இந்த கண்டுபிடிப்பிற்குப் பூச்சியைப் பிடித்து உண்ணும் அசைவ தாவரமான நேபெந்தஸ் தங்களுக்கு உத்வேகம் தந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குடம் போன்ற அமைப்பிலிருக்கும் இந்த தாவரத்தின் உட்புறம் வழுக்கும் தன்மை கொண்ட மசகுப் பொருளைச் சுரக்கின்றன. இதனால் தாவரத்துக்குள்ளே செல்லும் பூச்சி திரவத்தில் சிக்கி வழுக்கி கீழே விழுந்துவிடும்.
எண்ணைப் பசை போன்ற சில பொருட்களுக்கு நீர் விலக்கு தன்மை இருக்கும். சிலிக்கான் எண்ணெய் பூச்சு மற்றும் நீர் விலக்கு தன்மை கொண்ட மணல் துகள்கள் இந்த கிண்ணத்துக்கு நீர் விலக்கும் தன்மையை அளித்தது. மனித கழிவுகள் அனைத்தும் நீர் பசை கொண்டவை எனவே இவை நீர் விலக்கு தன்மை கொண்ட கிண்ணத்தில் படிவதில்லை. விலகி நழுவி சென்று விடும்.
சோதனை செய்ய தயார் செய்த கழிவறையில் களிமண் கலந்த சளி, தயிர், தேன், ஜெல், செயற்கை கழிவு முதலியவற்றைச் செலுத்தி ஆய்வு செய்தார்கள். ஏதுவும் கழிவறைகிண்ணத்தில் படிந்து கரை ஏற்பட்டுவிடவில்லை. இதற்கு முன்பும் டெஃப்லான் பூசப்பட்ட கரை படியாகழிவறை கிண்ணங்களைப் பொறியாளர்கள் தயார் செய்துள்ளனர் என்றாலும் அவை நீடித்து நிலைப்பதில்லை.
காலப்போக்கில் இந்த பூச்சு அகன்று விடுகிறது; அதன் பின்னர் மறுபடியும் பூச்சு செய்யவேண்டும் அல்லது மாற்றி பொருத்த வேண்டும். சேண்ட்பேப்பர் கொண்டு ஆயிரம் முறை தேய்த்த பின்னரும் இந்த கழிவறை கிண்ணங்களின் வழுக்கும் தன்மை குறையவில்லை.
கழிவு ஒட்டிக் கொள்வதால் கழிவறையை சுத்தம் செய்வது சவாலான காரியம் மட்டுமல்ல, பெருமளவு நீரும் சுத்தம் செய்கையில் வீணாகிறது. மேலும் ரயில் போன்ற போக்குவரத்து வாகனங்களில் தேக்கி வைக்கும் நீரின் அளவு மிக குறைவு. கரை படியாத கழிவறைகள் எனில் குறைந்த நீர் கொண்டு சுத்தம் செய்துவிடலாம்.
உலகம் முழுவதும் கழிவறையை சுத்தம் செய்ய ஒவ்வொரு நாளும் சுமார் 1 கோடியே 41 லட்சம் லிட்டர் நீரை பயன்படுத்துகிறோம். மொத்த ஆப்பிரிக்காவில் பயன்படுத்தப்படும் நீரை போல இது ஆறு மடங்கு ஆகும். குறைந்த நீரை கொண்டு கழிவறையை சுத்தம் செய்ய முடிந்தால் உடல் நலத்துக்கும் சூழலுக்கும் சால சிறந்தது.
- கட்டுரையாளர்: அறிவியல் எழுத்தாளர், புது டெல்லியில் உள்ள ‘விஞ்ஞான் பிரச்சார்’ நிறுவனத்தின் முதுநிலை விஞ்ஞானி; தொடர்புக்கு: tvv123@gmail.com