புதுமை புகுத்து - 3: மூளையை ஒட்டுக் கேட்ட அதிசயம்

புதுமை புகுத்து - 3: மூளையை ஒட்டுக் கேட்ட அதிசயம்
Updated on
2 min read

மற்றவர்களின் மனதின் எண்ணங்களை உணரும் அற்புதத்தை அறிவியலாளர்கள் செய்து காட்டியுள்ளனர். பக்கத்து மேசையில் பேசுவதை ஒட்டுக்கேட்பது போல ஒருவர் காதில் மாட்டிய இயர் போன் வழியே கேட்கும் பாடலை அவரது மூளை துடிப்பை அளந்து அறிந்துகொண்டனர்.

மூளையின் துடிப்பை அறியும் வகையில் தன்னார்வலர்கள் சிலரின்தலையில் மின்முனைகளை பொருத்தினார்கள். மின்முனையில் ஏற்படும் மின் அதிர்வுகளை அறிந்து மூளைதுடிப்பை உணர்ந்து கொண்டனர். அதனை கணினி மூலம் பகுத்துதன்னார்வலர்கள் கேட்டுக்கொண்டிருந்த பாடலை மறு உருவாக்கம் செய்தனர். மேலும் தன்னார்வலர்களிடம் மறு உருவாக்கம் செய்யப்பட்ட தளத்தை இசைத்து காண்பித்துபரிசோதனையின்போது அவர்கள் கேட்டுக்கொண்டிருந்த பாடலின் தாளம் அது தானா என உறுதிப்படுத்திக்கொண்டனர். அதாவது வெற்றிகரமாக மூளையை ஒட்டுக்கேட்டு சாதனை புரிந்துள்ளனர்.

எந்த பாடல் தெரியுமா? - பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர் லுடோவிக் பெல்லியர் தலைமையிலான ஆய்வுக்குழு இந்த பரிசோதனையை மேற்கொண்டது. தாமே முன்வந்து பங்கேற்ற மூளை வலிப்பு நோயாளிகள் சிலரை கொண்டு 2009 முதல் 2015 வரை மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 29 தன்னார்வலர்கள் பங்கு கொண்டனர்.

மூல பாடலின் தாளம் போல மூளை துடிப்பைப் பகுத்து கணினி வழியே பெற்ற பாடல் தாளம் துல்லியமாக அமையவில்லை. கிணற்றுக்குள் நின்று பாடுவது போல தான் இருந்தது. எனினும் பாடலின் தாளத்தை அறிந்து கொள்ள முடிந்தது. அரசல் புரசலாகப் பாடலை அறிந்துகொள்ள முடிந்தது.

மூளை வலிப்பு நோய் முதலியவற்றை பகுத்தறிய தலையில் மின்முனைகளை பொருத்தி மின் அதிர்வுகளை ஆய்வு செய்வார்கள். அதே கருவியை தான் இந்த பரிசோதனையிலும் பயன்படுத்தினார்கள். ஆய்வின்போது இந்த தன்னார்வலர்கள் பிங்க் ஃபிலாய்ட் எனும் அமெரிக்க ராக் பாடகரின் குறிப்பிட்ட பாடலை காதில் உள்ள இயர் போன் கொண்டு கேட்டனர். அவ்வாறு பாடலை கேட்கும்போது அவர்கள் மூளையில் ஏற்படும் மின் அதிர்வுகளைப் பதிவு செய்து ஆய்வு செய்தனர்.

தலையில் பொருத்தப்பட்ட மின்முனைகள் அளவிடும் மின் அதிர்வுகளை கொண்டு மூளை செல்கள் அதாவது நியூரான்களுக்கு இடையில் நகரும் மின் சமிக்ஞைகளைப் பதிவு செய்ய முடிந்தது.

ராக் இசை உணரும் மூளைப்பகுதி: ஆய்வில் பங்கேற்ற ஒவ்வொருவரின் தலையிலும் மொத்தம் 2,668 மின்முனைகள் பொருத்தப்பட்டன. இதனை கொண்டு இசையை கேட்கும்போது மூளையின் எந்த பகுதியில் துடிப்பு செய்கிறது என அறிய முடிந்தது. 2,668 மின்முனைகளில் 347 இசையுடன் தொடர்புடையதாக உள்ளதை கண்டனர்.

இந்த மின்முனைகள் சுப்பீரியர் டெம்போரல் கைரஸ் (STG), சென்சரி-மோட்டார் கார்டெக்ஸ் (SMC) இன்ஃபீரியர் ஃப்ரண்டல் கைரஸ் (IFG) எனும் மூளையின் மூன்று பகுதியை சார்ந்தவை. மேலும் பகுத்து காணும்போது மூளையின் சுப்பீரியர் டெம்போரல் கைரஸ் (STG) பகுதி தான் இசையின் தாளத்தை, குறிப்பாக ராக் இசையின் கிட்டார் தாளத்தை உணர்கிறது எனக் கண்டனர்.

இந்த ஆய்வில் இசையின் குறிப்பிட்ட அதிர்வெண் ஒலி இசைக்கப்படும்போது அதற்கு ஜோடியாக மூளையில் அதிர்வுகள் ஏற்படுவதை இனம் கண்டனர். ஒவ்வொருமுறை பிங்க் ஃபிலாய்ட் இசையின் லீட் கிட்டார் அல்லது சின்தசைசர் ஒலிக்கத் தொடங்கும் போதும் அனைத்து பங்கேற்பாளர்களிடமும் குறுகிய காலத்துக்கு மூளையின் குறிப்பிட்ட அதிர்வு இருந்தது.

இசையில் வாய் பாட்டு வரும் இடங்களில் கூடுதல் அதிர்வெண் அதிர்வுகள் மூளையில் ஏற்பட்டது. தாள இசை தரும் கிட்டார் ஒலியை சார்ந்து மூன்றாவது மூளை அதிர்வு பாங்கு இருந்தது. இப்படி இசையின் வெவ்வேறு கூறுகளுக்கு ஏற்றபடி மூளையின் அதிர்வுகளில் மாற்றம் தென்பட்டது.

மேலும் தன்னார்வ பங்கேற்பாளர்கள் பாடலை கேட்கும்போது பாடலின் எந்தெந்த பகுதியில் மூளையின் எந்தப் பகுதிகள் தூண்டப்பட்டன என்பதை பகுத்து ஆய்வு செய்தார். எந்தெந்த அதிர்வெண் இசைக்கு எந்தெந்த பகுதி எதிர்வினையாற்றுகின்றன என்பதையும் கவனித்துப் பதிவு செய்தார். பின்னர் இந்த தரவுகளை செயற்கை நுண்ணறிவு கணினிக்கு அளித்து பயிற்சி தந்து பகுப்பாய்வு செய்தார்.

இந்த ஆய்வு மேலும் வெற்றி காணும்போது வாய் பேச முடியாதவர்கள் பேசலாம். பேச நினைக்கும் செய்தியை கணினி மூலம் ஒலியாகமாற்றி தரும் கருவியை ஸ்டீபன்ஹாகிங் ஏற்கெனவே பயன்படுத்தினார். ஆனால், அவரது குரல் இயந்திரத்தனமாக இருந்தது.

நாம் பேசும்போது வார்த்தைகளை ஒலிப்பது மட்டும் இல்லை, ஏற்ற இறக்கத்துடன் இசைக் கூற்று கொண்டு தான் பேசுகிறோம். ஆசையாக அம்மா நமது பெயரைக் கூப்பிடும்போதும், கோபத்தில் கூப்பிடும்போதும் ஒலிக்கும் வார்த்தை ஒன்றுதான் என்றாலும் ஒலிக்கும் விதம் வெவ்வேறு அல்லவா?

எதிர்காலத்தில் பேச்சு திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு உணர்வுடன் பேச்சை வெளிப்படுத்தும் கருவியை உருவாக்க இந்த ஆய்வுகள் பயன்படும் என்கிறார் லுடோவிக் பெல்லியர்.

(புதுமை தொடரும்)

- கட்டுரையாளர்: அறிவியல் எழுத்தாளர், புது டெல்லியில் உள்ள ‘விஞ்ஞான் பிரச்சார்’ நிறுவனத்தின் முதுநிலை விஞ்ஞானி; தொடர்புக்கு: tvv123@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in