புதுமை புகுத்து - 2: பூமியின் உள்ளே இருக்கும் இரண்டு வீக்கங்கள்
பார்க்காமல் சுவரில் தலையை முட்டிக் கொண்டால் வீக்கம் ஏற்படுவது போல 440 – 445 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அப்போது தான் உருவாகியிருந்த இளம் பூமி தேயியா (theia) எனும் வேறு ஒரு கோளுடன் மோதிக்கொண்டதன் வடு இன்னமும் பூமியின் உள்ளே இருக்கிறது என்கிறார்கள் கால்டெக் நிலவியல் ஆய்வாளர் கியான் யுவான்.
வெங்காயத்தின் உள்ளே அடுக்கடுக்காக உள்ளது போலவே புவியின் உள்கட்டமைப்பு உள்ளது. மையத்தில் இளகிய நிலையில் உள் மையம் (Inner Core) உள்ளது. அதனை சுற்றி வெளிப்புற மையம் (Outer Core ), அதன் மேல் கவசம் (Mantle), இறுதியில் மேலோடு (Crust) எனும் அடுக்கு உள்ளது. மேலோடு சில்லு சில்லாக உடைந்துள்ளது. கடலில் கட்டுமரம் மிதப்பது போல இந்த சில்லுகள் கவச அடுக்கின் மீது மிதந்து செல்கிறது.
மிதக்கும் சில்லுகள் மோதும் இடங்களில் எரிமலை நிலநடுக்கம் ஏற்படுகிறது. ஒன்றை ஒன்று உரசிக் கொண்டு செல்லும் இடங்களில் நிலநடுக்கம் ஏற்படுகிறது. இந்த அடுக்குகளில் பொருள்களின் திணிவு சமமாக இல்லை. உப்புமா கிண்டும் போது அங்கும் இங்கும் கட்டிகள் உருவாவது போல இந்த அடுக்குகளில் சிறு சிறு கட்டிகள் உள்ளன.
நிலநடுக்கம் சொல்லும் சேதி: தேங்காயை தட்டிப்பார்த்தால் இளநீர் இருக்கிறதா, தேங்காய் முற்றி விட்டதா என அறிய முடியும். அதுபோல பூமியில் ஏற்படும் நிலநடுக்க அலைகள் பரவும் பாங்கை வைத்து பூமியின் உள்ளே உள்ள அமைப்பை நாம் அனுமானம் செய்யலாம்.
1970களில் நில அதிர்வு டோமோகிராபி எனும் இந்த நுட்பம் உருவானது. அதன் மூலம் பூமியின் உள்ளே இரண்டு பெரும் வீக்க பகுதிகள் உள்ளன என நிலவியலாளர்கள் உணர்ந்து கொண்டனர். இந்த இரு வீக்கங்கள் இமய மலையின் உயரத்தை போல நூறுமடங்கு உயரமும் பெரும் காண்டம் அளவு விஸ்தீரணமும் கொண்டவை. இதில் ஒன்று ஆப்ரிக்கா கண்டத்தின் அடியிலும் மற்றொன்று பசிபிக் பெருங்கடலின் அடியிலும் உள்ளது.
சிறு சிறு கட்டிகள் உருவாவதைப் புரிந்து கொள்ள முடியும் என்றாலும் இந்த இரண்டு பெரும் வீக்கங்கள் எப்படி உருவாயின என்பது பெரும் புதிராக இருந்து வந்தது. சுமார் 450 கோடி ஆண்டுகள் முன்னர் சூரியன் தோன்றியது. அதற்கு முன்பு இந்த பகுதியில் ராட்சச அளவிலான விண்வெளி முகில் இருந்தது. இந்த முகிலின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு ஒளி செல்ல சுமார் மூன்று ஆண்டுகள் ஆகும். அவ்வளவு பெரியது.
நிலா வந்தது எப்படி? - தன்னை தானே சுழன்று கொண்டிருந்த இந்த முகிலில் தயிரை கடைந்தால் வெண்ணெய் திரள்வது போல மையத்தில் பொருள்கள் சேர்ந்து குவிந்து திணிவு கூடி சூரியன் உருவானது. மையத்தில் வெண்ணெய் திரளும் போது ஆங்காங்கே சிறு சிறு வெண்ணெய் முத்துக்கள் உருவாவது போல பூமி போன்ற கோள்களும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு சிறு கோள்களும் உருவாயின.
தாறுமாறாகச் சுற்றி வந்த இந்த சிறு கோள்கள் அவ்வப்போது வேறு கோள்கள் மீது மோதி காலப்போக்கில் பெருமளவில் அழிந்து விட்டன. தேயியா எனும் சிறு கோள் பூமியின் மீது மோதியதன் விளைவாகத் தான் நிலவு தோன்றியது எனக் கருதுகிறார்கள்.
அந்த கட்டத்தில் இளம் பூமி திடமாக இருக்கவில்லை. இளகிய குழம்பு நிலையிலிருந்தது. மோதிய தேயியாவின் இரண்டு பெரும் துண்டுகள் இளகிய பூமிக்கு உள்ளே மூழ்கி இன்று இரண்டு பெரும் வீக்கம் போல தென்படுகிறது என்கிறார் கியான் யுவான்.
(புதுமை தொடரும்)
- கட்டுரையாளர்: அறிவியல் எழுத்தாளர், புது டெல்லியில் உள்ள 'விஞ்ஞான் பிரச்சார்' நிறுவனத்தின் முதுநிலை விஞ்ஞானி; தொடர்புக்கு: tvv123@gmail.com
