புதுமை புகுத்து - 1: தொடங்கியது செயற்கை செவ்வாய் பயணம்

3-D பிரிண்டர் முறையில் வடிவைமக்கப்பட்ட ‘மார்ஸ்ன் டியூன் ஆல்பா’ குடியிருப்பு.
3-D பிரிண்டர் முறையில் வடிவைமக்கப்பட்ட ‘மார்ஸ்ன் டியூன் ஆல்பா’ குடியிருப்பு.
Updated on
2 min read

கடந்த ஜூன் 25-ம் தேதி நான்கு நாசா விண்வெளி வீரர்கள் செயற்கை செவ்வாய் பயணத்தை மேற்கொள்ளத் தொடங்கினர். இந்தத் திட்டத்தின் கமாண்டர் மருத்துவ விஞ்ஞானி கெல்லி ஹாஸ்டன் ஆவார். இவருடன் விமான பொறியாளர் ராஸ் ப்ரோக்வெல், மருத்துவர் நாதன் ஜோன்ஸ் மற்றும் மருத்துவ செவிலி அலிசா ஷானன் ஆகிய மூவரும் இணைந்துள்ளனர்.

சுமார் 378 நாட்கள் நீடிக்கும் இந்த சோதனை திட்டத்தில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்கள் சென்றால் எப்படி வாழ்ந்து வேலைகளை மேற்கொள்வார்களோ அதுபோலவே இந்தநால்வரும் பாசாங்காக செயல்படுவார்கள். இந்த சோதனை தொடங்கி நூறு நாட்கள் கடந்து விட்டன.

2040-ல் செவ்வாய் இலக்கு! - 2040-க்கு முன்பாக செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவது என நாசா யோசனை செய்துவருகிறது. அதற்கான முன் தயாரிப்பு தான் இந்த சோதனை. இந்த ஆய்வின் மூலம் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் சென்றால் என்னென்ன சவால்கள் ஏற்படலாம் என அறிந்து கொள்ளலாம்.

எளிமையான ஒரு சவாலை எடுத்துக்கொள்வோம். பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையே சராசரி தொலைவு 225 மில்லியன் கிலோமீட்டர். அதிக தொலைவு உள்ள நிலையில் இது 401 மில்லியன் கி.மீ., குறைந்த தொலைவு உள்ளபோது 55 மில்லியன் கி.மீ. என இது அமையும். ஒளியின் வேகத்தில் ரேடியோ வழியே தொலைதொடர்பு கொண்டாலும் அங்கிருந்து ’ஹலோ’ சொன்னால் பூமியை வந்து அடைய சுமார் பதினான்கு நிமிடங்கள் பிடிக்கும்.

அதன் பிறகு பூமியிலிருந்து ’ஹலோ’ சொன்னால் அது அங்கே சென்று சேர அடுத்த பதினான்கு நிமிடங்கள் பிடிக்கும். அதாவது ஒரு தகவல் தொடர்பு சுற்று முடியவே சுமார் அரை மணிநேரம் எடுக்கும். இதன் பொருள் செவ்வாயிலிருந்து பூமியில் உள்ளவர்களோடு பேசுவது என்பது வாட்ஸ்ஆப்பில் வாய்ஸ் நோட்ஸ் அனுப்புவது போல தான் பேச முடியும். இந்த தகவல் தொடர்பு சூழலில் எப்படி இயங்குவது என்பதை பரிசோதனை செய்வார்கள்.

அன்கா செலாரியு, ராஸ் ப்ரோக்வெல், கெல்லி ஹாஸ்டன், நாதன் ஜோன்ஸ்
அன்கா செலாரியு, ராஸ் ப்ரோக்வெல், கெல்லி ஹாஸ்டன், நாதன் ஜோன்ஸ்

3-டி பிரிண்டர் குடியிருப்பு: குழுவினரின் உடல்நலம் மற்றும் செயல்திறன் குறித்த செயலொத்த ஆய்வு (Crew Health and Performance Exploration Analog CHAPEA)என்பது இந்த திட்டத்தின் பெயர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் ஹூஸ்டன் பகுதியில் 3-டி பிரிண்டர் முறையில் இந்த குடியிருப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. ’மார்ஸ்ன் டியூன் ஆல்பா’ (Mars Dune Alpha) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த குடியிருப்பின் விஸ்தீரணம் வெறும் சிறிய நான்கு பெட்ரூம் பிளாட் அளவு தான்.

பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்தை சென்று அடைய சுமார் ஆறு மாதங்கள் ஆகும். அங்கு சில வாரங்கள் பணி செய்த பின்னர் ஆறு மாதங்கள் திரும்ப பயணம் செய்து பூமியை அடைய வேண்டும். இந்த திட்டத்தின் பகுதியாக முதல் ஆறு மாதம் இந்த குடியிருப்பில் அடைந்து கிடப்பார்கள். அங்கே ரோபோ செயல்பாடுகள், வாழ்விட பராமரிப்பு, தனிப்பட்ட சுகாதாரம், உடற்பயிற்சி உணவுக்காக பயிர் வளர்த்தல் உட்பட பல்வேறு பணிகளில் அவர்கள் ஈடுபட வேண்டும்.

குடியிருப்பின் வெளியே சுமார் நூறு சதுர மீட்டர் அளவுக்கு மணல் பகுதி இருக்கும். செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியதும் சில வாரங்கள் செவ்வாய் மீது நடந்து கல் மண் மாதிரிகளை சேகரிப்பது போல இந்த பகுதியில் குடியிருப்பில் சிறை பட்ட தன்னார்வலர்கள் செயல்படுவார்கள்.

பின்னர் மறுபடியும் குடியிருப்பின் உள்ளே சென்று அடுத்த ஆறு மாத காலம் அடைத்துக்கொண்டு விடுவார்கள். திரும்பவும் வரும் 2024 ஜூலை 7 அன்று இந்த சிறைபட்ட குடியிருப்பிலிருந்து வெளியே வருவார்கள்.

குறைந்த நீர், காற்று: தொலைதொடர்பு, உணவு முதலிய செவ்வாய் வாழ்வு நிலையை ஒத்து இருக்கும் ஏன்றாலும் குடியிருப்பில் ஆக்சிஜன் அளவு காற்றழுத்தம் போன்றவை பூமியில் உள்ள நிலையில் தான் இருக்கும். செவ்வாயில் ஏற்படுத்தப்படும் குடியிருப்பிலும் இதே போன்ற சூழலைத் தான் உருவாக்குவார்கள்.

செவ்வாய் கோளுக்கு சென்று திரும்ப ஒரு ஆண்டுக்கும் கூடுதல் காலம் பிடிக்கும். இந்த காலம் முழுவதும் விண்கலத்தில் செல்லும் நான்கு வீரர்கள் மட்டுமே தனித்து இருக்க வேண்டும். நான்கு பேர் மட்டும் 158 சதுர மீட்டர் அளவுள்ள வாழ்விடத்தில் ஒரு ஆண்டுகாலம் அடைபட்டு கிடந்தால் என்னென்ன உளவியல் சிக்கல் ஏற்படக்கூடும் என அறிவதும் இந்த ஆய்வின் மற்றொரு நோக்கம்.

இந்த குடியிருப்பில் உணவு, நீர், சுவாசிக்க காற்று போன்றவை அபரிமிதமாகக் இருக்காது. சிக்கனமாக இவற்றைச் செலவு செய்வது, மறு சுழற்சி செய்து தான் செவ்வாயில் வாழ முடியும். பூமியில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த செயற்கை செவ்வாய் குடியிருப்பிலும் இதே போல தான் வளங்களை பயன்படுத்த வேண்டும். எந்தெந்த வகையில் மறுசுழற்சி ஏற்படுத்தி வளங்களை சிக்கனம் செய்யலாம் என்பது இந்த ஆய்வின் வேறு ஒரு நோக்கம்.

(புதுமை தொடரும்)

- கட்டுரையாளர்: அறிவியல் எழுத்தாளர், ‘விஞ்ஞான் பிரச்சார்' நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி; தொடர்புக்கு: tvv123@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in