பிடிஎஃப் கலாச்சாரம்: தற்காலிகத் தீர்வு, நிரந்தர பாதிப்பு

பிடிஎஃப் கலாச்சாரம்: தற்காலிகத் தீர்வு, நிரந்தர பாதிப்பு
Updated on
2 min read

இந்தியக் கல்வி முறை முக்கியமானதொரு சந்திப்பில் இன்று நிற்கிறது. ஒரு காலத்தில் நூலகங்களுக்குச் சென்று, தடிமனான நூல்களை ஆழமாக வாசித்து, குறிப்பெடுத்துப் படித்த காலம் மறைந்துவருகிறது. ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள் வழங்கும் சில பக்க ‘பிடிஎஃப்’ (PDF) கோப்புகளே மாணவர்களின் ஒட்டுமொத்த அறிவாக மாறிப்போயுள்ளன.

பாடத்தின் முழுமையான பின்னணியை மாணவர்கள் புரிந்து கொள்வதைவிட, தேர்வில் கேட்கப் படக்கூடிய கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லும் வகையில் இந்தத் தொகுப்புகள் அமைகின்றன. இந்தக் ‘குறுக்குவழி' கல்விமுறை மாணவர்களின் சிந்திக்கும் திறனை மழுங்க வைப்பதோடு, இந்தியாவின் எதிர்கால அறிவுசார் வளர்ச்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இதன் விளைவுகளை உற்றுநோக்க வேண்டிய தருணம் இது.

மனப்பாடக் கல்வி

சுருக்கமான தகவல்களை மட்டும் மனப்பாடம் செய்யும்படி தயாரிக்கப் படும் ‘பிடிஎஃப்’ குறிப்புகள். மாணவர்களின் ஆழமான புரிதலைத் தடுக்கின்றன. அயல்நாடுகளில் பரிந்துரைக்கப்பட்ட பாடப்புத்தகங்களைத் தாண்டி குறிப்பிட்ட பாடம் தொடர்பாக வெளிவரும் கட்டுரைகள், சிறப்பு இதழ்கள், ஆராய்ச்சி சிந்தனைகளைப் படிக்க வைக்கிறார்கள்.

படித்த விஷயங்களை வகுப்பறையில் பேசவும் விவாதிக்கவும் ஊக்கப்படுத்துகி றார்கள். இதை விடுத்து வெறும் மனப் பாடம் செய்யும்படி மாணவர்களைப் பழக்கப்படுத்தினால் அறிவு, ஆற்றல் இருந்தும் அதனை வெளிப்படுத்த முடியாமல் தோல்வி அடைகிறார்கள் அல்லது பின்னாளில் குறைந்த தகுதிக்கான பணிகளில் சேர்ந்து அவதிப்படுகிறார்கள்.

பாடப்புத்தகங்களை வாசிக்கும் போது கிடைக்கும் கூடுதல் தகவல்கள், வரலாற்றுப் பின்னணி, வெவ்வேறு கோணத்திலான விளக்கங்கள் மாணவர்களுக்கு பிடிஎஃப் கலாச் சாரத்தில் கிடைப்பதில்லை.

மதிப்பெண் மட்டுமே இலக்கு

கல்வி என்பது அறிவைப் பெறுவ தற்காக அல்லாமல், வெறும் மதிப் பெண்களைப் பெறுவதற்காக மட்டுமே என்கிற நிலையை இது உருவாக்குகிறது. ஒரு பாடத்தைப் பற்றி விரிவாகப் படிக்காமல் சுருக்கமான குறிப்புகளை மட்டும் படிக்கும் போது, மாணவர்களுக்கு அந்தத் துறை சார்ந்த 'வெளியுலகத் தொடர்புகள்' கிடைப்பதில்லை.

உலகளாவிய மாற்றங்கள், புதிய கண்டுபிடிப்புகள், அந்தப் பாடத்தின் நடைமுறைப் பயன்பாடு குறித்த தேடல் மாணவர் களிடம் அற்றுப்போகிறது. இது ஒரு குறுகிய வட்டத்துக்குள் மாணவர்களை முடக்கிவிடுகிறது. இதிலிருந்து விடுபடும் வழிகளையும் தேவையான மாற்றங்களையும் பார்ப்போம்:

எதிர்காலக் கல்வி

உலகத்தோடு இந்தியா போட்டிப் போட வேண்டுமானால், நமது கல்வி முறை பிடிஎஃப் சுவர்களுக்கு வெளியே வர வேண்டும். வெறும் தகவல்களைச் சேமிப்பதாக இல்லாமல், தகவல்களைப் பகுப்பாய்வு செய்வதாகக் கல்வி மாற வேண்டும்.

​ஏஐ பங்கு

செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்தை வெறும் விடை களைத் தேடப் பயன்படுத்தாமல், ஒரு கருத்தைப் பல பரிமாணங்களில் புரிந்து கொள்ளப் பயன்படுத்த வேண்டும். தரவு அறிவியல், குவாண்டம் கம்ப்யூட்டிங், ரோபாட்டிக்ஸ் போன்ற முன்னணித் தொழில்நுட்பத் துறைகளை தொடக்கக் கல்வியில் இருந்தே பாடப்புத்த கங்களோடு இணைக்க வேண்டும்.

ஆராய்ச்சி சார்ந்த கல்வி

சொந்தமாகக் குறிப்புகளை எடுக்க வும், இணையதளங்கள், நூலகங்களில் தரவுகளைத் தேடவும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

தேர்வு முறையில் மாற்றம்

பாடப்புத்தகத்தில் உள்ளதை அப்படியே எழுதும் மாணவர்களுக்குப் பதில், ஒரு சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில் விடையளிக்கும் மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

ஆசிரியர்களின் பங்கு, பாடத்திட்ட மேம்பாடு

வெறும் 'நோட்ஸ்' வழங்குபவர் களாக இல்லாமல், மாணவர்களின் தேடல் ஆர்வத்தைத் தூண்டும் வழிகாட்டிகளாக ஆசிரியர்கள் மாற வேண்டும். எப்படிச் சிந்திப்பது எனச் சொல்லித் தருவதே கல்வி. எதைச் சிந்திக்க வேண்டும் என்று சொல்லித் தருவது கல்வி அல்ல.

பாடத்திட்டங்கள் ஆண்டுதோறும் நவீனத் தொழில்நுட்பங் களுக்கு ஏற்ப‌, வணிகம்-தொழில் நிறுவனங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும்படி, அந்தத் துறையின் இன்றைய நிலை புரிந்து கொள்ளும் வகையிலும் புதுப்பிக்கப்பட வேண்டும்.

வெறும் காகிதம் அல்ல பட்டம்; ஒரு மனிதரின் தகுதியைத் தீர்மானிக் கும் அங்கீகாரம் அது. ‘பிடிஎஃப்’ குறிப்புகளை மட்டும் படித்துப் பெறும் பட்டங்கள், ஒரு மாணவருக்கு சில வேலைகளைப் பெற்றுத் தரலாம்.

ஆனால், ஒருபோதும் ஒரு சிறந்த சிந்தனை யாளரையோ, கண்டுபிடிப்பாளரையோ உருவாக்காது. இந்தியா ஓர் ‘அறிவு வல்லரசாக' மாற வேண்டுமானால், குறுகியகாலத் தீர்வுகளைத் தவிர்த்து, பரந்த, ஆழமான கல்விமுறையைத் தழுவ வேண்டும். அப்போதுதான் எதிர்கால இந்தியாவின் தூண்களாக விளங்கும் மாணவர்கள் உலக அரங்கில் ஜொலிக்க முடியும்.

- கட்டுரையாளர்: எஸ்.எஸ்.ஜவஹர் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி, தமிழக அரசின் முன்னாள் முதன்மைச் செயலர்; ssjawahar2000@gmail.com

பிடிஎஃப் கலாச்சாரம்: தற்காலிகத் தீர்வு, நிரந்தர பாதிப்பு
நிச்சயமற்ற கொள்கையே நிச்சயமானது | அணு முதல் அண்டவெளி வரை 10

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in