

புதிய கல்வியாண்டை முன்னிட்டு, பள்ளிகளும் கல்லூரிகளும் மீண்டும் மாணவர்களை வரவேற்கத்தயாராகின்றன. வழக்கமாக இந்த நேரத்தில் மாணவர் சேர்க்கை, வகுப்பு அட்டவணைத் தயாரிப்பு, கல்வி நடவடிக்கைகள் மீது அதிகக்கவனம் செலுத்தப்படுகிறது.
இவற்றுக்கு அப்பால் பெற்றோர், ஆசிரியர்கள், சமூகம் கூட்டாக இணைந்து இளம் தலைமுறையை வழிநடத்தும் தங்களது பொறுப்புகளை மறு பரிசீலனை செய்யவேண்டிய தருணம் இது.
இன்றைய மாணவர்கள் ஜென் இசட் அல்லது ஜென் ஆல்பா தலைமுறையைச் சேர்ந்தவர்கள். சமூக ஊடகங்கள், இணைய உலகின் தாக்கத்துடன் வளர்பவர்கள். தொழில்நுட்பம், உலக ளாவிய அறிவு ஆகியவற்றை எளிதில் அணுகும் வாய்ப்பு இவர்களுக்கு அதிகம். அதேநேரத்தில் ஒழுக்கம், கவனக்குவிப்பு, சமூகப் பொறுப்புணர்வு போன்ற மதிப்புகளை வளர்ப்பதில் புதிய சவால்களை டிஜிட்டல் யுகம் இவர்களுக்கு உருவாக்கியுள்ளது.
இரு தரப்பு, இரு தலைமுறை
பல கல்வி நிறுவனங்களில் மாணவர் களின் நடத்தை, வாழ்க்கை முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஆசிரி யர்கள் கவனித்து வருகின்றனர். முந்தைய தலைமுறையினரைக் காட்டிலும் இன்றைய மாணவர்கள் தன்னம்பிக்கை, வெளிப்பாட்டுத் திறனுடன் உள்ளனர். அதேநேரம் ஆசிரியர்களுக்கான மரியாதையும் வகுப்பறை ஒழுக்கமும் சற்றே குறைந்துள்ளதாகக் கல்வி யாளர்கள் உணர்கின்றனர்.
ஆசிரியர்களும் வெவ்வேறு தலை முறைகளைச் சேர்ந்தவர்களாக உள்ள னர். பல ஆண்டுகளாகக் கற்பித்தல் அனுபவமிக்கவர்கள், ஆசிரியர்களை மாணவர்கள் மரியாதையுடன் அணுகிய காலத்தை நினைவுகூர்கின்றனர்.
அப்போது ஆசிரியர்கள் பாடம் கற்பிப்பவர்களாக மட்டுமல்லாமல், மாணவர்களின் நற்பண்புகளையும் வாழ்க்கை மதிப்புகளையும் உருவாக்கும் வழிகாட்டிகளாகவும் விளங்கினர். மறுபக்கம், இளம் தலைமுறையைச் சேர்ந்த புத்தாயிர ஆசிரியர்கள், இன் றைய மாணவர்களுடன் எளிதில் தொடர்புகொள்ளக்கூடியவர்களாக இருக்கின்றனர்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அவர்களின் திறமை, கலந்துரையாடல் முறை கற்பித்தல், மாணவர் மையப்படுத்திய அணுகுமுறை ஆகியவை மாண
வர்களுடன் நல்ல புரிதலை உருவாக்கு கின்றன. மூத்த ஆசிரியர்களின் அனுபவ மும் இளம் ஆசிரியர்களின் புதுமையும் இணைந்தால் மாணவர்களுக்குச் சம நிலை வாய்ந்த கல்விச் சூழல் உருவாகும்.
திருப்புமுனைக் காலம்
ஆசிரியர்கள் இத்தகைய மாற்றங்களுக்குத் தங்களை உட்படுத்திக் கொள்கின்றனர். இதனுடன் இணைந்த முக்கியமான மற்றொரு அம்சம் பெற்றோரின் பங்கு. பெற்றோர் பலர், பிளஸ் 2 முடித்துக் கல்லூரியில் சேரும் வயதில் குழந்தைகள் தங்களது வாழ்க்கையை தாங்களே பொறுப்புடன் நடத்தக்கூடியவர்கள் எனக் கருதுகின்றனர்.
உண்மையில், பள்ளியிலிருந்து கல்லூரி வாழ்க்கைக்குச் செல்லும் இந்தக் கட்டம் வழிகாட்டுதல் தேவைப்படும் காலமாகும். இந்த வயதிலும் மாணவர் களுக்குப் பெற்றோரின் கவனமும் உணர்வுரீதியிலான ஆதரவும் அவசியம். மாணவர்கள் நாள்தோறும் பல மணி நேரம் டிஜிட்டல் தளங்களில் செலவிடுகின்றனர்.
தொழில்நுட்பம் கல்விக்குப் பயனுள்ளதாக இருந்தாலும் அளவுக்கு மீறிய பயன்பாடு கவனச்சிதறலையும் படிப்பில் விருப்பமின்மையையும் ஏற்படுத்தக்கூடும். மேலும் இன்றைய இளைஞர்கள் பலர் கைச்செலவுக்கு அதிகப் பணம், சொந்தமாக இருசக்கர வாகனம், அதிக சுதந்திரத்தை அனுபவிக் கின்றனர்.
சரியான வழிகாட்டுதல் இல்லையெனில் இந்தச் சுதந்திரம் கல்வி இலக்கிலிருந்து அவர்களைத் தடம்புரள வைக்கும் அபாயம் உள்ளது. அதேபோல் குடும்ப நிகழ்வுகள், உள்ளூர் விழாக்கள், சமூக நிகழ்ச்சிகளில் இளைஞர்கள் பங்கேற்பது அருகிவருகிறது.
இத்தகைய சமூக அனுபவங்களே பொறுப்பு, மனிதாபிமானம், சமூக உணர்வு போன்றவற்றை வளர்க்க உதவு கின்றன. எனவே, புதிய கல்வியாண்டு தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள இந்நேரத்தில், கல்வி என்பது பள்ளி அல்லது கல்லூரி மட்டும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு அல்ல என்பதை உணர வேண்டும்.
குடும்பம், ஆசிரியர்கள், சமூகம் இணைந்து செயல்பட்டால் மட்டுமே இளம் தலைமுறையைச் சரியான பாதையில் வழிநடத்த முடியும். ஒழுக்கம், அறிவு, சமூகப் பொறுப்புணர்வு கொண்ட தலை முறையை உருவாக்குவதற்கான நம் ஒற்றுமையான முயற்சியின் தொடக்க மாகவும் புதிய கல்வியாண்டு இருக்க வேண்டும். பெற்றோர், ஆசிரியர்கள், சமூகம் ஒன்றிணைந்து செயல்பட்டால் டிஜிட்டல் காலத்தின் சவால்களை எதிர்கால முன்னேற்றமாக மாற்ற முடியும்.
பெற்றோருக்கான விழிப்புணர்வு
* குழந்தைகள் கல்லூரியில் சேர்ந்த பின்னரும் அவர்களுடன் நேரம் செல விட்டு உரையாட வேண்டும்.
* டிஜிட்டல் கருவிகளை அவர்கள் பொறுப்புடன் பயன்படுத்துகிறார்களா என்பதைக் கவனிக்க வேண்டும்.
* குடும்ப, பண்பாட்டு, சமூக நிகழ்வு களில் குழந்தைகள் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும்.
* கல்வி இலக்குகள், எதிர்காலத் திட்டங்கள் குறித்துத் தொடர்ந்து குழந்தை களுடன் உரையாட வேண்டும்.
- கட்டுரையாளர்: பி.ரவிச்சந்திரன், இணைப் பேராசிரியர், தலைவர், பொருளாதாரத் துறை, ஜி.டி.என். கலைக்கல்லூரி, திண்டுக்கல்; gtnravi@gmail.com