

கோவை: பள்ளிக்கல்வித் துறை சார்பில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ‘கல்லூரிக் கனவு’ களப் பயணத்தை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கோவையில் தொடங்கிவைத்தார்.
கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: பள்ளி படிப்பு முடித்துவிட்டு கல்லூரியில் சேரும் மாணவர்களின் விகிதம் 52 சதவீதம் எட்டியுள்ளது. அதை 100 சதவீதமாக உயர்த்த பள்ளிக் கல்வித் துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
மாணவச் செல்வங்கள், இளை ஞர்களின் எதிர்கால நலனை கருத்தில்கொண்டு, அரசு இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதை மாணவ, மாணவிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் 500 கல்லூரிகளுக்கு 31,230 மாணவ, மாணவிகளை கள பயணம் மேற்கொள்ள அழைத்து செல்லவுள்ளனர். 100 சதவீத உயர்கல்வியை அடையும் வரை இத்திட்டம் தொடரும். பன்னிரெண்டாம் வகுப்புக்கு பிறகு நாம் என்ன தேர்வு செய்கிறோமோ, அதை நோக்கி தான் நம் வாழ்க்கை பயணம் அமையும்.
பெற்றோர் தம் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிடாதீர்கள். ஒவ்வொரு மாணவர்களுக்குள்ளேயும் ஒரு திறமை இருக்கும். அதை கண்டறிந்து, ஊக்கப்படுத்தினால் நிச்சயமாக பிற்காலத்தில் உயர்ந்த நிலையை உங்கள் குழந்தைகள் அடைவார்கள்.
ஆசிரியர்களும், பெற்றோரும் இணைந்து செயல்பட்டு மாணவர்களின் எதிர்காலத்துக்கு ஊன்றுகோளாக இருக்க வேண்டும். படிப்பு மட்டும் தான் நம்முடன் இறுதி வரை வரும். மற்றவை எல்லாம் நிலையானது அல்ல. விடாமுயற்சியோடும், ஆர்வத்தோடும் படித்தால் வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பொது நூலக இயக்குநர் க.இளம்பகவத், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி, கல்லூரி கல்வி இணை இயக்குநர் கலைச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.