காஞ்சிபுரம் திருக்காலிமேடு அரசு உயர்நிலைப்பள்ளிக்கு நிலம் தேர்வு பணி தாமதம்: நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு கோரிக்கை

காஞ்சிபுரம் திருக்காலிமேடு அரசு உயர்நிலைப்பள்ளிக்கு நிலம் தேர்வு பணி தாமதம்: நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு கோரிக்கை

Published on

காஞ்சிபுரம்: திருக்காலிமேடு அரசு உயர்நிலைப் பள்ளிக்கு வகுப்பறை கட்டிடம் அமைக்க நிலம் தேர்வு செய்து வழங்குவதில், வருவாய்த்துறையினர் தொடர்ந்து தாமதமாக செயல்படுவதால், மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை மூலம் நிலம் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் நகராட்சியின் 22-வது வார்டு திருக்காலிமேடு பகுதியில் செயல்பட்டு வந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கடந்த 2007ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, பழைய கட்டிடங்களில் தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. மேலும், புதிய உயர்நிலைப் பள்ளிக்கு அதேப்பகுதியில் உள்ள சின்ன வேப்பங்குளத்தின் கரையில் இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் அமைக்கப்பட்டன.

அடிப்படை வசதி இல்லை: இந்த பள்ளியில், தற்போது 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், உயர்நிலைப் பள்ளி கட்டிடங்கள் குளத்தின் கரையில் கட்டப்பட்டுள்ளதால் விரிவுப்படுத்த முடியாமல் இட நெருக்கடியுடன் இப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதனால், மாணவர்களுக்கான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது.

இதனால், பள்ளியின் எதிரே மஞ்சள் நீர் கால்வாயையொட்டி ஆக்கிரமிப்பில் உள்ள அ்ரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு பள்ளி கட்டிடம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உள்ளூர் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு மாவட்ட வருவாய் அலுவலர் பள்ளிக்கு நிலம் தேர்வு செய்வது தொடர்பாக, அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், மஞ்சள் நீர் கால்வாய் அருகேயுள்ள கோயில் நிலம் தேர்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்றன. ஆனால், பல்வேறு சிக்கல்களால் அந்நிலத்தை தேர்வு செய்யும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து இடநெருக்கடியில் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது திருக்காலிமேடு குறுக்கு கவரைத்தெரு பகுதியில் சுமார் 60 சென்ட் அனாதினம் நிலம் கண்டறியப்பட்டு, அந்நிலத்தை பள்ளிக்கு ஒதுக்க வேண்டும் எனகல்வித்துறை சார்பில் வருவாய்த்துறைக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்நிலத்தை தேர்வு செய்யும் பணிகளையும் வருவாய்த்துறை தொடர்ந்து தாமதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

அதனால், பள்ளி மாணவர்களின் நலன் கருதி மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு நிலம் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, வருவாய்த்துறை அதிகாரிகள் கூறும்போது, "திருக்காலிமேடு உயர்நிலைப் பள்ளிக்கு நிலம் தேர்வு தொடர்பான கடிதம் வரப்பெற்றுள்ளது. விரைவில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in