

கோவை: கல்வி நிறுவனங்களுடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நடத்திய ராக்கெட் அறிவியல் திட்டத்தின்கீழ் ரஷ்யா செல்வதற்கான 3-வது கட்டத்துக்கு அரசு பள்ளி மாணவர்கள் 130 பேர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
ஏவுகணை அறிவியல் குறித்து அரசு பள்ளி மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் கடந்த ஆண்டு ஜனவரி 26 முதல் பிப்ரவரி 9-ம் தேதி வரை 15 நாட்கள் இணையவழியில் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் 56 அரசு பள்ளிகளைச் சேர்ந்த 500 மா்ணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த பயிற்சியை பிரமோஸ் ஏவுகணை திட்ட முன்னாள் விஞ்ஞானி சிவதாணு பிள்ளை தொடங்கிவைத்தார்.
இந்த பயிற்சி வகுப்பின் முதல்நிலையில் பங்கேற்ற 500 மாணவர்களின் ஆர்வம், தொடர் பங்கேற்பு, கேட்கும் திறன் மற்றும் இணைய வழித் தேர்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இரண்டாம் நிலைக்கு 250 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதிலிருந்து மூன்றாம் கட்டத்துக்கு 130 மாணவர்களை தேர்வு செய்யும் போட்டி கோவை அரசூர் கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் சனிக்கிழமை நடை பெற்றது.
இதில், மாணவர்கள் தனித்தனி குழுவாக இணைந்து ராக்கெட் மாடல் களை காட்சிப்படுத்தி, அவற்றுக்கு விளக்கம் அளித்தனர். இதிலிருந்து சுமார் 60 பேர் 4-வது கட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டு இறுதியாக 20 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அவ்வாறு தேர்வு செய்யப்படும் 20 மாணவர்கள் மற்றும் 5 ஆசிரியர்களை ரஷ்யாவின் ஏவுகணை அறிவியல் தளத்தை காண்பதற்கான செலவை அரசு ஏற்றுக்கொள்ளும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்கெனவே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் விஞ்ஞானி சிவதாணுபிள்ளை சென்னையில் இருந்தவாறு காணொலி காட்சி வாயிலாக பேசினார் . அப்போது அவர் ‘‘இறுதிகட்டத்தில் யாரைவிட்டு, யாரை அழைத்துச் செல்வதென்று தெரியவில்லை" என்று குறிப்பிட்டார்.
இதையடுத்து, கூடுதலாக 20 மாணவர்கள் ரஷ்யா சென்றுவருவதற்கான செலவை ஏற்றுக்கொள்வதாக அக்னி ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கே.தங்கவேலு அறிவித்தார். இந்நிகழ்ச்சிக்கு அகத்தியர் அறக்கட்டளை, கேபிஆர் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, கலைஞர் பொறியில் தொழில்நுட்பக் கல்லூரி, இன்ஸ்டிடியூஷன்ஸ் ஆஃப்இன்ஜினியர்ஸ் ஆகியோர் உறுதுணையாக உள்ளனர். ‘இந்து தமிழ் திசை’ மீடியா பார்ட்னராக செயல்படுகிறது.