செயற்கைக்கோள் பணியில் பழங்குடியின மாணவர்கள்: இஸ்ரோவில் சிறப்பு பயிற்சி பெற்றனர்

நீலகிரி மாவட்டத்திலிருந்து பெங்களுர் இஸ்ரோ-வில் பயிற்சி பெற்ற பழங்குடியின மாணவர்களை மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் வாழ்த்தினார்.
நீலகிரி மாவட்டத்திலிருந்து பெங்களுர் இஸ்ரோ-வில் பயிற்சி பெற்ற பழங்குடியின மாணவர்களை மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் வாழ்த்தினார்.
Updated on
1 min read

உதகை: இந்திய விண்வெளி ஆய்வு மைய மான இஸ்ரோவில் நடைபெறும் 4 நாள் பயிற்சி முகாமில் நீலகிரியைச் சேர்ந்த பழங்குடி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் வாழ்த்து தெரிவித்தார். இந்தியச் சுதந்திரத்தின் 75-வது ஆண்டை போற்றும் வகையில் 75 செயற்கைக்கோள்களை மாணவர்கள் மூலம் தயாரித்து விண்ணில் ஏவஇஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இம்முயற்சியில் நாடு முழுவதுமிருந்து மாணவர்கள் தங்களின் பங்களிப்பைச் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் ‘அகஸ்தியர்' என்ற செயற்கைக்கோள் அனுப்பப்பட உள்ளது. இதற்கான தயாரிப்பு பணியில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 82 மாணவ, மாணவிகள் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில்5 பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள பழங்குடி குழந்தைகள் தொண்டு நிறுவனத்தின் மூலம் இந்த வாய்ப்பை பெற்றனர். அத்தொண்டு நிறுவனத்தினர் பலபள்ளிகளுக்குச் சென்று மாணவர்களை தேர்வு செய்தனர். அதன்படி, கரிக்கையூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் ஜி.ராஜன், ரேவதி, கெங்காரை அரசு உயர்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவி பி.மஞ்சுளா,9-ம் வகுப்பு மாணவர் ஏ.சரவணன்,கீழ்கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவர் எம்.சரவணன் ஆகியோர் செயற்கைக்கோள் குறித்து ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஆன்லைன் பயிற்சி வாயிலாக அறிந்துகொண்டனர். இந்நிலையில், பெங்களூரிலுள்ள இஸ்ரோ வளாகத்தில் நடைபெற உள்ள 4 நாள் சிறப்புப்பயிற்சி முகாமில் அவர்கள் பங்கேற்றனர்.

இதுகுறித்து அம்மாணவர்கள் கூறும்போது, ‘‘எங்களுக்குக் கிடைத்தபெரிய வாய்ப்பை நினைத்து பெருமிதம் கொள்கிறோம்” என்றனர். கரிக்கையூர் பழங்குடியின பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திர பாண்டியன் கூறுகையில், ‘‘செயற்கைக்கோள் என்றால் என்ன?, அது எப்படிவிண்ணில் செலுத்தப்படுகிறது? அதன் செயல்பாடுகள் என்ன?, அதன் மூலம் நமக்கு ஏற்படும் பயன்கள் என்ன? என்பன உள்ளிட்ட தகவல்களை இந்த மாணவர்கள் அறிந்து வருகின்றனர். இந்த பயிற்சி முகாம் அவர்களின் வாழ்வில் திருப்புமுனையாக அமையும். நாளை இவர்களே விண்வெளி விஞ்ஞானிகளாகவும் வாய்ப்பு இருக்கிறது’’ என்று நம்பிக்கை தெரிவித்தார். இஸ்ரோவில் சிறப்பு பயிற்சி பெற்ற 5 மாணவ, மாணவிகளுக்கும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் வாழ்த்து தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in