

புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்று பள்ளி மாணவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட கல்வி அதிகாரி எஸ்.ரமேஷ் அறிவுரை வழங்கினார்.
எஸ்ஆர்எப் அறக்கட்டளை சார்பில் கேப்ஜெமினி டிங்கர் குறியீட்டு திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான 2 நாள் தொழில்நுட்ப பயிற்சி முகாம் தாம்பரத்தை அடுத்த கூடுவாஞ்சேரி நந்திவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இந்த முகாமில் 22 ஆசிரியர்கள், 39 மாணவர்கள் பங்கேற்றனர். மாவட்ட கல்வி அதிகாரி எஸ்.ரமேஷ் பயிற்சியை தொடங்கிவைத்தார். அவர் பேசும்போது, "மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
இந்த 2 நாள் முகாமில், சென்சார்கள், எலக்ட்ரானிக்ஸ், ஆர்டினோ மற்றும் ஆர்டினோ சிமுலேசன் டிங்கர் கேட், ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பள்ளியின் தலைமையாசிரியர் பிரபாகர், உதவி தலைமையாசிரியர், என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணித கல்வியின் நன்மைகளை எடுத்துரைத்தனர்.
பயிற்சி தொடக்கவிழா நிகழ்ச்சியில் கேப்ஜெமினி துணை தலைவர் ஆலன் கில்பர்ட், நிர்வாக இயக்குநர் சதீஷ் கலன், தமிழ்நாடு இயக்குநர் கன்னியப்பன், எஸ்ஆர்எப் ஒருங்கிணைப்பாளர் அபிஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.