

திருப்பூர்: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உயர்கல்வி பயிற்சிகளை அதிகப்படுத்த வேண்டும் என்று சுவீடன் அறிவியல் ஆராய்ச்சியாளர் விஜய் அசோகன் வலியுறுத்தினார்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழக மாணவ, மாணவிகளின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு ஊக்குவிக்கவும், நெறிப்படுத்தவும், தமிழக அரசால்‘நான் முதல்வன்’ திட்டம் தொடங் கப்பட்டுள்ளது.
இதையொட்டி, மாணவர்களை படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல் பயிற்சி திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடந்தது. இதில் சுவீடனை சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சியாளர் விஜய் அசோகன் பங்கேற்று பேசும்போது கூறியதாவது:
நான் முதல்வன் திட்டம்
தமிழக வளர்ச்சியில் பள்ளிக் கல்வியும், கல்லூரிக் கல்வியும் இணைந்தே இருந்துள்ளன. தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கும் ‘நான் முதல்வன்’ திட்டம் தமிழக கல்வி வளர்ச்சி நிலையின் அடுத்த நிலையாகும்.
பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி பயிற்சிகளை அதிகப்படுத்தி, தொடர்ந்தும் நவீன தொழில்நுட்பம் சார்ந்த அறிவூட்டல்களை வழங்கும்போது அவர்கள் மென்மேலும் வளர்ச்சி பெறுவர். தேர்வுகள், மதிப்பெண்களை நோக்கி மட்டும் வாழ்வை முடிவு செய்யாதீர்கள். மதிப்பெண்கள் நிரந்தரமானவை அல்ல, உங்களது அறிவு, நிரந்தரமானது என்பதை உணருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவிகள் கலந்துரையாடல்
வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் உள்ள உயர் படிப்புகள், உலகளாவிய வேலைவாய்ப்புகள், தாய் மொழியில் கல்வியறிவு பெற வேண்டியதன் அவசியம், கல்வி உதவித் தொகை, நீட் தேர்வை எதிர்கொள்வது எப்படி என்பன குறித்த பல்வேறு கேள்விகளை மாணவிகள் கேட்டு விளக்கம் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் எல். அண்ணாதுரை, கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தி உட்பட பலர் பேசினர்.