

விழுப்புரம்: காகித மடிப்பு மூலம் நுண்ணோக்கி செய்வது குறித்து விழுப்புரத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டது.
விழுப்புரம் தெய்வாணை அம்மாள் மகளிர் கல்லூரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காகித மடிப்பு மூலம் நுண்ணோக்கி செய்வது ( FOLDSCOPE) குறித்த ஒருநாள் இலவச பயிற்சி நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கோ.கிருஷ்ணபிரியா அறிவுறுத்தலின் பேரில் காணை ஒன்றியம் காங்கியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இயங்கி வரும் சார்லஸ் டார்வின் அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் பி.மரியஜோசப் ஏற்பாடு செய்த இந்த பயிற்சியை மாவட்ட உதவி திட்ட அதிகாரி கே.தனவேல், தெய்வாணை அம்மாள் மகளிர் கல்லூரியின் முதல்வர் எஸ்.அகிலா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
காகித மடிப்பு மூலம் நுண்ணோக்கி மற்றும் தொலைநோக்கி செய்வது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் அரசு பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவிகளும் பங்கேற்றனர். பயிற்சியின் முடிவில், அவர்களுக்கு பயிற்சி சான்றிதழும், காகித மடிப்பு நுண்ணோக்கியும், தொலைநோக்கியும் இலவசமாக வழங்கப்பட்டது.