

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி பள்ளி ஸ்மார்ட் வகுப்பறையில், ஏசி இயந்திரம் வெடித்ததால், தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஒரு லட்சம் ரூபாய் மதிப் புள்ள பொருட்கள் சேதமாகின.
ஈரோடு, கருங்கல்பாளையம் திருநகர் காலனியில் உள்ள மாநகராட்சி நடு நிலைப் பள்ளியில், 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 10 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
பள்ளி வளாகத்தில் 10 வகுப்பறைகள் உள்ளன. இதில், குளிர்சாதன வசதி (ஏ.சி) கொண்ட ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையும் ஒன்றாகும். இந்த வகுப்பறையில், புரொஜெக்டர், டிஜிட்டல் திரை உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளன.
இப்பள்ளியில், ‘இல்லம் தேடி கல்வி திட்டம்’ தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.
செவ்வாய்க்கிழமை பயிற்சி வகுப்பு தொடங்கியதும், ஸ்மார்ட் வகுப்பறையில் உள்ள ஏ.சி.யை இயக்கியபோது, கரும்புகை வெளியேறியது. சிறிதுநேரத்தில் ஏ.சி. வெடித்து சிதறியது.இதனால், ஸ்மார்ட் வகுப்பறையில் உள்ள புரொஜெக்டர், திரை உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருள்கள் தீயில் கருகின. அந்த வகுப்பறை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
இதுகுறித்து தகவலறிந்த, ஈரோடு தீயணைப்புத் துறையினர் பள்ளிக்கு வந்து தீயைக் கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
ஆசிரியர்கள், மாணவர்கள் உடனடியாக வெளியேறியதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கருங்கல்பாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாநகராட்சி கல்வி அதிகாரிகளும் தீயில் சேதமான வகுப்பறையை பார்வையிட்டனர்.