Published : 18 Aug 2022 06:18 AM
Last Updated : 18 Aug 2022 06:18 AM
உடுமலை: நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி உடுமலையில் பள்ளி மாணவ, மாணவிகள் 75 நிமிடத்தில் 75 அறிவியல் பரிசோதனைகளை செய்து சாதனை படைத்தனர்.
சுதந்திர தினத்தையொட்டி, உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் சார்பில் எளிய அறிவியல் பரிசோதனை முகாம் உடுமலை ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். இந்த முகாமில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று, பல்வேறு அறிவியல் பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டனர். அவர்கள் 75 எளிய பரிசோதனைகளை 75 நிமிடங்கள் தொடர்ச்சியாக செய்தனர்.
அறிவியல் என்பது ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விகளை கேட்பது, அத்தகைய கேள்விகளை நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களில் என்னென்ன அறிவியல் கருத்துகள் அடங்கியிருக்கிறது என்பதை பள்ளி மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக அதன் ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் தெரிவித்தார். பழங்குடியின மலைவாழ் பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் கலந்துகொண்டு வெப்ப கடத்தல், காற்றின் எடை உள்ளிட்ட தலைப்புகளில் பரிசோதனைகளை செய்து காட்டினர்.
காற்று, வெப்பம், நீர், காந்தவிசை, நீரின் அடர்த்தி, காற்றின் இழுவிசை, மூலக்கூறுகளுக்கு இடையே உள்ளவிசை, மழையின் அளவை கணக் கிடும் எளிய கருவி, எளிய தீயணைப்பான் கருவி, மடிப்பு நுண்ணோக்கி, மாயக்கண்ணாடி, பந்து கண்ணாடி, எளிய தொலைநோக்கி, நீரின் பி.எச். மதிப்பை கணக்கிடுதல், அமிலமா? காரமா? என்பதை எளிய முறையில் கணக்கிடுதல் என்பது உட்பட 75 அறிவியல் தலைப்புகளில் பரிசோதனைகள் செய்து காண்பிக் கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT