

புதுச்சேரி: மாணவர்களின் தனித்திறமையை கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவுரை வழங்கினார்.
புதுச்சேரி முதலியார்பேட்டை அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பள்ளிக் கல்வித் துறையில் தேசிய அளவில் புதுச்சேரி 4-வதுஇடத்தில் உள்ளது. முதல் மாநிலமாக உருவாக வேண்டும் என்ற உறுதிமொழியை நாம் அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதை மாணவர்கள் உள்வாங்கி படிக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும். தோல்வி அடைந்தவர் என்ற வார்த்தையே கிடையாது. வெற்றி வாய்ப்பை தவறவிட்டவர் என்றுதான் கூற வேண்டும். அனைத்தையும் நேர்மறை சிந்தனையோடு அணுக வேண்டும்.
லட்சியம் இல்லாமல் ஒரு வாழ்க்கை வாழ்ந்தால் அந்த வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை. எதாவது ஒரு லட்சியம் இருக்க வேண்டும். நமது எண்ணங்கள், லட்சியங்கள் உயர்வாக இருக்க வேண்டும்.
எல்லோருக்கும் ஒவ்வொரு தனித்திறமை இருக்கிறது. அந்த வகையில், பெற்றோரும், ஆசிரியர்களும் மாணவர்களின் தனித்திறமையை கண்டறிந்து அதை ஊக்குவித்தால் மாணவர்கள் தலைசிறந்த குடிமகன்களாக வருவார்கள்.
நான் ஜீவானந்தம் அரசு பள்ளியில் படித்தபோது 11-ம் வகுப்பில் தோல்வி அடைந்துவிட்டேன். புதுச்சேரியில் இடம் கிடைக்காமல் தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்தேன். அதன்பிறகு படிப்பை தொடர முடியவில்லை. பிறகு அரசியலுக்கு வந்தேன். இன்று உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சராக வந்துள்ளேன் என்றால், அதற்கு எனது இடைவிடாத உழைப்புதான் காரணம்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.